“அழகான த்ரில்லர் பேய் கதை ‘மெர்லின்”!
ஜேஎஸ்பி பிலிம் ஸ்டூடியோஸ் சார்பில், ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், ஜே.பாலாஜி இணை தயாரிப்பில், வ.கீரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மெர்லின்’.
நட்புக்காக ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் இப்படத்தில், கதாநாயகனாக விஷ்ணுபிரியன், கதாநாயகியாக அஸ்வினி நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ முருகதாஸ், லொள்ளுசபா ஜீவா, சிங்கம்புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீரசந்தானம், வைசாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘மெர்லின்’ படம் குறித்து இயக்குனர் வ.கீரா கூறுகையில், “இது அழகான த்ரில்லர் பேய் கதை. 3 காலகட்டங்களில் நடக்கிற கதை. கதையின் நாயகன் வெற்றி திரைப்பட உதவி இயக்குனர். சென்னையின் ஒண்டுக்குடித்தனங்களில் வசிக்கும் கோடம்பாக்க கனவுலகவாசி. அவனது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம்.
திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு, பவர்ஸ்டார் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் தினேஷிடம் கதைச்சுருக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கதைச்சுருக்கம் கேட்ட தினேஷூக்கு அது பிடித்துப்போகவே, முழுக்கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறிக்கிறார்.
இதற்காக தன் அறையில் கதை எழுத ஆரம்பிக்கிறான் வெற்றி. ஆனால் அறை நண்பர்கள் மற்றும் வெளி நண்பர்களின் தொந்தரவு காரணமாக அவனால் கதை எழுத முடியவில்லை. நண்பர்கள் வருகையை குறைப்பதற்காகவும், கதையை எழுதி முடிப்பதற்காகவும் வெற்றி பல வழிகளில் முயன்று தோற்கிறான். எனவே, நண்பர்களை பயமுறுத்துவதற்காக, தான் இருக்கும் இந்த அறையில் ஒரு பேய் இருப்பதாகவும், அது ஏற்கனவே பல பேரை கொன்றுவிட்டதாகவும் பொய் சொல்லுகிறான். நண்பர்கள் அச்சமடைகிறார்கள்
ஆனால், உண்மையிலேயே அவனை ஒரு பேய் துரத்த ஆரம்பிக்கிறது. புனைந்த கதையே உண்மையாக நடக்கத் துவங்குகிறது. அவனது மனதுக்கும், உண்மைக்குமான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. உண்மையிலேயே பேய் இருக்கிறதா? அந்த பேய் யார்? எதனால் அவனது வாழ்க்கை பல திருப்பங்களாக மாறுகிறது? என்பது விரிவான திரைக்கதை” என்றார் இயக்குனர் வ.கீரா.
ஒளிப்பதிவு- முத்துக்குமரன்
படத்தொகுப்பு – சாமுவேல்
இசை – கணேஷ் ராகவேந்திரா
கலை – ந.கருப்பையா
பாடல்கள் – யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா
சண்டை – ஃபயர் கார்த்தி
நடனம்- சங்கர்
ஊடகத் தொடர்பு – இரா.குமரேசன்