பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/08/0a5w.jpg)
பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது.
நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தியை திரையுலகைச் சேர்ந்த பலர் முதலில் நம்பவில்லை. பின்னர் இச்செய்தி உண்மைதான் என அறிந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
“நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது” என்று கங்கை அமரன் கூறியுள்ளார். “கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் எழுத்து உலகிற்கு மிகப் பெரிய இழப்பு” என்று இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளார். “நா.முத்துக்குமார் மரணம் மிகுந்த வேதனையை தருகிறது” என்று சமுத்திரகனி கூறியுள்ளார்.
“தமிழ் திரையுலகிற்கு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார் நா.முத்துக்குமார்” என்று திரைஉலகினர் கண்ணீர் மலங்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் விஜய், நாசர், பொன்வண்ணன், விவேக், மனோஜ் கே.பாரதி, சசிகுமார், ஜெயம் ரவி, மனோபாலா, சந்தானம், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் வெற்றிமாறன், எஸ்.பி.ஜனநாதன், ராஜு முருகன், சேரன், ராம், தரணி, சீமான், வெங்கட் பிரபு, கவிஞர் வைரமுத்து, பாடலாசிரியர்கள் பா.விஜய், மதன் கார்க்கி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலர் நேரில் சென்று, நா.முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
வாழ்க்கை குறிப்பு
நா.முத்துக்குமார் 1975ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய ‘அழகே அழகே’ பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நா.முத்துக்குமார் – தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர்.