கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது பெறும் ‘லென்ஸ்’ இயக்குனர் பேட்டி!
ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த புதுமுக இயக்குனர் தேர்வு செய்யப்பட்டு, வழங்கப்படும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, இந்த முறை இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. அவர் இயக்கி விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த ‘லென்ஸ்’ படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
வரும் 12ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவிருக்கும் இதற்கான விருது விழாவில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இவ்விருதினை பெறவிருக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகர் பொம்மன் இரானி, இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
‘லென்ஸ்’ படம் குறித்து இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஒரு நடிகனாகும் ஆசையில் தான் நான் சென்னைக்கு வந்தேன். ஆனால் அதில் பிரேக் கிடைக்கவில்லை. எனவே என்னிடம் உள்ள திறமையை நம்பி நான் முதலில் எழுதின ஸ்கிரிப்ட் தான் இந்த ‘லென்ஸ்’ படம்.
“லென்ஸ்’ படம் பத்தி நான் இப்ப ரொம்ப பேசல. ஏன்னா இப்போதைய சமூகத்தில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசும் படம் இது. கம்ப்யூட்டர், இன்டர்நெட், சோஷியல் மீடியாவால் ஆதிக்கம் செலுத்தப்படும் இன்றைய உலகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதையைச் சொல்லும் படம் இது.
“சமீபத்தில் கூட பேஸ்புக்கில் ஒரு பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து போட்டோ வெளியிட்டதால் அந்தப் பெண் இறந்ததாக செய்தி வந்தது. இதுபோல நிறைய செய்திகள் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மறந்து போய்விடுகிறோம். இந்தப்படம் அந்த மாதிரி செய்திகளை மறக்க வைக்காது. எப்பவுமே ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கும். நம்மை இன்னும் பொறுப்புள்ளவர்கள் ஆக்கும்னு நினைக்கிறேன்” என்றார்.