இன்னல் கொடுத்த வில்லன்களுக்கு தொல்லை கொடுக்கும் பூனையின் கதை ‘மியாவ்’!
பொதுவாகவே செல்ல பிராணிகளை வைத்து படம் எடுப்பதில் ஹாலிவுட் சினிமா தான் கைதேர்ந்ததாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவும் அதற்கு இணையாக ஒரு சில படங்களை உலக தரத்தில் உருவாக்கி ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. சிபிராஜின் நடிப்பில் வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம்.
தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து இருக்கும் ‘மியாவ்’ திரைப்படம். இவர் உலகளவில் புகழ் பெற்ற இயக்குனரான சத்யஜித்ரேவின் ‘டார்கெட்’ என்னும் திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக ‘பெர்சியன் கேட்’ எனப்படும் பூனையை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘மியாவ்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி. இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியவர்.
மலையாள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவானோ (அறிமுகம்), ஒளிப்பதிவாளர் போஜன் கே.தினேஷ் (‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’), படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா (‘இறுதிச்சுற்று’) என திறமையான தொழில்நுட்ப கலைஞர்களை இந்த ‘மியாவ்’ படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
“செல்பி’ என பெயரிடப்பட்ட ஒரு சாதுவான பூனையானது, வில்லன்களான நான்கு இளைஞர்கள் ஏற்படுத்தும் இன்னல்களால் வெகுண்டெழுந்து, அவர்களுக்கு தொல்லைகளை கொடுக்கிறது. அது ஏன்… எதற்காக… என்பது தான் கதை. இது காமெடி கலந்த த்ரில்லர் படம்.
“காட்சிகள் யாவும் மிக தத்ரூபமாக அமைய, கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா ஏறக்குறைய 550 இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தி இருக்கிறார். ‘மியாவ்’ படத்தை பார்க்கும் ரசிகர்கள் யாராலும் எது உண்மையான பூனை, எது கிராபிக்ஸ் பூனை என்பதை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் படத்தை உருவாக்கியுள்ளோம்.
“படத்தில் 4 பாடல்கள். இவற்றில் 2 பாடல்கள் பூனையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 பாடல்களும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மற்ற 2 பாடல்களும் இளைஞர்களுக்கு விருந்தாக அமையும்.
கோவை, மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த படம் சமர்ப்பணம்” என்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி.
“மொத்தம் 120 நிமிடம் ஓடக்கூடிய ‘மியாவ்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் பாராட்டுகளை பெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நாய்களை தான் தங்கள் செல்ல பிராணிகளாக அதிகளவில் மக்கள் வளர்த்து வருகின்றனர், ஆனால் ‘மியாவ்’ படத்தை பார்த்தபிறகு அவர்களுக்கு பூனைகள் மீது ஒரு தனி அன்பு ஏற்படும். குழந்தைகள் மட்டுமல்ல, இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லா தரப்பினருக்கும் ஏற்ற திரைப்படமாக எங்கள் ‘மியாவ்’ படம் இருக்கும். இது செப்டம்பரில் திரைக்கு வரும்” என்கிறார் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ்.
ஹீரோவாக செல்ஃபி பூனை, வில்லன்களாக ராஜா, சஞ்சய் மிக்கி, ஹைடன், குமார், கதாநாயகிகளாக ஊர்மிளா காயத்ரி, ஷைனி, குழந்தை நட்சத்திரமாக யுவினா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் டேனியேல், சாய்கோபி, டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பாடல்கள் – விவேக் வேல்முருகன், நவீன் கண்ணன்
நடனம் – ஷெரீப்
கலை – ஆறுசாமி
ஊடகத்தொடர்பு – சுரேஷ் சந்திரா