பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றுகிறார் ஜக்கி வாசுதேவ்: கலெக்டரிடம் புகார்!

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்துவிட்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்துள்ளார். நாங்கள் குடும்பத்தோடு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்தோம்.

அப்போது எனது இரு மகள்களை மூளைச் சலவை செய்த ஜக்கி வாசுதேவ், அவர்களை நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திருமணம் நடக்காமல் இருக்க இருவருக்கும் மொட்டை அடித்து விட்டார். மேலும், அவர்களுக்கு காவி உடைகளை அணிவித்து சாமியாராக்கி ஆசிரமத்திலேயே தங்க வைத்துள்ளார்.

தற்போது எனது மகள்களை பார்க்கக்கூட அனுமதிக்க மறுப்பதுடன், எங்களது சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். இது மட்டுமின்றி ஈஷாவிற்கு வருகின்றவர்களை கவர்வதற்காக எங்களது பெண்களை விற்பனையாளர்கள் போல் பயன்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும், “அங்குள்ளவர்களுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் போதை மருந்து கொடுத்து 30 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஈஷாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுவதால் அக்குழந்தைகள் பெற்றோர்களை பார்க்கும்போது சிரித்துக்கொண்டே இருக்கும். இதனால் குழந்தைகள் கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. மேலும், இங்கு சிறுநீரக திருட்டும் நடைபெற்று வருகிறது. எனவே, எனது இரு மகள்களையும், அங்கு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மீட்டுத்தர வேண்டும்” எனக்கோரி மனு அளித்ததாக தெரிவித்தார்.

இந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜக்கி வாசுதேவ் முன் கை கட்டி, வாய் பொத்தி, பணிந்து கிடக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், அவருக்கு எதிரான புகார் மீது மெய்யாகவே முழு மனதுடன் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா…?

0a4y