‘கபாலி’யை திட்டித் தீர்க்கும் அரைவேக்காடுகள் கவனத்துக்கு…!
உங்கள் வீட்டு பெரியவர்களிடம், தாய்மார்களிடம், “ரஜினிகாந்தின் எந்த படம் பிடிக்கும்?” என்று கேட்டால், சட்டென்று வரும் பதில்கள்: ‘முள்ளும் மலரும், ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பைரவி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கை கொடுக்கும் கை’, ‘பொல்லாதவன்’… இப்படி இந்த லிஸ்டிலிருந்து சொல்வார்கள். ரஜினி என்கிற பெரும் பசியுள்ள நடிகன் பட்டய கிளப்பிய காலமது.
இரண்டு மாமாங்கமாக பசியாறாமல் கிடந்த அந்த நடிகனுக்கு தலைவாழை விருந்து வைத்திருக்கிறார் ரஞ்சித்!
ஒடுக்கப்பட்ட கொத்தடிமை மகனை ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து காப்பாற்றும் தந்தை பற்றிய புத்தகமான MY FATHER BALAIAH வை படித்தபடி, அறுபது வயது சிறைவாசியாக அறிமுகமாகிறார் ரஜினி. முதல் காட்சியிலேயே எந்த விதமான மசாலாத்தனமும் இல்லாமல் நேரே விசயத்துக்கு வந்த ரஞ்சித்க்கு ஸ்பெஷல் பொக்கே. அதை அனுமதித்த ரஜினிக்கும் தான்.
இந்த நேர்மை படத்தின் கடைசி வரை தொடர்கிறது. நூறு பேரை அடிப்பதோ, பன்ச் டயலாக் பேசுவதோ, அநாவசியமான காட்சிகள், காமடி என்கிற பெயரில் மொக்கைகள், ஐட்டம் பாடல்கள்… இப்படி எதுவுமே இல்லாத ரியல் (ரஞ்சித்) சினிமா இது. கதை நாயகனாக ரஜினிகாந்த். தமிழ் சினிமா சரியான பாதையில் செல்கிறது என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்…?
“இவைகளெல்லாம் தேவைப்பட்ட காலம் இருந்தது. ரசனை இருந்தது. ஆனால் இப்பொழுது இதெல்லாம் தேவையில்லை. மக்கள் ரசனை மாறிவிட்டது” என்று ரஜினி உரக்கச் சொல்வது தான் ‘கபாலி’.
வாழ்கையையும், குடும்பத்தையும் தொலைத்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் தலைவன் ஒருவன், அதை மீட்டெடுப்பதே ‘கபாலி’யின் கதை.
படத்தின் பாசிடிவ்ஸ் பற்றி பேசும்முன், படத்தைப் பற்றி வைக்கப்படும் “நியாயமான எதிர்வினைகள்” (படம் பிரம்மாண்டமாக ஆரம்பித்து, பின் தோய்வு அடைகிறது… இது ரஜினி படம் போல் இல்லை) பற்றி முதலில் பார்ப்போம். (அரவேக்காடுகள் வைக்கும் எதிர்வினைகளை இறுதியாக பார்ப்போம் )…
இது முதலில் க்ரைம் த்ரில்லர் படமோ, அல்லது பரபரக்கும் ஆக்ஷன் நாயகன் படமோ அல்ல; வயதான ஒரு தலைவன், தன் குடும்பத்தைத் தேடுவதும், இறுதி நாட்களை அவர்களுடன் வாழ முனைப்பதும், அதை தடுக்கும் வில்லன்களை வீழ்த்த நினைப்பதும் தான் கதை. அதை நிறைய எதார்த்தம், கொஞ்சம் சினிமாத்தனதுடன் ஒரு பூ மலர்வதை விவரிப்பது போல் சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.
“இது ரஜினி படம் போல் இல்லையே” என்று சொல்வோர்க்கு… இதேபோல் ரஜினி நடித்தால் நல்லாயிருக்குமே என்று எத்தனை முறை நாம் நினைத்திருக்கிறோம்? என்னதான் நாம கொண்டாடினாலும், திரும்பத் திரும்ப ஒரே மாதிரி மசாலா படங்கள் தான் ரஜினி தருகிறார் என்கிற சொல் எத்தனை காலமாக இங்கு உள்ளது? எல்லாருடைய வாயையும் ஒரே படத்தில் இப்பொழுது அடைத்தாயிற்று! ஆனால், ரஜினி என்ற காந்தம் துளிகூட தன் சக்தி இழக்கவில்லை. சிறையை விட்டு வெளியே வரும்பொழுது அந்த மிடுக்கில் வரும் வசியம், கடைசி காட்சி வரை தொடர்கிறது.
உதாரணமாக, படத்தில் ரஜினி பேசும் ‘ஒரே’ பன்ச் டயலாக் “மகிழ்ச்சி”. ஆனால் அதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தொனிகளில் நன்றி, கோபம், எச்சரிக்கை, வெற்றி முரசு, கனிவு, கேளிக்கை, அலட்சியம், நக்கல் இப்படி வெவ்வேறு உணர்ச்சி வெளிப்பாடாக அதை சொல்லும் விதம் – ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
ஒருபுறம் எதிரணி ஆட்களை ஒவ்வொருவராக சந்திக்கும் இடங்களில், அந்த பிளாஷ்பாக் காட்சிகளில், ரௌத்திரம் தெறிக்கிறது. ஆனால் மறுபுறம், the reason why the movie is extra special is… to have brought back the Rajini we saw decades ago.. the Rajini we had fallen in love with very first time….
இது வேற லெவல் ரஜினி. ரித்விகா தன் முன் கோபப்படும் பொழுது, தன் மகளை முதன்முதலில் பார்க்கும்பொழுது, மனைவி உயிரோடு இருக்கிறாள் என்று அறியும்பொழுது, மனைவி இருப்பிடம் நெருங்கும் நேரங்களில், அவளை பார்த்த உடன்… தலைவா… இதற்கு தானே இத்தனை நாள் காத்திருந்தோம்…!
ரஞ்சித் இந்திய அளவில் யாரை வேணும்னாலும் நாயகியாக அழைத்திருக்கலாம். ஆனால் ஏன் ராதிகா ஆப்தே? என்கிற கேள்விக்கான சரியான பதில் திரையில். அசத்தியிருக்கிறார்.
ரஜினி திரையில் இருக்கும்பொழுது இன்னொருவர் மீது நம் கண்கள் போவது அரிது. இதில் போகிறது. காரணம் அட்டகத்தி தினேஷ். ஒரு ரசிகன், பாதுகாவலனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை இதைவிட சுவாரஸ்யமாக நடிக்க இயலாது. பாத்திரத்தைப் படைத்த ரஞ்சித்துக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
நாசர், கிஷோர், ஜான் விஜய், தன்சிகா என்று ஒவ்வொருவரும் உணர்ந்து நடித்துள்ளனர். சென்னையில் பாதுகாவலராக வரும் விஷ்வா நல்ல தேர்வு. அருமையான நடிப்பு.
சுந்தர் முரளியின் கேமரா கவனம் ஈர்க்கிறது. கலை, உடைகள், இசை என்று technically அபாரம். குறிப்பாக, சந்தோஷின் பின்னணி இசை
இறுதியாக ரஞ்சித். முதற்க்கண் மலேசிய வாழ்க்கை, வாழ்வாதாரம், அங்கு தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வலிகள் என்று இவ்வளவு டீடைலிங் தந்தமைக்கே hats off .
எடுத்துக்கொண்ட கருவை சிதையாமல் தூக்கி சுமக்கிறார்.
வசனங்கள் கத்தி தீட்டப்பட்ட பேனாவால் எழுதியிருக்கிறார் போலும்.:-
“”பறவையோட குணமே பறக்கிறதுதான்டா. அத பறக்கவிடு. வாழ்வா,சாவான்றத அது முடிவு பண்ணட்டும். உன்னோட கருணை அதோட சாவ விட கொடுமையானது.”
“காந்தி சட்டை போடாமல் இருந்ததிலும், அம்பேத்கர் கோட் சூட் போட்டதிலும் ஒரு அரசியல் இருக்கு!”
சில வசனங்கள் வர்க்கத்தையும், மக்களை சமமாக மதிக்கும் பண்புகளையும், பெண்களின் நிலையை பற்றியும், அனைவருக்குமான விடுதலை பற்றியும் இருப்பது கவனம் ஈர்க்கிறது. பாராட்டுக்கள் ரஞ்சித்.
படத்தில் குறைகள் இல்லையா என்றால்… இருக்கிறது. சில காட்சிகள் நீண்டு செல்கிறது. flashback காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருக்க வேண்டும். வில்லன் டோனி பெரிதாக எடுபடவில்லை. ரஜினி கடைசியில் எதிராளியை வீழ்த்தும் விதம் அவசரமாக எழுதப்பட்டது போல் உள்ளது, இன்னும் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். மெட்ராஸ் படத்தில் நடித்த அத்தனை பேரும் இதில் வருகின்றனர். ரஞ்சித் இதையே தொடராமல் இருப்பது நல்லது. மெட்ராஸ் திரைப்படத்தின் பலமே அது காட்டும் புதிய முகங்கள் தான்…
கடைசியாக, சில அப்ப்ரசின்ட்கள் வைக்கும் எதிர்வினை: ரஞ்சித் சாதி சாயம் பூசியிருக்கிறார்… க்ளாஸ் எடுக்கிறார்… தமிழர்கள் அப்படி ஒன்றும் கஷ்டப்படுவதில்லை… இத்யாதி…
அரவேக்காடுகள் கவனத்திற்கு…
கடைசியாக தமிழர் வாழ்வு, வாழ்வாதாரம், குடியுரிமை, அயல் நாட்டவரிடம் படும் கஷ்டம்… இவைகளை பேசிய படம் எது? காதல் சொல்ல தயங்குவதும், காதலை சொன்னவுடன் கஷ்டப்படுவதும் தான் நாட்டுல இருக்குற முக்கிய பிரச்சனையா?
முதலாளி – தொழிலாளி வேறுபாடு, வர்க்க ரீதியாக இருக்கும் பாகுபாடுகளை கடைசியாக தோலுரிக்கும் விதமாக பேசிய பெரிய நடிகர் படம் எது?
கிஷோர் க்ளைமாக்ஸில் ரஜினியைப் பார்த்து எகத்தாளமாக பேசும் பேச்சில் உண்மை இல்லை என்று யாராவது மறுக்க இயலுமா? இல்லை, நம் நாட்டில் சாதி, வர்க்கம் யாரும் பார்ப்பதில்லையா?
உள்நாட்டில் சாதியின் பெயரில் பாகுபாடு, வெளிநாட்டில் இனத்தின் பெயரில் பாகுபாடு… இது தானே android காலத்திலும் நாம் சந்திக்கும், தூக்கி சுமக்கும் அசிங்கம்! இல்லைனு சொல்ல முடியுமா?
இதை யார் தான் பதிவது?
பதிவு செய்த ரஞ்சித்திற்கும், அதை வழிமொழிந்த ரஜினிக்கும் சமூகத்தின் சார்பாக நன்றி.
நிற்க. பதிந்தவைகள் சில துளிகள் மட்டுமே!
இந்த காரணங்களுக்காகவே கபாலி மிக முக்கியமான படம் ….
அது மட்டுமல்லாமல், ரஜினி இந்த கதையை ஏற்று நடித்தது… has just opened the flood gates for real quality cinema by big actors interwoven with real life people problems …
ரஜினி இத்தகைய படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டுமா? .இல்லை, அவரும் பழைய மசாலாக்களில் மாட்டி, நாமும் மாட்ட வேண்டுமா? என்பது இந்த படத்தின் வெற்றியில் தான் இருக்கிறது. நம் கையில் தான் இருக்கிறது.
ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் ரஜினி – ரஞ்சித்தின் கபாலியை வரவேற்பது நம் கடமை என்றே சொல்ல வேண்டும். இல்லையெனில், மசாலா படங்கள் நம் தலை மீது வாரி வாரி இறைக்கும்!
இதல்லாமல், சில ஸ்கூல் பசங்க விவரமில்லாமல் விமர்சனம் என்று உளறும் விசயங்களை நிறையை தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். நாத்தமடிக்கும்!
அவசியம் திரையில் குடும்பத்துடன் பாருங்கள்… ரஜினி என்கிற நடிகனை காண இரு கண்கள் போதாது!
ஏற்கனவே பார்த்து திருப்தி அடையாதவர்கள், பரப்பரப்புக்களும் கூச்சல்களும் ஓய்ந்தபிறகு படத்தின் காட்சிகளை ஒரு முறை மனதில் அசை போட்டு பாருங்கள். பின்பு நிதானமாக படத்தை மீண்டும் பாருங்கள்… கபாலி ரொம்ப பிடிக்கும்!
கபாலி – ஆளப் பிறந்தவன்… பெரும் மகிழ்ச்சி…!
– ரா.ராஜகோபாலன்