“ரஞ்சித்…! அடக்குனா அடங்குற ஆளா நீ…!” – எவிடன்ஸ் கதிர்
‘கபாலி’ பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது. கொண்டாட வேண்டிய படம். ரஞ்சித் போன்ற நிறைய இளைஞர்கள் வருவார்கள். அதற்கான நம்பிக்கை தெரிகிறது.
ரஞ்சித் மீது பெரிய உளவியல் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை எல்லாம் நாங்கள் கண்டிக்கப்போவது இல்லை. ரஞ்சித்துக்கு ஒன்றே ஒன்று சொல்லுவேன். நம் தலைமுறை பெரியவர்கள் பல கொடுமைகளை அனுபவித்தவர்கள். சாணி பால் கொடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள். பண்ணை அடிமை முறையில் கொல்லப்பட்டவர்கள். கந்தல் துணியை உடுத்தியவர்கள். நமது பிணங்களால் இங்கு அரசியல் பின்னப்பட்டு இருக்கிறது.
ஆக, உன் மீதான வன்மம், சாதி ரீதியான வன்மம். விமர்சனத்தை கேட்டு கொள்ளுங்கள். வன்மத்தை புறம் தள்ளுங்கள். அடக்குனா அடங்கற ஆளா நீ…! கெட்ட வாழ்வு நடத்துறவன், நம்மைப் பார்த்து ‘கெட்ட கனவு’ என்றுதான் சொல்லுவான்.
நீ தீர்க்கதரிசிடா, தம்பி…! ரஜினியை பார்த்து வில்லன் கிஷோர் நிறைய கேள்வி கேட்பார். அதில் ஒரு கேள்வி: “நீ எல்லாம் எங்களை ஆள என்ன தகுதி இருக்கு?” அந்த கேள்வியை உங்களைப் பார்த்து எப்படி கேட்கிறார்கள், பாருங்கள்: “ரஜினியை வைத்து இயக்க என்ன தகுதி இருக்கு?”
நீதிபதிகளுக்கும், ஒடுக்கப்பட்டவனுக்கும் பதில் சொல்லு. வன்மம் பிடிச்சவனுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.
கொஞ்சம் நாள் போகட்டும். மதுரைக்கு வா. கொஞ்சம் மாட்டுக்கறி சாப்பிடுவோம். நிறைய பறை இசை கேட்போம்.
– எவிடன்ஸ் கதிர்
சமூக செயற்பாட்டாளர்