“கபாலி’ நடிப்பை ரஜினி அடுத்த படங்களிலும் தொடர வேண்டும்!”
1990-ல் வந்த படம். அதுவும் இதேதான். A retiring don, who wants to get back to his family, is threatened by a gang wa, for one last time. படம் Godfather 3. இந்த லைனை செய்வதானால், தமிழில் யாரால் செய்ய முடியும்? கமல் மொத்த Godfather படங்களையும் நாயகன் படத்திலேயே முடித்துவிட்டார். வேறு வழியில்லை. பாட்ஷா ரஜினியால் மட்டும்தான் முடியும்.
இப்படியான லைனை ரஞ்சித் ரஜினிக்கு சொன்னதும், அதை அவர் ஒப்புக்கொண்டதும் நம்மை போன்ற(!), என் போன்ற ‘முள்ளும் மலரும்’ காளி விரும்பிகளுக்கு வரப்பிரசாதம்தான். படம் இஸ் எ கம்ப்ளீட் ட்ரீட் ஃபார் தோஸ் ஹூ மிஸ் தெ குட் ஓல்ட் பெர்ஃபார்மர் ரஜினி.
ரஜினி
ரொம்பவும் மெனக்கடாமல், தன் வழக்கமான மசாலா பாணியில் நடித்து, வாழ்க்கையை ஓட்டிக்கொள்ள கூடிய வசதி இருந்தாலும், ரஜினி தேர்ந்தெடுத்திருப்பது ரஞ்சித்தை. கபாலி தன்னை வேறுவிதமாகத்தான் காட்டப்போகிறது என தெரிந்தும், பல தயக்கங்கள் இருந்தும், நேற்றைய சுள்ளான்கள் கூட ஆட்டம் போடும் சினிமாவுக்கே தான் ஆலமாக இருந்தும், ரஞ்சித்துக்கு அடங்கி வேலை செய்திருப்பது மதிப்பு!
வாழ்க்கையின் வெறுமையை சலித்துக்கொண்டு, மனைவிக்காக ஏங்கி, மகளை கண்டுபிடித்ததும் பூரிக்கும் வயதான டான் கதாபாத்திரத்தில் வரும் ரஜினியின் நடிப்பையெல்லாம் பற்றி பேசுவதற்கான அருகதை நமக்கு உள்ளதா? இதைத்தான் ரஜினியிடம் இவ்வளவு நாட்கள் நாங்கள் எதிர்பார்த்தோம். இன்னும் இப்படியே இந்த நடிப்பை அடுத்த படங்களிலும் தொடர்ந்துவிட மாட்டாரா என ஒரு பேராசைதான் மிச்சம் ஆகியிருக்கிறது படம் பார்த்த பிறகு.
ரஞ்சித்
அட்டக்கத்தியில் தொடங்கிய ரஞ்சித்தின் வெற்றிப்பயணம் கபாலியிலும் தொடர்கிறது. ஒரு வழக்கமான கதைக்கு அவர் கொடுக்கும் அரசியல் சட்டகமே அலாதியானது. மெட்ராஸ் படத்தில் ஒரு சுவருக்கான போட்டியை அதிகாரத்துக்கான போட்டியாக காட்டியதும் சரி, மலேசியாவின் சீனர்-தமிழர் பிளவை, ஆதிக்க சாதி-தலித் பிரச்சினையாக உருவகிப்பதும் சரி ரஞ்சித்தின் முத்திரை!
முக்கியமாக, எல்லா சமூக பிரச்சினைகளிலும் சாதியும் தலித் ஒடுக்குதலும் கண்டிப்பாக புரையோடியிருக்கும் என்ற ரஞ்சித்தின் தெளிவுதான் அவரை நம்பிக்கைக்கு உரிய இயக்குநராக்குகிறது. அம்பேத்கர், மால்கம் எக்ஸ், புத்தர் என அவர் வலிந்து திணிக்கும் ஒடுக்கப்பட்டோரின் அடையாளங்கள் அவசியமாகின்றன. முக்கியமாக, ரஜினி என்ற பெரும் ஆளுமை கிடைத்தாலும் பஞ்ச் டயலாக், ஸ்டைல் என்று மட்டுமே ஜல்லியடித்து பணம் பார்த்துவிட்டு போகாமல், ஒடுக்குமுறைக்கு எதிரான கதைக்குள் அந்த ஆளுமையை நடிக்க வைத்து Django Unchained போல் ஒரு சர் ரியலிஸ்ட்டிக் ஷூட் அவுட்டை ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒட்டுமொத்த கோபத்தின் வெளிப்பாடாக வைத்து முடிக்கும் க்ளைமேக்ஸோடு படத்தை கொடுத்திருப்பதற்காகவே, ரஞ்சித்துக்கு ஒரு பிக் ராயல் சல்யூட்.
படம் எப்படி?
Rhino season போன்ற ஒரு கதையை retiring don-க்கான கதையுடன் கலந்து ஒரு ப்ளாட், மலேசிய தமிழர்கள் பிரச்சினையை மண்டேலா வரலாற்றின் ஈர்ப்பு கலந்து ஒரு ப்ளாட் என இருவேறு கருக்களை ரஞ்சித் வைத்திருக்க வேண்டும். ரஜினி கதை கேட்கிறார் என்றதும் அவரின் ஆசிய ஹீரோ இமேஜ் மற்றும் முதிர்வயது ஆகியவற்றை கணக்கில் கொண்டு இரண்டு ப்ளாட்டுகளையும் ரஞ்சித் இணைக்க முற்பட்டிருக்க வேண்டும். மலேசிய தமிழர் ப்ளாட்டில் retiring don-ன் குடும்பத் தேடல் கதையை சப் பிளாட்டாக வைத்துவிட்டார். பிரச்சினை இரண்டு ப்ளாட்டுகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய connection மிஸ்ஸிங்.
உதாரணத்துக்கு, மும்பை தாதாவாக வளர்ந்து நிற்கும் வேலு நாயக்கரின் தாதா செயல்களே அவரின் மனைவி, மகள், மகன் என்ற sub plot-ஐ அவரிடமிருந்து பிரிக்கும் காரணங்களாக ஆவதுபோல். இந்த தொடர்பு இல்லாதததால் கபாலியில் main plot வெறும் தகவல்களாக வசனங்களில் மட்டும் சொல்லப்படுகிறது (‘என் ஊர் திண்டிவனம், படிச்சாலும் நாங்க ஆசைப்படற வேலைய கொடுக்க மாட்டேங்கறாங்க’ என்பன போல்). ஆனால், Sub Plotடோ அழகான காட்சிகளாக விரிகின்றன. விளைவாக, நம் மனதுக்கு பிடித்ததாக நிற்பது Sub Plot-தான். ஆனால், sub plot-க்கான இலக்கணப்படி main plot-க்கான முடிவான க்ளைமேக்ஸுக்கு முன்னமே முடிந்துவிட வேண்டும். கபாலியில் அப்படி நமக்கு விருப்பமான sub plot முடிந்தபிறகும், தொக்கி நிற்கும் main plot-ன் முடிவு இதனால்தான் தேவையற்ற நீளமாக தெரிகிறது.
மட்டுமல்லாமல், கேங்க்ஸ்டர் படம் என்பதால் பல பழைய படங்களில் வரும் காட்சிகளை போன்றே காட்சிகளை உருவாக்கியிருக்க வேண்டியதில்லை. தாய்லாந்தில் ரித்விகா ரஜினியை, “வேண்டாம்ப்பா வராதீங்க.. போயிடுங்க” என்ற காட்சி, நாயகன் படத்தில் ஒரு அம்மா வந்து “நாயக்கரே” என கூப்பிட்டுவிட்டு பின் “அய்யா வராதீங்க” என்று சொல்லும் சரண்யா கொல்லப்படும் அந்த காட்சியை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பிறகு, வழக்கம் போல் போதை மருந்து டிராஃபிக்கிங் பண்ண முடியாதென சொல்லும் Godfather Don Corleone-Sollozzo சந்திப்பு, Godfather Luca Brasi போல் முரட்டு முட்டாளாக தினேஷின் கதாபாத்திரம் என நிறைய.
அனைத்தையும் தாண்டி படத்துக்கு வரவைக்கும் விஷயங்களாக ரஜினி, ஓய்வுபெறும் டானின் குடும்பஇணைவின் நெகிழ்ச்சி தருணங்கள், முள்ளும் மலரும் காளியை எந்த காம்ப்ரமைஸ்ஸும் இல்லாமல் கொண்டு வந்து நிறுத்திய ரஞ்சித். கூடுதலாக குவெண்டின் டாரெண்டினோ பாணியிலான ரத்தசகதி க்ளைமேக்ஸ், டானின் காவிய வீழ்ச்சி போன்றவை புதுப்பேட்டை படத்தின் கிளாசிக்தனத்துக்கு மிக நெருக்கமாக படத்தை கொண்டு சென்று நிறுத்திருக்கிறது. கபாலி, கண்டிப்பாக எ ஒர்தி வாட்ச். வாழ்க்கையில் தோன்றும்போதெல்லாம் அவ்வப்போது போட்டு பார்த்துக்கொள்ளக் கூடிய ரகம்.
யோசனை
உண்மையில் இது அரசியல் படம் அல்ல ரஞ்சித். அப்படியான பாவனையை மட்டும்தான் கொண்டிருக்கிறது. Let’s accept.. உங்களுக்கான சிரமங்களாக என்னவெல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது. முக்கியமாக திரைக்கதையில் அதிக கவனம் இருந்தால் நல்லது. முடிந்தால் ஒரு நல்ல எழுத்தாளரை திரைக்கதைக்கென வைத்துக் கொள்ளலாம். தப்பே இல்லை. மெட்ராஸ் படத்தின் காட்சிகளில் இருந்த யதார்த்தம் இதில் இல்லை. உண்மையில் சற்று செயற்கையாகவே இருக்கின்றன. Too much of information எல்லா படங்களுக்கும் ஒத்து வராது. முக்கியமாக குறியீடுகள் simple-ஆகவும் குறைவாகவும் இருப்பதுதான் நல்லது. இல்லையெனில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போல் ஆகிவிடும்.
ஒரு விஷயம் யோசித்தால், அது தொடர்பாக பல விஷயங்களை நம் மூளை ஞாபகப்படுத்தும். ஆசை காட்டும். அவை அனைத்தையும் ஒரு படத்திலேயே சொல்ல வேண்டிய அவசியமில்லை. இல்லையெனில் நாமும் கமல்ஹாசன்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. சொல்ல தோன்றியது அவ்வளவுதான். ஏனெனில், நீங்களெல்லாம் இங்கே இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.
வசை
வசைகள் ஆதிக்கசாதி கும்பலுக்கு. அனைத்தும் கெட்ட வார்த்தை வசவுகள்தான். ‘படம் வர்றதுக்கு முன்னாடி அர்த்தமே தெரியாம ‘கபாலிடா’ன்னு டப்ஸ்மேஷ்ல வசனம் பேசனவன்லாம், ரிலீஸுக்கு பிறகு படம் குப்பை, வேஸ்ட்டுன்னு சொல்றேன்னா, …..டேய்… தெரியுதுடா.. உங்களுக்கு எங்க எரியுதுன்னு… ரஜினி படத்துக்கெல்லாம் என்னைக்குடா லாஜிக் பாத்தீங்க, இன்னைக்கு வந்து லாஜிக் இல்ல, ஸ்க்ரிப்ட் நல்லா இல்லன்னு திரைப்பார்வை மதன் மாதிரி டயலாக் பேசுறீங்க.. இது ரஜினி படம். ரஞ்சித் படம். மண்ணுக்குள்ள தலையை பொதச்சுக்கிட்டா, உலகமே இருட்டாயிடுமா? கொண்டைய மறைங்கடா. ரஞ்சித் டயலாக்தான். கேட்டுக்கோ. “ஆமாடா.. கோட்டு போடுவோம். எதிர்ல உக்காருவோம். கால் மேல கால் போடுவோம். கெத்து காட்டுவோம். முடியலன்னா போய் சாவுங்கடா!”’
இறுதியாக
ரஜினி ரசிகர்களே, ப்ளீஸ். ரஜினியென்ற அருமையான நடிகரை, வெறும் ஊஞ்சல் இழுத்துப்போட்டு உட்காரும் மாஸ் ஹீரோவாகவே முடித்துவிடாதீர்கள். கபாலி போன்ற ரஜினியையும் பார்த்து எங்களை ரசிக்க விடுங்கள்.
ராஜசங்கீதன் ஜான்