“எனக்கு சுதீப்புடன் நடிக்க ஆசை”: நடிகர் தனுஷ் பேச்சு!
ராக் லைன் வெங்கடேஷ் வழங்க, ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இயக்குனர் ராஜமெளலியின் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இதில் நாயகனாக நடிக்கிறார்.. கன்னடத்தில் நட்சத்திர நடிகரான இவர் தமிழில் நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. இவருடன் நித்யா மேனன், சதீஷ், சாய் ரவி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று (புதன் கிழமை) நடைபெற்றது. இவ்விழாவில் நாயகன் சுதீப், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் சூரப்பா பாபு, இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் தனுஷ் பேசுகையில், “சென்சார் அதிகாரி எப்படி எல்லா படத்துக்கும் முக்கியமோ, அந்த மாதிரி இப்ப வர்ற எல்லா படத்திலும் இமான் இருப்பார். அவரின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது முறையாக நான் கலந்துகொள்கிறேன். இளையராஜா சாரின் மெலடி இப்போ இமானின் இசையில் தான் கேட்ட முடியுது.
“எனக்கு சுதீப்பை மிகவும் பிடிக்கும். ‘நான் ஈ’ படத்தில் அவரின் நடிப்பைக் கண்டு வியந்தேன். நான் எந்த ஒரு நடிகரின் நடிப்பைப் பார்த்தும் வியந்து, போன் செய்து பேசியது இல்லை. ஆனால் சுதீப்க்கு போன் செய்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
“நான் ஈ’ படத்தைப் பார்த்த மாபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா சொன்ன ஒரு விஷயம், “இந்த முறை ஜூரியா நான் இருந்தா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது சுதீப்புக்குத்தான்” என்று சொன்னார். இந்த விஷயத்தை சுதீப்பிடம் சொல்ல சரியான இடம், இந்த மேடை தான்.
“எனக்கு சில நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு சிவகார்த்திகேயனுடன் நடித்துவிட்டேன். விஜய் சேதுபதியுடன் இப்ப நடிச்சுக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே சுதீப்புடனும் நடிக்கணும் என்பது என் ஆசை.
“ஆயிரம் பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் என்னோட நடிச்சதே எனக்கு பெருமையா இருக்கு. அவரோட அனுபவம், வெற்றிக்கு முன்னாடி நாங்கலாம் பச்சா. இருந்தும் எங்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்” என்றார் தனுஷ்.
தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குனர்கள் பாக்கியராஜ், பி.வாசு, சேரன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள்.