“அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்”! – சிபிராஜ்
சிபி (சத்ய)ராஜ் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நாயுடன் நடித்தார். படம் ஹிட். ‘ஜாக்சன் துரை’ படத்தில் பேயுடன் நடித்தார். அந்த படமும் ஹிட். இதனால், நிச்சயம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையுடன் அடுத்து அவர் மீனுடன் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘கட்டப்பாவ காணோம்’.
இயக்குனர் அறிவழகனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த மணி செய்யோன் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், லலித் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
நாயகன் சிபிராஜூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், ‘விஜய் டிவி’ சேது, திருமுருகன், ஜெயக்குமார், ‘டாடி சரவணன்’, பேபி மோனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் வருவது யார்? சிபிராஜா? அதுதான் இல்லை. இப்படத்தில் நடிக்கும் மீனுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் தான் கட்டப்பா!
“ஒரு வாஸ்து மீனை மையமாகக் கொண்டு தான் எங்களின் ‘கட்டப்பாவ காணோம்’ படமானது நகரும். வெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் மீன் செய்து, ரசிகர்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் தான் ஒரு உண்மையான வாஸ்து மீனை ‘கட்டப்பா’வாக இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம்.
“கதை ஓகே ஆன அடுத்த நிமிடமே நான் இந்த வாஸ்து மீனை வாங்கி, அதனோடு சுமார் நான்கு மாதமாக பழகி வந்தேன். நாய்களைப் போலவே மீன்களுக்கும் தங்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டுகொள்ளும் சக்தி இருக்கிறது என்பதை அதன்பிறகு தான் நான் உணர்ந்தேன்.
“ஒரு பொருளின் மதிப்பானது அதன் விலையில் கிடையாது. என்னதான் வைரக்கல் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அது நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவில்லை என்றால், நாம் அதை அணிய மாட்டோம். அதேசமயம் விலை மலிவான யானைமுடி நமக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமானால், அதை நாம் முழு மனதோடு அணிந்து கொள்வோம். அந்த வகையில் நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளத்திலும் எங்களது அதிர்ஷ்ட மீனான கட்டப்பா நீந்தி செல்லும்” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் மணி செய்யோன்.
தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், அந்த படங்களில் ஒரு முக்கியமான சிறப்பம்சத்தை உள்ளடக்கி உள்ளார். குழந்தைகளை கவர்ந்து இழுக்குமாறு இருக்கும் கதை தான் அந்த சிறப்பம்சம்.
“கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் மணி சொன்ன அடுத்த நொடியே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இயக்குனர் அறிவழகனைப் போலவே, மணியும் தனித்துவமான கதைகளை இயக்குவதில் திறமை படைத்தவர். விரைவில் வெளியாக இருக்கும் எங்களின் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் மூலமாக ரசிகர்களும் இதை உணருவார்கள்.
“முதல் முறையாக தயாரிப்புத் துறையில் அடியெடுத்து வைக்கும் ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தினர், எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். என்னை இதுவரை ரசிகர்கள் கண்டிராத மாடர்ன் இளைஞனாக, ஐடி துறையில் வேலை பார்க்கும் கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கும் இப்படமானது குழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்துக்கு இசை – சந்தோஷ் தயாநிதி (‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசையமைப்பாளர்); ஒளிப்பதிவு – ஆனந்த் ஜீவா (‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘விண்மீன்கள்’ ஆகியவற்றின் ஒளிப்பதிவாளர்); படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா (‘இறுதி சுற்று’, ‘நான்’ ஆகியவற்றின் படத்தொகுப்பாளர்); கலை – எம்.லக்ஷ்மி தேவ்: பாடல்கள் – முத்தமிழ், உமாதேவி; நடனம் – அசார் (அறிமுகம்); சண்டை – பில்லா ஜெகன் (‘ஜிகர்தண்டா’ ஸ்டண்ட் மாஸ்டர்).