அமெரிக்காவின் அடிமைகளுக்கு விடுதலையின் அர்த்தம் புரிவது கடினம்!
2012-ல் இடிந்தகரையின் சுனாமி காலனிக்குள் புகுந்த மத்திய அதிரடிப்படையின் தாக்குதலுக்கு தப்பி மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
வேகமாக வெளியேற இயலாத நிலையில் ஒரு மாற்றுத்திறனாளி விதவைத் தாய் தனது 5 வயது குழந்தையுடன் தடுமாறிய பொழுதில், அதிரடிப் படையின் வசம் மாட்டினார். அருகே இருந்த சாக்கடையில் அவரது 5 வயது குழந்தை நிறுத்தப்பட்டது. அவர் பாலியல் ரீதியாக வார்த்தைகளால் சித்ரவதைக்கு ஆளாவதை அக்குழந்தை பார்க்க நேர்ந்தது. இந்த அதிரடிப்படையின் கொடூரத்தினை தாங்க இயலாத அந்த ஊர் காவலர் ஒருவர், அந்த அதிரடிப்படை சிப்பாயின் காலில் விழுந்து அப்பெண்ணை காப்பாற்றினார். இந்த அதிர்ச்சியினை நேரில் பார்த்த குழந்தை உளவியலான சிக்கலுக்குள்ளாகி பேச்சற்றுப் போனது. அக்குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினார்கள் தோழர்கள்.
இடிந்தகரை மக்களின் புனித தேவாலயத்தினை சிதைத்து ஏசுநாதர் சிலையின்முன் மூத்திரம் பெய்துவிட்டு வெளியேறியது, மக்களை உயிரைக்கொடுத்து காப்பதாகச் சொல்லும் அதிரடிப்படை…
அமைதியாக நடந்த இடிந்தகரை போராட்டத்திற்கே இந்திய கடற்கரையோரக் காவல்படை, வான்படை, அதிரடிப்படை, சிறப்பு காவல்படை, தமிழக காவல்படை, மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை என பல படைகளை அனுப்பிய யோக்கியவான்கள் நம் அரச சனநாயகக் கனவான்கள்.
இச்செயலை செய்தது ஏதோ சிங்கள ராணூவம் அல்ல…. இதே இந்தியப் படை இதே சோ-கால்டு இந்தியர்களுக்கு செய்த தேசப்பற்றுமிக்க தொண்டு.
அனைத்து ஊடகமும், ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் இருக்கிற இந்த ஊரில் நிகழ்ந்த இந்தக் கொடுமையை பார்த்த நமக்கு, காசுமீரில் யாரை வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் சிறைப்படுத்தி சித்ரவதைப்படுத்தும் உரிமை கொண்ட சட்டத்தினை வைத்திருக்கும் இந்திய ராணுவம் என்ன செய்யும் என்பது புரியாத புதிரல்ல.
தேசபக்தி என்பது எது என்று தெரியாமல் பினாத்தும் மனநோயாளிகளை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
நிலத்தினை ஆக்கிரமிப்பதல்ல தேசம், மக்கள் மனதினை வெல்வதே தேசம்.
1947-ல் வலுக்கட்டாயமாக காசுமீர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட பின்னர், பல சனநாயக முயற்சிகளோடு தங்களுடைய உரிமையை 40 ஆண்டுகளாக கோரினார்கள் காசுமீரிகள். 1940, 1950, 60, 70 வரை ஆயுதம் ஏந்தவில்லை அவர்கள். 80களில் ராணுவத்தினைக் கொண்டும், சட்ட விரோதமாகவும் அவர்களது ஆட்சியை கலைப்பதும், கட்சியை நெருக்கடிக்குள்ளாக்குவதும், தலைவர்களை கொடைக்கானலில் சிறை வைத்ததும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததும், பொருளாதார வசதிகளை தடுத்ததும் என தொடர்ந்து இந்திய உயர்சாதி வெறி கொண்ட அரசு செய்த அயோக்கியத்தனத்தினை எதிர்த்தே அம்மக்கள் போராட துவங்கினார்கள்… இந்தியா அவர்களது கோரிக்கையை சனநாயகமாக, அமைதி வழியில் எதிர்கொள்ளாமல் ராணுவத்தின் மூலமாக அடக்கியபோது அவர்கள் எழுந்தார்கள்.
சராசரி ‘கெயில்’ குழாய் எதிர்ப்பு போராட்டத்தினையே காவல்துறை கொண்டு அடித்த யோக்கியவான்கள் நமது ஆட்சியாளர்கள். முல்லைப்பெரியாறில் என்ன நடந்தது என்பதை பார்த்தவர்கள் நாம். தாமிரபரணியில் நடந்த கொலைகளை பார்த்தோம் நாம்.
அடக்குமுறை கொண்டு மட்டுமே நம்மை எதிர்கொள்ளும் இந்திய அரசின் யோக்கியத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள், இந்திய அரசு யோக்கிய்மான அரசா என்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்துவிட்டு பேசவேண்டும்.
சராசரி உரிமைகளை வெல்ல நடக்கும் குறைந்தபட்ச போராட்டத்தில் பங்கெடுக்கும் எவரும் இந்திய அரசின் பக்கம் நிற்பதில்லை . ஏனெனில் மக்கள் உரிமைக்காக போராடும் அனைவருக்கும் இந்திய அரசின் அயோக்கியத்தனம் அனுபவப்பூர்வமாக தெரிந்தே இருக்கும்.
இந்திய ராணுவம் என்பது இங்கிலாந்து அரசினால் அடிமைச் சொத்துக்களை பாதுகாக்கவும், சுரண்டலை எதிர்த்து போராடுபவர்களை கொலை செய்யவும் பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ராணுவம்… இது இந்திய விடுதலைக்காக போராடிய ராணுவமல்ல… ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்த அனுபவத்தினை கொண்டது.
இந்திய மக்களை மனிதர்களாக மதிக்கின்ற வகையில் இது மாற்று பயிற்சியளிக்கப்படவோ, வளர்க்கப்படவோ இல்லை என்பதைத் தான் காசுமீர், பஞ்சாப், மணிப்பூர், அஸ்ஸாம், வங்காளம், நாகாலாந்து, திரிபுரா, சட்டீஸ்கர் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.
இந்திய ராணுவம் மட்டுமல்ல, இந்திய அரசே இங்கிலாந்திற்கு அடிமை சேவகம் செய்வதற்காக வளர்க்கப்பட்ட அரசு என்பதை புரிந்து கொண்டால் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வது எளிது.
சுயசிந்தனை கொண்ட எந்த மக்கள் தலைவனுக்கும் அமெரிக்க பாராளுமன்றத்தில் கைதட்டல்கள் கிடைத்ததில்லை. அடிமைகளுக்கு ஏகபோக மரியாதை வெள்ளைக்காரனிடம் எப்போதும் கிடைக்கவே செய்யும்.
அமெரிக்காவின் அடிமைகளுக்கு விடுதலையின் அர்த்தம் புரிவது கடினம்.
போராடுவோம். அது ஒன்றே வழி.
– திருமுருகன் காந்தி
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்