ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துக்கு ஒரு நீதி! சுவாதிக்கு வேறொரு நீதி!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள தோக்கவாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). ஆட்டோ ஓட்டுனர். இவர், இவரது மனைவி உஷா ( 47), மகன் சூர்யா (22) ஆகிய மூவரும் தங்கள் உறவினர் திருமணத்திற்காக நகை வாங்க, செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக் கடைக்கு நேற்று மதியம் வந்துள்ளனர்.

பணம் குறைவாக இருந்ததால், நகை வாங்க முடியவில்லை. இதனால், கடையில் இருந்து வெளியே வந்த அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த செங்கம் காவல் நிலைய போலீசார் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் அவர்களிடம் விசாரித்து உள்ளனர். அதற்கு அவர்கள், எங்கள் குடும்பப் பிரச்சினை என்பதால் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்த 3 போலீசாரும், ராஜா குடும்பத்தினர் மூவரையும் லத்தியால் பயங்கரமாக தாக்கி உள்ளனர். அவர்களது தாக்குதல் நீண்ட நேரம் நீடித்துள்ளது. மேலும், அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ:

https://youtu.be/0yP7OJApJCM

நேற்று நடந்த இந்த கொடூர அராஜக சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த பாரபட்சம் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் எழுதியுள்ள பதிவு இதோ:-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பொது இடத்தில் குடும்பத்தினரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் முறையிட்டார்.

அப்போது பேசிய நீதிபதி எஸ்.கே.கவுல், பத்திரிகையில் வரும் செய்தி மற்றும் வீடியோக்களை எடுத்து வந்து முறையீடு என்ற பெயரில் நீதிமன்ற நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தேவையெனில் அந்த புகாரை மனுவாக தாக்கல் செய்யலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் இருப்பதாகவும், இருப்பினும் சிலர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீண்டிப்பதாகவும் அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.
செய்தி

ஓகே… அப்படியே ஒரு பத்து நாள் பின்னோக்கிப் பார்ப்போமா…

சுவாதி கொலையான இரண்டே நாளில் அந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது இதே நீதிமன்றம். சுவாதி வெட்டப்பட்டுக் கிடக்கும் காட்சிகளை ஊடகங்களில் பார்க்கும்போது, நெஞ்சம் பதறுவதாக கருத்துச் சொன்னது இதே நீதிமன்றம். இதுபோன்ற கொடூரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அரசுக்கு எச்சரித்தது இதே நீதிமன்றம். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என காவல்துறைக்கு கெடு விதித்தது இதே நீதிமன்றம்.

சுவாதியின் குடும்பத்தினர் யாரும் மனு அளிக்கவுமில்லை; மனித உரிமை அமைப்புகள் பார்த்துக் கொள்வார்கள் என நீதிமன்றம் அமைதியாக இருக்கவுமில்லை. அதே நீதிமன்றம்தான் இன்று இப்படி நேரம் வீணாவதாக ஆத்திரப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்; ஒய்.ஜி.மகேந்திரன் சொன்ன அந்த ‘ஒசந்தசாதி’ என்பதற்கு பொருள் இருக்கிறதா இல்லையா?

– ஆளூர் ஷா நவாஸ்

              # # #

“சூத்திரருக்கொரு நீதி

வெற்றுச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின், அது

சாத்திரமன்று, சதியென்று கண்டோம்…”

– மகாகவி பாரதி