ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்
தடயவியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வந்த, இறந்த மனிஷா கொய்ராலாவின் உடல் காணாமல் போகிறது. இதை ஏஎம்ஆர்.ரமேஷ், தனது உயர் அதிகாரியான அர்ஜுனிடம் தெரிவிக்க. அவர் மாயமான உடல் எங்கே போனது என்ற புலன் விசாரணையை துவங்குகிறார்.
மனிஷாவின் கணவன் ஷாமிற்கு, காவல் துறையினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனிஷா கொய்ராலாவின் உடலை காணவில்லை என்ற விவரத்தை எடுத்து கூறி, காவல் நிலையத்திற்கு வருமாறு அழைக்கின்றனர். அந்த சமயத்தில் ஷாம் தனது கள்ளக்காதலி அகுஷா பாட்டுடன் மது அருந்திக் கொண்டு இருக்கிறார். நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என காவல் துறை மிரட்டவே, ஷாம், நானே வருகிறேன் எனக்கூறி காவல் நிலையத்திற்கு கிளம்புகிறார்.
உயர் அதிகாரியான அர்ஜுன், ஷாமிடம் தனது விசாரணையை துவங்குகிறார். உடல் காணவில்லை என்றால் அதை தேடுவதை விட்டுவிட்டு என்னிடம் ஏன் விசாரிக்கிறிர்கள் என்று ஷாம் உணர்ச்சிவசப்படுகிறார். பின் ஷாம் வேறு வழியில்லாமல் கடந்த காலத்தைப் பற்றி கூறுகிறார். கடைசியாக தானே மனிஷா கொய்ராலாவை கொலை செய்துவிட்டேன். ஆனால் தற்போது அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என அர்ஜுனிடம் கூற அது எப்படி சாத்தியம் என்றதும் பி.எல் 18 என்ற மருந்தை காட்டி இதை வைத்து ஒருவரை செயற்கையாக ஹார்ட் அட்டாக் வரவைத்து, கொலை செய்ய முடியும். இந்த மருந்தை குடித்த 8 மணி நேரத்தில் அது ரத்தத்துடன் கலந்து விடும் பின்னர் அதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் குடித்த 8 மணி நேரத்திற்குள் நாம் டிரீட்மெண்ட் எடுத்தால் ஆபத்தில் இருந்து தப்பித்து விடலாம். மனிஷாவிற்கு என்னுடைய பிளான் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அவள் இறந்த பிறகு, அவளுடை நண்பர் லாயர் ஒருவர் இருக்கிறார் அவருடைய உதவி மூலம் மீண்டும் பிழைத்து இருக்கலாம். தற்போது என்னை அதற்காக பழிவாங்குகிறாள் என்று ஷாம் கூறுகிறார்.
இதில் ஷாம் கூறியதை அர்ஜுன் நம்பினாரா? இல்லையா என்பதும், மனிஷாவின் உடல் கிடைத்ததா, மனிஷா கொய்ராலா இறந்தது உண்மையானால் அவளது உடலை எடுத்தது யார்? யார், யாரை பழி தீர்க்க நினைக்கிறார்கள் என்பதும் மீதிக்கதை.
படத்தில் அர்ஜுன் தனது இயல்பான ஆக்ஷன் நடிப்பை தாண்டி, ஒரு திரில்லர் அனுபவமிகு போலிஸ் அதிகாரியாக மிரட்டி செல்கிறார். இவருக்கு இணையாக ஷாம், தனது வில்லத்தனம் மிகு நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முழு பலமே அர்ஜுன் மற்றும் ஷாமின் அசத்தலான நடிப்பு எனலாம். இவர்களுக்கு இணையாக மனிஷா கொய்ராலா, தனது சிறந்த நடிப்பை வில்லத்தனத்துடன் வெளிபடுத்தி, பெரியளவில் ஸ்கோர் செய்துள்ளார். இவர்களுடன் அறிமுக நாயகி அகுஷா பாட் தனது நடிப்பில் ஈடுகொடுக்க முயற்சித்துள்ளார்.
திரைக்கதை மற்றும் வசனங்கள் என படத்தின் தேவைகேற்ப சிறப்பாகவே கொடுத்துள்ளார் இயக்குனர் ஏ எம் ஆர் ரமேஷ். இவர் தனது முன்னைய படங்களான குப்பி, வனயுத்தம் ஆகிய படங்களை தாண்டி ஒரு கிரைம் திரில்லர் படமாக ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தை இயக்கியுள்ளமை சிறப்பே, இருப்பினும் இன்னும் கதையை விறுவிறுப்பாக்கியிருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. எனினும் குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர் என நல்ல கருத்தை வைத்து, அருமையான திரில்லர் பாணி படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ எம் ஆர் ரமேஷ்.
படத்திற்கு கிருஷ்ணா ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பெரும் பலம், படத்தை தெளிவாக காட்டியுள்ளதோடு, சில இடங்களில் மிரட்டவும் செய்துள்ளது இவரது ஒளிப்பதிவு. இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். இருப்பினும் பாடல் காட்சிகள் சற்று முகம் சுழிக்க வைக்கிறது.
‘ஒரு மெல்லிய கோடு’ – குடி போதையால் வரும் கேடு!