அம்மா கணக்கு – விமர்சனம்
“பாடத்தில் அதிக மார்க் வாங்குவது, ஒரு திறமை மட்டுமே. அதுவே குழந்தைகளின் ஒரே திறமை என நினைக்கக் கூடாது. நல்ல மார்க் வாங்காத குழந்தைகளிடம் பொதிந்திருக்கும் வேறு திறமைகளைக் கண்டறிந்து, அவற்றில் பயிற்சியும், ஊக்கமும் அளித்தால், அந்த குழந்தைகளும் வாழ்க்கையில் முன்னேறி உச்சத்துக்கு நிச்சயம் செல்லும்” என்று குழந்தைகள் நல கல்வி ஆலோசகர்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும், பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதை காதில் வாங்கிக்கொள்வதே இல்லை. காரணம், வாழ்க்கையில் முன்னேற கடும் போட்டி நிலவும் இன்றைய சூழ்நிலையில், அப்போட்டியில் வெற்றி பெற படிப்பில் அதிக மார்க் வாங்க வேண்டியது கட்டாயம் என்ற அவலமே இன்று யதார்த்தமாக இருக்கிறது.
இந்த யதார்த்தத்தை உணர்ந்திருப்பவள் ‘அம்மா கணக்கு’ கதையின் நாயகி. மிகவும் ஏழ்மையான குடும்பப் பெண். கணவனை இழந்தவள். ஒரு பெண் டாக்டரின் வீட்டில் வீட்டுவேலை செய்வது, மீன் மார்க்கெட்டில் வேலை பார்ப்பது, மாவு விற்கும் கடையில் மாவு அரைப்பது, ஆற்றில் துணி துவைப்பது… என ஒரே நாளில் நான்கைந்து வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் ஒரே மகளை படிக்க வைத்து வருபவள். தன் மகள் நன்றாகப் படித்து, நல்ல மார்க் வாங்கி தேர்ச்சி பெற்று, நல்ல வேலைக்குப் போய், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது அவளது கனவு.
ஆனால், 10ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கோ படிப்பில் ஆர்வம் இல்லை. “டாக்டர் பிள்ளை டாக்டர் ஆகும். எஞ்சினியர் பிள்ளை எஞ்சினியர் ஆகும். நான் வேலைக்காரி பிள்ளை… வேலைக்காரியாகத் தானே ஆவேன்? அதுக்கு எதுக்கு நல்லா படிக்கணும்…?” என்ற தாழ்வு மனப்பான்மையில், படிப்பில் கவனம் செலுத்த மறுக்கிறாள். குறிப்பாக, கணக்குப் பாடத்தில் பெயில் மார்க் வாங்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாள். அதனால், வகுப்பில் கணக்கு ஆசிரியர் அவளை மட்டம் தட்டி நக்கலடிப்பதும் வாடிக்கையாகி விடுகிறது..
மகளின் நிலை கண்டு மனம் வெதும்பும் அம்மா, அவளது எதிர்காலத்தை எண்ணி அஞ்சுகிறாள். மகளுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அது எடுபடாததால், மகளை தேர்ச்சி பெற வைக்கும் வைராக்கியத்துடன் ஒரு புதுமையான முடிவு எடுக்கிறாள். மகள் படிக்கும் அதே பத்தாம் வகுப்பில் மாணவியாக சேருகிறாள் அம்மா.
தன்னுடைய வகுப்பில் தன் அம்மா மாணவியாக படிப்பதை அவமானம் என்று நினைக்கும் மகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஆனால் அம்மாவோ, “கணக்குப் பாடத்தில் என்னைவிட நீ கூடுதலாக மார்க் வாங்கிக் காட்டு. நான் ஸ்கூலுக்கு வராமல் நின்றுவிடுகிறேன்” என்கிறாள். அதன்பிறகு அதிக மார்க் வாங்க தாய்க்கும், மகளுக்கும் இடையில் நடக்கும் போட்டியும், போராட்டமும், அதனால் ஏற்படும் உரசலும், தீர்வுமே ‘அம்மா கணக்கு’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக, ஏழ்மையான அம்மாவாக வரும் அமலாபால், தன் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக, பொறுப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்குமுன், படத்துக்குப் படம் நாயகனின் காதலியாக வந்து டூயட் பாடி ஆடிக்கொண்டிருந்தவர், இப்போது காதலே இல்லாத ஒரு படத்தில் “10ஆம் வகுப்பு படிக்கும் டீன்ஏஜ் பெண்ணுக்கு தாய்” என்ற வேடத்தை துணிச்சலாக ஏற்றுக்கொண்டதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அமலாபாலின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
அமலாபாலின் மகளாக வரும் சிறுமி யுவாவுக்கு இது முதல் படம் என்றாலும், நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்மாவை எடுத்தெறிந்து பேசுவது, அம்மாவின் பணத்தை திருடுவது, விட்டேத்தியாய் வலம் வருவது என டீன்ஏஜ் ரிபெலிஸத்தை அழகாக கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
பள்ளித் தலைமை ஆசிரியராகவும், பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியராகவும் வரும் சமுத்திரக்கனி, தனது வழக்கமான நடிப்பிலிருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசிரியர் என்றாலே அவர் தலைக்கனத்துடன் மிடுக்காக கம்பீரம் காட்ட வேண்டும் என்ற நினைப்பில் சில ஆசிரியர்கள் செயற்கையாக நடந்துகொள்வதை சமுத்திரக்கனி திரையில் செய்து காட்டியிருக்கிறார். படத்தில் அவர் காட்டும் மேனரிசம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதுவே சமுத்திரக்கனியின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றி.
பெண் டாக்டராக வரும் ரேவதி நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் வந்தாலும், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 10ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவ – மாணவிகளாக வரும் சிறுவர் – சிறுமிகள் அனைவரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘கணக்குப்புலி’யாக வரும் கண்ணாடி போட்ட சிறுவனின் பாத்திர வடிவமைப்பும் நடிப்பும் அசத்தல்.
’நில் பட்டே சன்னாட்டா’ என்ற இந்தி வெற்றிப்படத்தின் தமிழ் மறுஆக்கமே ‘அம்மா கணக்கு’. இந்தியில் இயக்கிய அஸ்வினி அய்யர் திவாரியே தமிழிலும் இயக்கியிருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் பெற்றோர்கள் அக்கறையுடன் செயல்பட்டால், தங்களுடைய குழந்தையை எந்த உயர்ந்த நிலைக்கும் அழைத்து செல்ல முடியும் என்ற கருத்தை இப்படத்தின் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அவருக்கே உரித்தான பின்னணி இசை, கதையை அழகாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. குறிப்பாக, ஆரம்பத்தில் டைட்டில் போடும்போது ஒலிக்கும் பின்னணி இசை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதம்.
குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க தரமான, அதேநேரத்தில் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான இந்த படம், புதுமையான கதையம்சத்துடன் கூடிய தரமான படங்களை தொடர்ந்து தயாரித்துவரும் நடிகர் தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துக்கு மற்றுமொரு மணிமகுடம்.
‘அம்மா கணக்கு’ – தரமான வெற்றி கணக்கு!