200 திரையரங்குகளில் வெளியாகும் ‘அம்மா கணக்கு’ – முன்னோட்டம்!
தரமான வெற்றிப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றிருப்பது, நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ். பாலிவுட் படவுலக நாயகனாக தனுஷை அறிமுகம் செய்த ‘ராஞ்சனா’ என்ற இந்திப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் எல் ராயின் படநிறுவனம் கலர் எல்லோ புரொடக்சன்ஸ். இவ்விரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அம்மா கணக்கு’.
‘பூஜ்ஜியத்தை வகுத்தால் ஒன்றும் வராது’ என பொருள்படும் ‘நில் பட்டே சன்னட்டா’ என்ற பெயர் தாங்கி, ஸ்வரே பாஸ்கர், ரியா சுக்லா, ரத்னா பதக், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் வெளியாகி, விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற பாலிவுட் படத்தின் தமிழ் மறுஆக்கமே ‘அம்மா கணக்கு’. ‘நில் பட்டே சன்னட்டா’ இந்திப்படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் திவாரியே இந்த தமிழ் மறுஆக்கத்தையும் இயக்கியுள்ளார்.
வருகிற 24ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரும் இப்படத்தில் அமலா பால், சமுத்திரக்கனி, யுவா, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ் தயாரித்த, தமிழ்திரையுலகின் மாபெரும் சாதனைப் படங்களான ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களும் 200 திரையரங்குகளில் வெளியாயின என்பது நினைவுகூரத்தக்கது.
‘அம்மா கணக்கு’ கதையின் நாயகி, மிகவும் ஏழ்மையான குடும்பப் பெண். கணவனை இழந்தவள். வீட்டுவேலை செய்வது, மார்க்கெட்டில் வேலை பார்ப்பது, ஆற்றில் துணி துவைப்பது என ஒரே நாளில் நான்கைந்து வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் ஒரே மகளை படிக்க வைத்து வருபவள். தன் மகள் படித்து, நல்ல வேலைக்குப் போய், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது அவளது கனவு.
ஆனால், 10ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கோ படிப்பில் ஆர்வம் இல்லை. “டாக்டர் பிள்ளை டாக்டர் ஆகும். எஞ்சினியர் பிள்ளை எஞ்சினியர் ஆகும். நான் வேலைக்காரி பிள்ளை… வேலைக்காரியாகத் தானே ஆவேன்? அதுக்கு எதுக்கு நல்லா படிக்கணும்…?” என்ற தாழ்வு மனப்பான்மையில், படிப்பில் கவனம் செலுத்த மறுக்கிறாள். குறிப்பாக, கணக்குப் பாடத்தில் பெயில் மார்க் வாங்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாள்.
மகளின் நிலை கண்டு மனம் வெதும்பும் அம்மா, மகளுக்கு எவ்வளவோ சொல்லியும் எடுபடாததால், மகளை தேர்ச்சி பெற வைக்கும் வைராக்கியத்துடன் ஒரு புதுமையான முடிவு எடுக்கிறாள். மகள் படிக்கும் அதே பத்தாம் வகுப்பில் மாணவியாக சேருகிறாள் அம்மா. “இது எனக்கு அவமானம்” என எதிர்ப்புத் தெரிவிக்கும் மகளிடம், “கணக்குப் பாடத்தில் என்னைவிட நீ கூடுதலாக மார்க் வாங்கிவிட்டால், நான் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுகிறேன்” என்கிறாள். அதன்பிறகு தாய்க்கும், மகளுக்கும் இடையில் நடக்கும் இந்த ‘கணக்குப் பாட’ போராட்டமே ‘அம்மா கணக்கு’ படத்தின் மீதிக்கதை.
ஏழைத்தாயாக அமலா பால், அவரது மகளாக யுவா, பள்ளித் தலைமை ஆசிரியராகவும், 10ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியராகவும் சமுத்திரக்கனி, அமலா பாலுக்கு வீட்டுவேலை செய்ய வாய்ப்பு கொடுக்கும் டாக்டராக ரேவதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
“இப்படியொரு புதுமையான கதையம்சத்துடன் இதுவரை தமிழில் ஒரு படம்கூட வந்ததில்லை என அடித்துச் சொல்லலாம். குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க தரமான, அதேநேரத்தில் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான படம் ‘அம்மா கணக்கு” என்கிறது படக்குழு.