“வல்லுறவுக்கு ஆளான பெண்” பற்றிய சல்மான் கான் பேச்சால் சர்ச்சை!
“சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடினமான சண்டைக் காட்சிகளில் நடித்தபோது வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணைப் போல் உணர்ந்தேன்” என ஆன்லைன் மீடியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சல்மான கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “இன்னும் ஒரு வார காலத்துக்குள் தனது கருத்துக்கு சல்மான் கான் மன்னிப்பு கோராவிட்டால் அவருக்கு சம்மன் அனுப்பப்படும்” என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் எச்சரித்துள்ளார்.
‘சுல்தான்’ படத்துக்கான உழைப்பு குறித்து சல்மான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “சுல்தான்’ படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக 6 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் என் எதிரியை (படத்தில் வில்லன் கதாபாத்திரம்) பல முறை தரையில் கீழே தள்ள வேண்டியிருந்தது. பின்னர் அவரை மேலே தூக்கினேன். அவர் 120 கிலோ எடை கொண்ட நபர். அவரை கீழே தள்ளுவதும், பின்னர் அவரை தலைக்கு மேல் தூக்குவதும் மிகக் கடினமாக இருந்தது. 10 வித்தியாசமான கோணங்களில் அதை படமாக்கியதால், 10 முறை நான் அவரை மேலே தூக்கினேன். சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபின் என்னால் நேராக நடக்க முடியவில்லை. வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணைப்போல் வளைந்து நெளிந்து நடந்தேன். இதுபோல் நிறைய சண்டைக் காட்சிகள் அந்தப் படத்தில் இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.
சல்மான் கானின் இந்த பேட்டி ட்விட்டரில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியுள்ளது. ஆடை வடிவமைப்பாளரும் பாஜக செய்தி தொடர்பாளருமான சாய்னா, சல்மான் கான் மன்னிப்பு கோரும்படி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பெண்ணின் சுய மரியாதை குலைப்பதற்காக ஆண் தனது பலத்தை துஷ்பிரயோகம் செய்வதே வல்லுறவு. பெண்ணை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சல்மான் கான் உண்மையிலேயே பெண்கள் மீது மதிப்பு கொண்டவர் என்றால் மன்னிப்பு கோர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறும்போது, “சல்மான் கானுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஆணையத்திற்கு நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும். சல்மான் ஏன் அத்தகைய கருத்தை தெரிவித்தார் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்” என்றார்.