கேட்க கேட்க தித்திக்கும் பாடல்: சிம்புவுக்காக இந்த லாட்டரி!?

மெல்லிசை என்பது எம்எஸ்வி காலத்தோடு முடிந்து போயிற்று என்று அந்தக் காலத்தில் பெருமூச்சு விட்டவர்கள்கூட பிறகு ராஜாவுடன் தன்னிச்சையாக இளைப்பாறினார்கள். ரஹ்மான் நுழைந்த பிறகு தமிழ் திரையிசை ஒலியின் நிறமே மாறிப் போயிற்று. நவீன மனதின் விருப்பங்களுக்கு முற்றிலும் இணக்கமாக இருந்தார் ரஹ்மான்.

என்றாலும் அவரும் கூட சமயங்களில் சில அபாரமான மெல்லிசைகளை தந்து இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுவார். கண்ணுக்கு மையழகு (புதிய முகம்), அழகே சுகமா (பார்த்தாலே பரவசம்), பூங்கொடியின் புன்னகை (இருவர்), யாருமில்லா தனியரங்கில் (காவியத் தலைவன்) என்று சட்டென்று நினைவில் வந்த உதாரணங்களைச் சொல்கிறேன்.

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் ‘உனக்காக பொறந்தேனே எனதழகா’ கேட்டபோது கூட, எம்.எஸ்.வியின் மறுஜென்மம் மாதிரி இருந்தது. ஜஸ்டின் பிரபாகர் அடுத்த எம்.எஸ்.வியாக வருவதற்கான சாத்தியம் உள்ளது என்றுகூட எழுதியிருந்தேன்.

மேற்குறிப்பிட்ட ரஹ்மானின் மெல்லிசை வரிசையில் சமீபத்திய அட்டகாசமான வரவு – ‘அச்சம் என்பது மடமையடா’வில் ‘அவளும் நானும்’. கேட்க கேட்க அத்தனை தித்திப்பாக இருக்கிறது. எம்.எஸ்.வி இன்றிருந்தால் இந்தப் பாடலை அப்படி பாராட்டியிருப்பார் என்று தோன்றுகிறது.

பாரதிதாசனின் காதல் பாடல்களில் ஒன்றை சற்று வரிசை கலைத்துப் போட்டிருந்தாலும் மீட்டரில் உட்காரும் வரிகளை பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள். தமிழின் அற்புதமான சுவையை இது போன்ற தருணங்களில் மிக ஆழமாக உணர முடிகிறது.

முதல் சரணத்திற்கு முன்னால் வரும் இடையிசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். சிம்பொனி இசைக்கப்படும் அரங்கில் உட்கார்ந்திருக்கும் அற்புதமான உணர்வு வருகிறது. தந்தையின் புகழை போற்றும் விதமாக விஜய் ஜேசுதாஸ் அழகாக, துல்லியமான உச்சரிப்புடன் பாடியிருக்கிறார்.

என்னவொரு பாடல்! ஆனால் சிம்புவிற்கா இந்த லாட்டரி என்றும் தோன்றுகிறது.

– சுரேஷ் கண்ணன்

https://youtu.be/g-dWqptsFfE