அம்பேத்கர் வாழ்க்கையை சொல்லும் தமிழ்ப்படம் ‘பாபா சாகேப்’
அம்பேத்கரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் தமிழ்ப்படம் ‘பாபா சாகேப்’. ‘ஆய்வுக்கூடம்’ படத்தில் நாயகனாக நடித்த ராஜகணபதி இப்படத்தில் அம்பேத்கர் வேடமேற்கிறார்.
‘பாபா சாகேப்’ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான அஜய்குமார் இப்படம் பற்றி கூறுகையில், “இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத் தலைவரின் படம் என்பதை கருத்தாக கொண்டு தயாராகும் படம் இது. தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தான் அதிகமாக வருகின்றன. நாம் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஒரு திரைப்படம் உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இத்திரைப்படத்தை உருவாக்க இருக்கிறேன்.
ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தார். அப்படி இருக்கும்போது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த ‘பாபா சாகேப்’.
அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம். கிடைக்கவில்லை. இறுதியாக, எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன், ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் நாயகன் ராஜகணபதியை எங்களுக்கு அறிமுகம் செய்தார். ராஜகணபதி தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம்.
மேலும், இத்திரைப்படத்தில் குழந்தைப்பருவ அம்பேத்கர், இளமைப்பருவ அம்பேத்கர் மற்றும் பாரதியார், பெரியார் போன்றோரின் வேடங்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்றார் அஜய்குமார்.