விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும்: பாமக வலியுறுத்தல்!
‘இந்தியாவில் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ என்று பாமக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னையில் ராமதாஸ் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையில் அதிக வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இதனால் தோல்வியடைந்த கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது.
உதாரணமாக, 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 28 லட்சத்து 78 ஆயிரத்து 674 வாக்காளர்கள் வாக்களித்தனர். அவர்களில் ஒரு கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 060 வாக்குகள் (40.80 விழுக்காடு) பெற்ற அதிமுகவுக்கு 134 சட்டமன்ற உறுப்பினர் பதவிகளும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்துள்ளது.
தமிழக வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 59.20 விழுக்காட்டினர் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்துள்ள போதிலும் அக்கட்சி ஆட்சி அமைப்பது உண்மையான ஜனநாயகமாக இருக்காது.
அதேபோல், அதிமுக, திமுக கூட்டணி தவிர மீதமுள்ள கட்சிகள் 22% வாக்குகளை அதாவது சுமார் 95 லட்சம் வாக்குகளை பெற்றுள்ள போதிலும் அவர்களுக்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி கூட கிடைக்கவில்லை. இது வாக்களித்த மக்களை புறக்கணிக்கும் செயலாகும். இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டுமானால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பலமுறை பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க விகிதாச்சார பிரதிநிதித்துவம் தான் சிறந்த வழியாகும். இந்த முறையில் தேர்தல் செலவும் தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதும் குறையும். எனவே, இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை பாமக வலியுறுத்துகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது நிச்சயம் வரவேற்புக்குரிய தீர்மானம் தான். அதே நேரத்தில் சாதிய ஆணவக் கொலை, சாதிக்கலவரம் உள்ளிட்ட சாதிய வன்முறைகளை ஒடுக்க கடுமையான சட்டங்களும், நடவடிக்கைகளும் வேண்டும் என்று எப்போது தீர்மானம் நிறைவேற்றுவீர்கள் மிஸ்டர் ராமதாஸ்…?