கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலையில் சீரற்ற தன்மையே நிலவியது. இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி 266வது போப்பாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் போப் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்துவந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி வந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி:

“போப் பிரான்சிஸ், இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தினார்” என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

போப் பிரான்சிஸ், இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன.

இரக்கமிகுந்த செயல்கள், மனிதநேயத்தில் நிலைக்கொண்ட மதநம்பிக்கை எனும் வளமான மரபினை அவர் விட்டுச் சென்றுள்ளார். அன்னாரது மறைவினால் தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.