டெஸ்ட் – விமர்சனம்

நடிப்பு: மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், மாஸ்டர் லிரிஷ் ராகவ், ஆடுகளம் முருகதாஸ், காளிவெங்கட், மோகன்ராம் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: எஸ்.சஷிகாந்த்
ஒளிப்பதிவு: விராஜ் சிங் கோஹில்
படத்தொகுப்பு: டி.எஸ். சுரேஷ்
இசை: சக்திஸ்ரீ கோபாலன்
தயாரிப்பு: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த்
ஓடிடி தளம்: நெட்ஃபிளிக்ஸ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் அர்ஜுன் (சித்தார்த்). ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக ஃபார்மில் இல்லாமல் அவர் தடுமாறுகிறார். எனவே, அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. அதனால், அர்ஜுன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறது. ஆனால், தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பாத அர்ஜுன், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே ஓய்வு குறித்து அறிவிக்க நினைக்கிறார். இதனால், அந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது மனைவி பத்மா (மீரா ஜாஸ்மின்). இவர்களுக்கு பள்ளிக்கூடம் செல்லும் வயதில் ஆதித்யா (மாஸ்டர் லிரிஷ் ராகவ்) என்றொரு மகன் இருக்கிறார்.
அர்ஜுனின் பள்ளித் தோழி குமுதா (நயன்தாரா). அர்ஜுனின் மகன் ஆதித்யா தற்போது படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர். அவருக்கும் அவரது கணவரும் விஞ்ஞானியுமான சரவணனுக்கும் திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான IVF சிகிச்சைக்கு ரூ.5லட்சம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், மனைவி குமுதாவிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் சொல்லிவிட்டு, ’ஹைட்ரோ ஃபியூயல்’ எனப்படும் தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் எரிபொருளைக் கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானி சரவணன், தனது கண்டுபிடிப்பிற்கு அரசின் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறார். தனது புதிய கண்டுபிடிப்பு கனவுக்காக ரூ.50லட்சம் வரை அவர் கடனாக வாங்கியிருக்கிறார். அந்தக் கடன் பிரச்னையும் நெருக்கடியும் அவரை இக்கட்டான சூழலுக்கு இழுத்துச் செல்கிறது.
இவ்வாறு கிரிக்கெட் வீரர் அர்ஜுன், பள்ளி ஆசிரியை குமுதா, விஞ்ஞானி சரவணன் ஆகிய மூன்று மனிதர்கள், மூன்று பலப்பரீட்சைகள் என விரியும் கதைக்களம், எவ்வாறு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் எனும் ஒரு புள்ளியில் இணைகிறது? இதில் யாரெல்லாம் தேர்ச்சி பெறுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு திரில்லர் பாணியில் விறுவிறுப்பாக விடை அளிக்கிறது ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

வெற்றி என்பது சாதாரணமாக கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து, அந்த வெற்றியை கடைசிவரை தன்வசப்படுத்திக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். அளவான நடிப்பு மூலம் தனது அழுத்தமான மனநிலையை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
வெற்றி பெற்றவன் பின்னால் செல்லும் உலகத்தைப் பார்த்து ஆத்திரம் கொள்ளும் தோல்வியுற்ற நபராக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். தனது கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாலும், இறுதியில் பணத்திற்காக எடுக்கும் வில்லன் அவதாரத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆசிரியை குமுதா எனும் கதாபாத்திரத்தில், சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறார் நயன்தாரா. குழந்தைக்காக ஏங்கும் பெண்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
சித்தார்த்தின் மனைவி பத்மாவாக வரும் மீரா ஜாஸ்மின், அவர்களது மகன் ஆதித்யாவாக வரும் மாஸ்டர் லிரிஷ் ராகவ், மற்றும் காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், மோகன்ராம் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இதுவரை தயாரிப்பாளராக மட்டும் வலம் வந்துகொண்டிருந்த எஸ்.சஷிகாந்த், இப்படத்தை எழுதி, இயக்கி, முதன்முறையாக இயக்குநர் ஆகியிருக்கிறார். தனது முதல் படத்தில் இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை களமாகக் கொண்டு, ஈகோவினால் வாழ்க்கையில் விளையாடும் மனிதர்களையும், அவர்கள் சந்திக்கும் சோதனைகளையும் நட்சத்திர நடிகர்களை சிறப்பாகக் கையாண்டு விறுவிறுப்பாகவும், சுவாராஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஷிகாந்த். உலகம் கொண்டாடும் வெற்றியாளர்கள் அந்த இடத்தை சாதாரணமாக அடைந்துவிடவில்லை என்பதையும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எஸ்.சஷிகாந்த், மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்களை கிரிக்கெட் விளையாட்டுடன் சேர்த்து அமைத்திருக்கும் திரைக்கதை ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கிறது.
இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலன், ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹில், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர்கள் என்.மதுசூதன் மற்றும் சுவேதா சாபு சிரில் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் நேர்த்திக்கும், இயக்குநரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
‘டெஸ்ட்’ – அபாரமான திரை ஆட்டம்; நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து, ரசித்து, மகிழலாம்!
ரேட்டிங்: 3.5/5