“என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான்!”: விக்ரம் உருக்கம்!

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசுகையில், ”இங்கு வந்தவர்கள் படத்தைப் பற்றி நிறைய விசயத்தை சொன்னார்கள். அதை கேட்டும், பார்த்தும் ரசித்தேன். நான் படத்தைப் பற்றி பேசுவதை விட படம் உங்களிடம் நிறைய பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது. பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.
‘சித்தா’ என்றொரு படத்தை பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்தபிறகு, ’இயக்குநர் அருண் குமார்’ என்று அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது. ‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்த படத்தை இயக்கினாலும் அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தை பார்த்தபிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் ’வீரதீர சூரன்’.
என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாக ‘சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அதற்காக முயற்சி செய்துகொண்டு தான் இருந்தேன். இயக்குநர் சொன்ன கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம். ஆனால் ஒரு எமோஷனலான படம். ‘சேதுபதி’ மாதிரி இருக்க வேண்டும், அதில் ‘சித்தா’ போன்றதொரு விசயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த மாதிரி படம் தான் ’வீரதீர சூரன்’. ரசிகர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம்.
இந்தப் படத்திற்கான பயணத்தின்போது என்னுடன் அருண் இருந்தார் என்பது மிகப் பெரிய பலமாக இருந்தது. இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருந்தது. அருண் குமார் என்னுடைய வாழ்க்கையில் ஒரு நண்பராகிவிட்டார்.
எஸ்.ஜே.சூர்யா ஒரு ராக் ஸ்டார். ஓய்வே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது கூட எங்கள் படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக தெலுங்கில் பேச உள்ளார்.
இந்தப் படத்தை நாங்கள் எந்த அளவிற்கு நேசித்து உருவாக்கினோமோ, அதே அளவிற்கு தயாரிப்பாளர் ரியா ஷிபுவும் நேசத்துடன் ஆதரவளித்தார். அற்புதமான தயாரிப்பாளர். அவருடைய எனர்ஜி ஸ்பெஷல் ஆனது. எதிர்காலத்தில் அவருடைய தந்தையை விட மிகப் பெரிய தயாரிப்பாளராக திகழ்வார்.
எனக்கு எப்போதும் ஜீ.வி.பிரகாஷ்குமார் லக்கி. என்னுடன் இணைந்து பணியாற்றிய படங்களில் எல்லாம் அனைத்து பாடல்களும் ஹிட். எல்லா இன்டர்வியூவிலும் அவருடைய இசை இன்னொரு கதாநாயகன் என்று சொல்லி இருக்கிறேன். அவர் என்னுடன் இணைந்து பணியாற்றிய எல்லா படங்களின் கதைகளும் வித்தியாசமானதாக இருந்தன. அவை எல்லாவற்றிலும் இசையும் முக்கியமானதாக இருந்தது. இதற்காக ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மிகப்பெரிய ரசிகன். அவர் நடித்துள்ள படங்களில் அவரை பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போது தான் அவருடைய நடிப்பை ரசித்தேன். அவர் இந்த படத்தில் அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அதில் அவர் ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.
சுராஜ் – படத்தில் மட்டுமல்ல, இன்டர்வியூவிலும் கலக்குகிறார். அது ஒரு மீம் கன்டென்ட்டாக மாறிவிட்டது. அவரும் ஒரு சிறந்த நடிகர். படத்தில் இடம்பெறும் 15 நிமிட நீளமான காட்சி ஒன்றில் அவர் வசனம் பேசிக்கொண்டே அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
துஷாரா விஜயன் – கலைவாணி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு சண்டை பயிற்சி கலைஞர் கூட நடிக்க தயங்கும் காட்சியில் இவர் துணிச்சலாகவும், அற்புதமாகவும் நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் நடிப்பு பேசப்படும். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் படம் என் அன்பான ரசிகர்களுக்கானது. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. இது உண்மை. நான் ஒவ்வொரு விசயத்தை செய்யும்போது உங்களை நினைத்து தான் செய்கிறேன். என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான்” என்றார்.