இவர்களின் தோல்வி இவர்களுக்கான வீழ்ச்சி அல்ல!
நானும் பார்க்கத்தான் செய்கிறேன். மக்கள் நலக் கூட்டணி தோல்வியையும் வைகோவையும் எள்ளி பல பதிவுகள் கண்ணில் படுகின்றன.
இவர்களின் தோல்வி இவர்களுக்கான வீழ்ச்சி அல்ல.
இன்னும் சில மாதங்கள் கழித்து பாருங்கள். உங்கள் ஊர் சார்ந்த பிரச்சினைக்காக நடக்கும் போராட்டங்களில் சிவப்பு சட்டைகள் வழக்கம் போல் தெரியும். சமூக நீதி பங்கப்படும் இடங்களில் இந்த முறுக்கு மீசை வந்து நிற்பார். உங்கள் ஊர் ஆற்றில் மண் அள்ளுவதற்கும், ஆலைக்கழிவு கலப்பதற்கும், பிற வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களுக்கும் தடை கேட்டு, கறுப்பு துண்டு ஒன்று, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடிக் கொண்டிருக்கும்.
அந்த கறுப்புத் துண்டைத்தான் அரசியல் ஞானம் அற்றவர் என கிண்டல் அடித்து மகிழ்கிறோம். அந்த சிவப்பு சட்டையைத்தான் ‘உண்டியல் குலுக்கி’ என நக்கல் அடிக்கிறோம். அந்த முறுக்கு மீசையைத்தான் இழிசாதி என ஒதுக்கி வைக்கிறோம்.
மீண்டும் சொல்கிறேன். இவர்களின் தோல்வி இவர்களுக்கான வீழ்ச்சி அல்ல. உங்களுக்கான வீழ்ச்சி. இந்த தேர்தலும் இவர்களின் முடிவு அல்ல.
கடந்த ஐந்து வருடங்கள் நடந்த காட்டு தர்பாரில் நொந்து, குயவனை வேண்டி, கொண்டு வந்தீர்கள் ஒரு தோண்டி. அதை பாதுகாக்கும் வக்கற்று, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்து விட்டீர்கள்.
இனியும் உங்கள் தெருமுனை போராட்டத்தில் சிவப்புத் துண்டு இருக்கத்தான் போகிறது. வாழ்வாதார பிரச்சினைக்காக கோர்ட்டில் கறுப்புத் துண்டு முழங்கத்தான் போகிறது. சமூகநீதி பிரச்சினைகளில் மீசை முறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறது.
ஆம், இனியும் இவர்கள் இருக்கத்தான் போகிறார்கள்.
இவர்களிடம் உங்கள் காரியங்களை சாதித்து வாழ்ந்துகொண்டு, பின் தோற்கடித்துவிட்டு, இறுதியில் கிண்டல் செய்யும் உங்களிடம் சொல்ல எனக்கு ஒன்று இருக்கிறது.
மல்லாக்க படுத்து துப்பிக் கொள்ளுங்கள். பிறகு, காட்டு தர்பார் நடத்த போய் முட்டுக் கொடுங்கள்.
– ராஜசங்கீதன் ஜான்