படவா – விமர்சனம்

நடிப்பு: விமல், சூரி, ஷ்ரிதா ராவ், கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி வைத்தியநாதன், ராமர் மற்றும் பலர்
இயக்கம்: கே.வி.நந்தா
ஒளிப்பதிவு: ராமலிங்கம்
படத்தொகுப்பு: வினோத் கண்ணா
இசை: ஜான் பீட்டர்
தயாரிப்பு: ஜே ஸ்டூடியோ இன்டர்நேஷனல் – எம்.ஜான் பீட்டர்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் கிராமத்தை சேர்ந்த நாயகன் வேலன் (விமல்) மலேசியாவில் பார் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஆட்குறைப்பு செய்ய நினைக்கும் பார் நிர்வாகம், சீட்டுக் குலுக்கிப் போட, வேலன் பெயர் வருகிறது. இப்படியாக வேலன் பார்வேலையை இழக்கிறார்.
வேலன் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை. ஆனால், சொந்த ஊர் திரும்பினால் ஊர் மக்கள் ஒன்றுகூடி தன்னை என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் நண்பர்களிடம் புலம்புகிறார். அவரது நண்பர்கள் காரணம் கேட்க, அவர் மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். (பிளாஷ்பேக் ஆரம்பம்)…
சொந்த ஊரில் வேலன், தன் நண்பர் உரப்புடன் (சூரி) சேர்ந்துகொண்டு, வேலைக்குச் செல்லாமல், வெட்டியாக ஊர் சுற்றி பொழுதைக் கழிக்கிறார்.

அந்த ஊரில் பருவமழை பெய்வதில்லை. ஊர் முழுக்க எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் கிராமமே வறண்ட பூமியாக மாறிவிட்டது. செங்கல் சூளை நடத்தி வரும் கே ஜி எஃப் ராம், கருவேலமரம் தனக்கான முதலீடு என்று அதை தெய்வமாக வணங்கி வருகிறார். அன்றாட வாழ்வாதாரத்திற்காக அக்கிராம மக்கள் அவரது செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்கின்றனர். செங்கல் சூளைக்கு விறகுகள் அதிக அளவில் தேவைப்படுவதால் வேலன் மற்றும் உரப்பு உதவியுடன் அக்கிராமத்தைச் சுற்றிலும் கருவேல விதைகளை தூவி கிராமத்தையே பொட்டல் காடாக மாற்றுகிறார்.
இந்நிலையில் வேலன் உரப்புவுடன் சேர்ந்துகொண்டு கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கில்லி, கோலி குண்டு, பம்பரம் விளையாடச் சொல்லித் தருவது, சொந்த அக்காவிடம் திருடி, மாமாவிடம் விற்று, மாமனையும் ஏமாற்றி பணம் பறிப்பது, ஊர் தூங்கும்போது நள்ளிரவில் பட்டாசு வெடித்து தொல்லை கொடுப்பது, டாஸ்மாக் செலவுக்கு சுடுகாட்டுக் கூரையை திருடுவது என ஊர் மக்களுக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுக்க முடியுமோ அவ்வளவு தொல்லை கொடுக்கிறார். இப்படி ஒட்டுமொத்த கிராமத்துக்கே பாரமாக இருக்கும் இவரது கொடுமை தாங்காமல், இவரை நம் நாட்டைவிட்டே துரத்த முடிவு செய்யும் ஊர்மக்கள், மொய்ப்பணம் வசூலித்து, அதைக்கொண்டு வேலனை மலேசியாவுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
பிளாஷ்பேக் முடிய…, வேலன் இல்லாமல் ஊர் நிம்மதியாக இருக்கிறது. அப்போது திடீரென்று மலேசியாவிலிருந்து திரும்பி வந்து இறங்குகிறார் வேலன். ஊர்மக்கள் தன்னை என்ன செய்வார்களோ என்ற பயத்துடன் வரும் அவரை, நண்பர் உரப்போடு சேர்ந்து மொத்த கிராம மக்களும் மாலை மரியாதையுடன் சிறப்பாக வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
கிராம மக்களின் மனமாற்றத்திற்கான காரணம் என்ன?, மக்களின் மனமாற்றம் வேலனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு கமர்ஷியல் பட பாணியில் விடை அளிக்கிறது ‘படவா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் வேலனாக விமல் நடித்திருக்கிறார். வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியைக் கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்ப்பது என்று ஒரு நடிகராக விமல் தொடர்ந்து செய்து வரும் வேலையை தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.
நாயகனின் நண்பர் உரப்பாக சூரி நடித்திருக்கிறார். நாயகனுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார். அவ்வப்போது பார்வையாளர்களை வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறார்.
நாயகியாக ஷ்ரிதா ராவ் நடித்திருக்கிறார். கால்நடை மருத்துவராக வரும் அவர், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எஃப் ராம் மற்றும் வினோதினி வைத்தியநாதன், ராமர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை கே.வி.நந்தா இயக்கியிருக்கிறார். கருவேல மரங்கள் மண்ணை மாசுபடுத்தும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டவை; அவை விவசாய நிலங்களை பாதிக்கின்றன; விவசாயத் தொழிலை சாத்தியமற்றதாக்குகின்றன; விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்குகின்றன என்ற கருத்தை அழகாகப் பதிவு செய்துள்ளார். நகைச்சுவையோடு கருத்தை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், திரைக்கதையில் நகைச்சுவை, காதல் ஆகியவற்றை பொருத்தமாக இணைத்துள்ளார்.
ஜான் பீட்டரின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, வினோத் கண்ணாவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
‘படவா’ – பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 2.5/5.