கிங்ஸ்டன் – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்யபாரதி, சேத்தன், அழகம்பெருமாள், இ.குமரவேல், ஷபுமோன் அப்துசமத், ஆண்டனி, ராஜேஷ் பாலசந்திரன், அருணாசலேஸ்வரன்.ப, பிரவீன், ஃபயர் கார்த்திக் மற்றும் பலர்
இயக்கம்: கமல் பிரகாஷ்
ஒளிப்பதிவு: கோகுல் பினாய்
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார், உமேஷ் கேஆர் பன்ஸல், பவானிஸ்ரீ
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. தங்களது கிராமத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியை ’சபிக்கப்பட்ட கடல் பகுதி’ என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப்பெண்களும் அவ்வப்போது மாயமாகி கடற்கரையில் பிணமாக ஒதுங்குகிறார்கள். 1982-ல் இறந்துபோன ஸ்டீபன் போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆவி தான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். மக்களை பாதுகாக்கும் பொருட்டு, யாரும் அங்கு மீன் பிடிக்க போகக் கூடாது என்று அரசு தடை விதிக்கிறது.
இந்நிலையில், உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷபுமோன்) வேலை பார்க்கும் மீனவ இளைஞர் கிங்ஸ்டன் (ஜி.வி.பிரகாஷ்குமார்), கடலுக்குள் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க, தன் நண்பர்களுடன் படகில் கடலுக்குள் செல்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகள் என்ன? அமானுஷ்ய சக்தியின் மர்மத்தை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா? தூவத்தூர் கிராம மீனவ மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திகில் திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, மீனவ இளைஞர் கிங்ஸ்டனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் நல்ல தேர்ச்சியும், முதிர்ச்சியும் தெரிகிறது. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு, காதல், கோபம், துணிச்சல், ஏக்கம் என சகல உணர்வுகளையும் உடல்மொழியில் அபாரமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தூள் பரத்தி, அதிரடி நாயகனாகவும் அடையாளம் காட்டியிருக்கிறார். அவர் கடலுக்குள் நிகழ்த்தும் சாகசங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
நாயகியாக, ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் திவ்யபாரதி நடித்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை குறைவு தான்; என்றாலும், அதை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
சாலமோன் என்ற கதாபாத்திரத்தில் சேத்தன் கொஞ்ச நேரம் மட்டும் வந்தாலும், வில்லத்தனத்தில் மிரட்டி, வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
ஸ்டீபன் போஸாக வரும் அழகம்பெருமாள், தாமஸாக வரும் ஷபுமோன், மார்டினாக வரும் குமரவேல், லிபினாக வரும் ஆண்டனி, காட்ஸனாக வரும் ராஜேஷ் பாலசந்திரன், பிலிப்ஸாக வரும் அருணாசலேஸ்வரன், பெஞ்சமினாக வரும் பிரவீன், கிரியேச்சராக வரும் ஃபயர் கார்த்திக் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான பொருத்தமான நடிப்பை வழங்கி, திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ். கடல் பின்னணியில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை கமர்ஷியல் சினிமாவுக்குரிய சுவாரஸ்யத்துடனும், பிரமாண்டத்துடனும், ஃபேண்டஸியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஒரே கதைக்குள், ஹாரர், த்ரில்லர், அமானுஷ்யம் என பல ஜானர்களை மிக்ஸ் செய்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். படத்தின் தொடக்கக் காட்சிகள் வழக்கமான படமாகச் சென்றாலும், தடையை மீறி கடலுக்குள் நாயகன் செல்லும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகவும் பிரமிப்பூட்டும்படியும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. பார்வையாளர்களுக்குப் படபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் இயல்பாகத் தருகின்றன. இயக்குநர் படத்தின் முற்பகுதியின் நீளத்தைக் குறைத்து, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
கிராபிக்ஸ் காட்சிகள் சிலிர்ப்பைத் தருகின்றன. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி ஆகியோரின் பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
‘கிங்ஸ்டன்’ – அமானுஷ்யப் பிரியர்களுக்கு நல்ல விருந்து!
ரேட்டிங்: 2.5/5