எமகாதகி – விமர்சனம்

நடிப்பு: ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா மற்றும் பலர்

கதை, திரைக்கதை, இயக்கம்: பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங்

படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்

இசை: ஜெசின் ஜார்ஜ்

தயாரிப்பு: ’நைசாட் மீடியா ஒர்க்ஸ்’ ஸ்ரீனிவாசராவ் ஜலகம்

பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)

நினைத்ததை சாதிக்காமல் விட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஆணை ‘எமகாதகன்’ என்றும், பெண்ணை ‘எமகாதகி’ என்றும் சொல்வார்கள். இங்கே பிணமான பின்பும், நினைத்ததை சாதிக்காமல் சுடுகாடு செல்ல மாட்டேன் என்று ஒரு பெண்ணின் பிணம் அடம் பிடிப்பதால் இப்படத்துக்கு ‘எமகாதகி’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமம். இங்கே ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஊர்த்தலைவர் செல்வராஜ் (ராஜு ராஜப்பன்), அவரது மனைவி சந்திரா (கீதா கைலாசம்), மகன் முத்து (சுபாஷ் ராமசாமி), நாயகியும் மகளுமான லீலா (ரூபா கொடுவாயூர்), கர்ப்பிணியாக இருக்கும் மருமகள் பிரேமா (ஹரிதா) ஆகியோர் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

நாயகி லீலா அவ்வப்போது மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்படுபவர். அப்போதெல்லாம் இன்ஹேலரை பயன்படுத்தி, தற்காலிக நிவாரணம் தேடிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

அவரது அண்ணனும் ஊர் தலைவரின் மகனுமான முத்து, தன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அம்மனின் கிரீடத்தை, இரண்டு நண்பர்களின் உதவியோடு திருடி, அதை அடமானம் வைத்து, சுயதொழில் தொடங்கி, அதில் நஷ்டம் அடைந்திருப்பவர். இன்னும் இரண்டு வாரங்களில் கோயில் திருவிழா நடைபெற இருக்கும் சூழலில், அம்மனின் கிரீடம் இல்லை என்று தெரிந்தால் குட்டு வெளிப்பட்டு மாட்டிக்கொள்வோம் என்று பதறும் முத்துவும் அவரது நண்பர்களும், கிரீடத்தை மீட்டு அது இருந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மீண்டும் வைத்து தப்பிப்பது எப்படி என்று தவிக்கிறார்கள்.

ஒருநாள் இரவு. வெளியே போயிருந்த ஊர்த்தலைவர் செல்வராஜ், மிகுந்த கோபத்தோடு வீட்டுக்கு வருகிறார். அவரது மனைவி சந்திரா போட்டுவைக்கும் சாப்பாட்டை, தட்டோடு வீசி எறிகிறார். “வெளிக்கோபத்தை சாப்பாட்டுலயா காட்டுறது?” என்று சொல்லும் சந்திராவின் கன்னத்தில் ஆத்திரத்தோடு அறைகிறார். “இப்ப எதுக்கு அம்மாவை அடிக்கிறீங்க?” என்று மகள் லீலா கேட்க, கெட்ட வார்த்தையில் திட்டியபடி அவரது கன்னத்திலும் ஓங்கி அறைகிறார் செல்வராஜ். இதனால் அழுதுகொண்டே தன் அறைக்குச் சென்றுவிடுகிறார் லீலா. நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த சந்திரா, தன் மகள் லீலா அவருடைய அறையில் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் லீலாவின் பிணத்தைக் கண்டு கதறி அழுகிறார்கள். தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது வெளியே தெரிந்தால் அது அவமானம், தங்கள் கௌரவத்துக்கு இழுக்கு என்பதால், பிணத்தை இறக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, லீலா மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக ஊராரிடம் பொய் சொல்லி விடுகிறார்கள்.

ஊர்த்தலைவரின் வீட்டு எழவு என்பதால் கிராமமே சோகமாக இருக்கிறது. ஊரார் அனைவரும் வந்து துக்கம் விசாரிக்கிறார்கள். சிலர் ஒப்பாரி வைக்கிறார்கள். இரவு நேரம் நெருங்குவதால், இறுதிச் சடங்கு செய்வதற்காக பிணத்தை கிராமத்து இளைஞர்கள் சிலர் தூக்க முயலுகிறார்கள். ஆனால், தூக்கவே முடியாத அளவுக்கு பாறாங்கல் போல் பிணம் அதிகமாக கனக்கிறது. இந்நிலையில், பிணம் லேசாக அசைவது கண்டு அனைவரும் நாலாபுறமும் தெறித்து ஓடுகிறார்கள்.

பின்னர் மீண்டும் பிணத்தை தூக்க முயற்சிக்க, கண்கள் மூடியபடியே பிணம் டக்கென்று எழுந்து உட்காருகிறது. இதைப் பார்த்து வீட்டிலிருந்த அனைவரும் வெளியே ஓடுகிறார்கள். அதன்பின் கட்டில் கால்களில் கயிறு கட்டி இழுக்க முயல, கயிறும் கால்களும் முறிந்து கட்டில் செங்குத்தாக நிற்க, பிணமும் கட்டிலை ஒட்டி நேராக நிற்கிறது. இதனால் அலறி ஓடும் கிராம மக்கள் பீதியுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு பிணம் அமானுஷ்யமாக நடந்துகொள்கிறது என்றால், அந்த பிணத்தின் ஆவி ஏதோ சொல்ல நினைக்கிறது என்பது நாட்டுப்புற நம்பிக்கை.

எனில், லீலாவின் ஆவி சொல்ல நினைப்பது என்ன? அதை எந்த வழியில் சொல்லுகிறது? அதை தெரிந்துகொண்டபின் கிராம மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘எமகாதகி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகி லீலாவாக ரூபா கொடுவாயூர் நடித்திருக்கிறார். அழகிய கிராமத்துப் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உயிரற்ற பிணமாக முக்கால்வாசி படம் முழுக்க நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், முகபாவனை, உடல்மொழி மூலம் நேர்த்தியாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டையும், அனுதாபத்தையும் பெறுகிறார் ரூபா கொடுவாயூர். இதற்குப்பின் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரும் என்று எதிர்பார்க்கலாம்.

நாயகியின் அப்பா செல்வராஜாக ராஜு ராஜப்பன், அம்மா சந்திராவாக கீதா கைலாசம், அண்ணன் முத்துவாக சுபாஷ் ராமசாமி, அண்ணி பிரேமாவாக ஹரிதா, காதலன் அன்புவாக நரேந்திர பிரசாத், முத்துவின் நண்பர்கள், குடிகாரர், போலீஸ் அதிகாரி, பாட்டி, கோயில் தர்மகர்த்தா, வெட்டியான் என ஊர் மக்கள் ஒவ்வொருவரும் இயல்பாகவும் பொருத்தமாகவும் நடித்து, இது சினிமா என்ற எண்ணமே வராமல் செய்துவிடுகிறார்கள்.

அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், முதல் படத்தின் மூலமே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். ஒரு சின்ன பட்ஜெட்டிற்குள் கதையை நூல் பிசகாமல் எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமோ அவ்வளவு சுவாரஸ்யமாக, திருப்திகரமாக சொல்லியிருக்கிறார். நம் மன்னூக்குரிய கதையைத் தேர்வு செய்து, படத்தின் தொடக்கத்திலிருந்தே தொய்வில்லாத அழுத்தமான திரைக்கதை அமைத்து, அனைத்து நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்புடன் புதுமையான கதைசொல்லல் மூலம் தனித்துவமான இயக்குநராக வெளிப்பட்டிருக்கிறார். பாராட்டுகள் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.

தஞ்சாவூர் கிராமத்தை அச்சு அசலாய் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நம்ப முடியாத கதைக்கு தன் கேமரா மூலம் நம்பகத் தன்மையை கொடுத்திருக்கும் சுஜித் சாரங், விறுவிறுப்பு குறையாத அளவுக்கு படத்தொகுப்பு செய்திருக்கும் ஸ்ரீஜித் சாரங், காட்சிகளுக்கு தனது பின்னணி இசையால் வலிமை சேர்த்திருக்கும் ஜெசின் ஜார்ஜ் ஆகியோர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டுக்கு உரியவர்களே.

‘எமகாதகி’ – புதிய அனுபவம்; நிச்சயம் கண்டு களிக்கலாம்

ரேட்டிங்: 4/5.