டிராகன் – விமர்சனம்

நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி

படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்

இசை: லியோன் ஜேம்ஸ்

தயாரிப்பு: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் (பி) லிட்.

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

பிளஸ்-டூவில் 96 சதவிகித மதிப்பெண்களும், கோல்டு மெடலும் பெற்று தேர்ச்சி அடையும் நாயகன் டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), அதே மகிழ்ச்சியுடன் அடக்க ஒடுக்கமாய் சென்று, தனது காதலை சக மாணவியிடம் வெளிப்படுத்த, அந்த மாணவியோ, “நீ நல்லா படிக்கிறே. குட் பாயா இருக்கிறே. எல்லாம் சரி தான். ஆனா பேட் பாய் தான் எனக்குப் பிடிக்கும்” என்று சொல்லி ராகவனின் காதல் புரப்போசலை நிராகரித்து விடுகிறார். இதனால், பெண்களுக்கு நன்றாக படிக்கும் நல்ல பையன்களை விட, அடாவடித்தனம் செய்யும் கெட்ட பையன்களைத் தான் பிடிக்கும் என்ற முடிவுக்கு வரும் ராகவன், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவுடன் தனது சாதுவான பெயரான ’டி.ராகவன்’ என்பதை ‘டிராகன்’ என்று மாற்றிக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தாமல், ஒழுங்காக வகுப்புக்குப் போகாமல், அடிதடி என்று ஒழுங்கீனமாகத் திரிகிறார். இதை ரசிக்கும் சக மாணவியான நாயகி கீர்த்தி (அனுபமா பரமேஸ்வரன்) அவரை காதலிக்கிறார்.

கல்விக் காலம் முடியும்போது, ஒரு சப்ஜெக்ட்டில் கூட பாஸாகாமல், 48 அரியர்ஸுடன் பட்டம் பெறாமலேயே கல்லூரியை விட்டு வெளியேறும் ராகவன், வேலை எதுவும் பார்க்காமல் வெட்டியாக, ஊதாரியாகத் திரிகிறார். இதனால் அவருடனான காதலை பிரேக்-அப் செய்யும் கீர்த்தி, அதிக சம்பளத்தில் நல்ல வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார்.

இதை அவமானமாகக் கருதும் ராகவன், எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவுடன், கீர்த்திக்குப் பாடம் புகட்ட, குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேற திட்டம் போடுகிறார். அதன்படி, பட்டம் பெற்றதாக மோசடியாக போலி சான்றிதழ்கள் வாங்கி, அவற்றை வைத்து சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பாதித்து கார், வீடு வாங்கி ஆடம்பரமாக வாழ்கிறார்.

இந்நிலையில், பெரும் செல்வந்தரான பரசுராம் (கே.எஸ்.ரவிக்குமார்) மகள் பல்லவிக்கும் (கயாடு லோஹர்), ராகவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அப்போது கல்லூரி முதல்வர் மயில்வாகனன் (மிஷ்கின்), ராகவன் போலி சான்றிதழ்கள் மூலம் செய்த தில்லுமுல்லுவைக் கண்டுபிடிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது ‘டிராகன்’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை.

கதையின் நாயகன் டி.ராகவன் என்ற டிராகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். கதாநாயகனாக அறிமுகமான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ’ரூ.100 கோடி வசூல் நாயகன்’ என்ற பெயரைப் பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன் இந்த இரண்டாவது படத்திலும் அப்பெயரை தக்க வைத்துக்கொள்வார் என்று நம்பலாம். கெத்தான கல்லூரி மாணவராக, காதலியிடம் சமாளிக்கும் இடங்களிலும், நண்பர்களுடன் லூட்டியடிக்கும் இடங்களிலும் தனக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். தனது நடிப்பில் பல்வேறு முகபாவங்களை வெளிக்காட்ட அவருக்கு இந்தப் படம் அருமையான வாய்ப்பு, அதைச் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார். கல்லூரி முதல்வரை முறைத்தபடி கல்லூரியை விட்டு வெளியேறுவது, காதலி யதார்த்தம் உணர்த்திச் செல்லும்போது குமுறுவது, உண்மை அறிந்து வந்து நிற்கும் கல்லூரி முதல்வரின் காலில் விழுந்து கதறுவது என நடிப்பில் இன்னொரு உயரம் தொட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

கதையின் நாயகி கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். துடிப்பான காதலி, பொறுப்பான முன்னாள் காதலி என்ற இரண்டு நிலைகளிலும் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

மற்றொரு நாயகி பல்லவியாக வரும் கயாடு லோஹர் அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

கல்லூரி முதல்வர் மயில்வாகனன் கதாபாத்திரத்தில் வரும் மிஷ்கின், பக்குவமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்.

நாயகனின் அப்பா தனபாலாக வரும் ஜார்ஜ் மரியான், அம்மா சித்ராவாக வரும் இந்துமதி, நாயகன் பணிபுரியும் சாஃப்ட்வேர் கம்பெனியின் துணைத் தலைவராக வரும் கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது நாயகியின் பணக்கார தந்தை பரசுராமாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், அன்புவாக வரும் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான், தேனப்பன் உள்ளிட்டோர் தங்களது நிறைவான நடிப்பை குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.

சினேகாவும், இவானாவும் எதிர்பாராத நேரத்தில் திடீரென சிறப்புத் தோற்றத்தில் தோன்றி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.

‘ஓ மை கடவுளே’ வெற்றிப்படத்தை எழுதி இயக்கிய அஷ்வத் மாரிமுத்து, இந்தப் படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். நேர்மையோடு வாழ்வது எவ்வளவு அவசியம் என்ற கதைக்கருவில் நட்பு, காதல், காமெடி என பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து, கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். ஒழுங்கீனமான மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் விழிப்புணர்வுப் படமாகவும் இது அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

லியோன் ஜேம்ஸின் இசை, நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘டிராகன்’ – அற்புதக் கருத்துடன் கூடிய கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படம்; காணத் தவறாதீர்கள்!

ரேட்டிங்: 3.75/5