நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – விமர்சனம்

நடிப்பு: பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், ஆர்.சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: தனுஷ்

ஒளிப்பதிவு: லியான் பிரிட்டோ

படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே.

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

தயாரிப்பு: வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர்: கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

இயக்குநர் தனுஷ் எழுதி இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. குடும்ப சென்டிமெண்ட் ஜானரில் ‘பவர் பாண்டி’, அதிலிருந்து வித்தியாசமான அதிரடி ஆக்‌ஷன் ஜானரில் ’ராயன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த தனுஷ், மேற்கண்ட இரண்டு ஜானர்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட 2K தலைமுறையினரின் காதல் மற்றும் நட்பு ஜானரில் இந்த மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். முதல் இரண்டு படங்களில் நடிக்கவும் செய்திருந்த தனுஷ், இந்த மூன்றாவது படத்தில் தான் நடிக்காமல், முற்றிலும் புதியவர்களை நடிக்க வைத்திருக்கிறார்.

“நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது” என துவங்கும் கண்ணதாசனின் பிரசித்தி பெற்ற பாடல், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. இப்பாடலின் முதல் வரி தனது கதைக்கருவுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால், அதையே தனது படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் தனுஷ்.

காதல் பிரேக்-அப் தந்த சோகத்தில் விரக்தியாக இருக்கும் நாயகன் பிரபு (பவிஷ் நாராயண்) திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பல மாதங்களாக பிடிவாதமாக இருக்கிறார். அவரது நிலைமையைப் புரிந்துகொண்டு பொறுமை காக்கும் அவரது அப்பாவும் (ஆடுகளம் நரேன்), அம்மாவும் (சரண்யா பொன்வண்ணன்) இனியும் பொறுக்க முடியாது என்று ஒருநாள் அவரை படுக்கையிலிருந்து எழுப்பி, ஆளுக்கொரு கன்னத்தில் அறைந்து, “லவ் பிரேக்-அப்பை நினைச்சு நீ புலம்பிட்டு திரியறதை நாங்க எவ்வளவு நாள் தான் பாத்துட்டு பொறுமையா இருக்கிறது? உனக்கு நாங்க கல்யாணம் பண்ணிப் பார்க்கணும், வா…” என்று கட்டாயப்படுத்தி பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள்.

பெண்ணின் வீட்டுக்குச் சென்றால், பிரபுவின் பள்ளித் தோழி பிரீத்தி (பிரியா பிரகாஷ் வாரியர்) தான் அவர்கள் பார்க்க வந்திருக்கும் பெண் என்பது தெரிய வருகிறது. உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாததால், இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள சிறிது காலம் வேண்டும் என்று அனுமதி பெற்று, டேட்டிங் செய்கிறார்கள். இருவருக்குள்ளும் இணக்கம் ஏற்பட்டு வரும் சமயத்தில், பிரபுவின் முன்னாள் காதலியான நாயகி நிலாவிடமிருந்து (அனிகா சுரேந்திரன்) திருமண அழைப்பிதழ் வர, உடைந்துபோகிறார் பிரபு. இது தெரிந்து, “உன் காதல் ஏன் பிரேக்-அப் ஆச்சு?” என்று பிரீத்தி கேட்க, அது தொடர்பான ஃபிளாஷ்பேக்கைச் சொல்லுகிறார் பிரபு…

நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்தவரும் சமையல் கலைஞருமான பிரபுவும், கோடீஸ்வரரின் (சரத்குமார்) மகளும் சாப்பாட்டு விரும்பியுமான நிலாவும் ஒரு பார்ட்டியில் சந்தித்து காதல் வயப்படுகிறார்கள். காதலர் பிரபுவை தன் ஆடம்பர பங்களாவுக்கு அழைத்துச் சென்று தனது பணக்காரத் தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் நிலா. ஆனால் நிலாவின் தந்தைக்கு பிரபுவை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால், சில நாட்கள் பிரபுவுடன் பழகிப் பார்த்து, அவன் உனக்கு ஏற்றவனாக இருப்பானா என்பதைக் கண்டறிந்து தன் முடிவைச் சொல்வதாகக் கூறுகிறார் அவர். அதன்படி நிலாவின் தந்தையும் பிரபுவும் பழக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நிலாவின் தந்தையைப் பற்றிய ஓர் உண்மை தெரிய வர, (அது என்ன உண்மை என்பதை படம் பார்த்துத் தெரிந்துகொள்க!) அதிர்ச்சி அடையும் பிரபு, அது பற்றி வெளியே சொல்லாமல், நிலாவை வெறுப்பது போல் பாசாங்கு செய்து, காதலை முறித்துக்கொள்கிறார். பிரபுவின் மனமாற்றத்துக்கான காரணம் தெரியாத நிலாவும் விலகிப்போய், தன் தந்தை கைகாட்டிய மாப்பிள்ளையை மணக்க சம்மதித்து விடுகிறார்.

பிரபுவின் இந்த காதல் பிரேக்-அப் ஃபிளாஷ்பேக்கைக் கேட்ட பிரீத்தி, “நிலாவின் அழைப்பிதழை ஏற்று அவளுடைய திருமணத்துக்குப் போ. நீ திரும்பி சிங்கிளாக வந்தால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ‘பொடி’ வைத்துச் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன்படி நிலாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவாவுக்கு கிளம்பிப் போகிறார் பிரபு. அதன்பின் என்ன நடந்தது? திட்டமிட்டபடி நிலா திருமணம் நடந்ததா, இல்லையா? பிரபு – பிரீத்தி திருமணம் நடந்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு ருசிகர சம்பவங்களுடன் விடை அளிக்கிறது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் பிரபுவாக புதுமுகம் பவிஷ் நாராயண் நடித்திருக்கிறார். இவர் தனுஷின் அக்கா மகன் என்பதால், ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’ காலகட்டத்து இளம் தனுஷின் சாயலில் இருக்கிறார். நடை, உடை, பாவனை, உடல்மொழி ஆகியவற்றில் மட்டுமல்ல, குரலிலும் தனுஷின் சாயல் இருக்கிறது. (இவையெல்லாம் உயிரியல் ரீதியிலான மரபணு செய்யும் மாயம்!) படம் முழுக்க பவிஷ் நாராயண் இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு புதுமுகம் என்ற எண்ணமே வராத அளவுக்கு, தனது முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகர் போல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் தனது நேர்த்தியான நடிப்பால் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் காதலியின் திருமணத்தில் இவர் செய்யும் அலப்பறைகள் வேற லெவல்! பாராட்டுகள் பவிஷ் நாராயண்.

நாயகனின் நண்பன் ராஜேஷ் கதாபாத்திரத்தில் மாத்யூ தாமஸ் நடித்திருக்கிறார். படம் முழுக்க நாயகனுடன் பயணிக்கும் இவர் காமெடியில் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருக்கிறார். உடல்மொழியாலும், பன்ச் வசனத்தாலும் அவ்வப்போது திரையரங்கை சிரிப்பொலியால் அதிரச் செய்திருக்கிறார். தமிழ் திரையுலகில் தற்போது நிலவும் காமெடி நடிகர்களுக்கான பஞ்சத்தை இவர் போக்குவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

நாயகி நிலாவாக அனிதா சுரேந்திரன் நடித்திருக்கிறார். ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும், நடிப்பில் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.

நாயகனின் பள்ளித் தோழி ப்ரீத்தியாக வரும் பிரியா பிரகாஷ் வாரியரும், படத்தின் இரண்டாம் பாதியில் திருமண ஈவன்ட் மேனேஜர் அஞ்சலியாக வரும் ரம்யா ரங்கநாதனும் தங்களது பக்குவப்பட்ட கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக முதிர்ச்சியான நடிப்பை வழங்கி பார்வையாளர்களின் மனதில் நிற்கிறார்கள்.

நாயகியின் பணக்கார அப்பாவாக சிறப்புத் தோற்றத்தில் வரும் சரத்குமார், நாயகனின் அன்பான அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், பாசமுள்ள அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

வெங்கடேஷ் மேனன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ். டிரெய்லரில் சொன்னது போல ‘யூஷுவலான லவ் ஸ்டோரி’யாகவே விரிகிறது திரைக்கதை. அதேநேரத்தில், ‘குக் இல்ல, ஃசெப்’ என்று சொல்லும் நாயகன், ‘கருவாட்டுக் குழம்பு’ என்றாலே ஏங்கும் நாயகி என்று கதாபாத்திர வடிவமைப்புகளை நன்றாகவே படைத்திருக்கிறார் எழுத்தாளர் தனுஷ். அதேபோல, துணை கதாபாத்திரங்களின் பின்கதைகளையும் நன்றாகவே எழுதியிருக்கிறார். பல இடங்களில் காமெடி வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. நாயகனின் நண்பனாக வரும் மாத்யூ தாமஸ் செய்யும் ரகளைகளும் சரளமாக எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல, நாயகன் பிரபுவுக்கும் திருமண ஈவன்ட் மேனேஜர் அஞ்சலிக்கும் இடையிலான நட்பும் பாராட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

என்ன தான் ‘யூஷுவலான லவ் ஸ்டோரி’ என்று இயக்குநர் தனுஷ் தன்னடக்கத்துடன் சொன்னாலும், காதலின் ஆழம், அழுத்தம், ஆனந்தம், தோல்வி ஆகிய எல்லாவற்றையும் தனது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் பாணியில் அழகாக, கச்சிதமாக, ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் தனுஷ். தடாலடி திருப்பங்கள், சஸ்பென்ஸ், ரத்தம், வன்முறை எதுவும் படத்தில் இல்லாதது மட்டுமல்ல, எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தபோதிலும் துளியளவும் ஆபாசக் கலப்பில்லாமல் காட்சிகளை அமைத்திருப்பதற்காகவும் இயக்குநர் தனுஷுக்கு வாழ்த்துகளுடன் பூச்செண்டு கொடுக்கலாம். ஆரம்பம் முதல் இறுதி வரை போரடிக்காமல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்று, தன்னை திறமையுள்ள இயக்குநராக மீண்டும் நிரூபித்துள்ளார் தனுஷ்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட் என்பதால், பாடல் காட்சிகள் தொடங்கும்போதே திரையரங்கில் விசில் பறக்கிறது. பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்து, படத்துடன் ஒன்றச் செய்கிறது.

லியான் பிரிட்டோவின் ஒளிப்பதிவு, ஜாக்கியின் கலை இயக்கம், பிரசன்னாவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ – நண்பர்களுடன் மட்டுமல்ல, குடும்பத்துடனும் ஜாலியாகப் போய், பார்த்து ரசித்து, சந்தோஷமாக வரலாம்!

ரேட்டிங்: 3.75/5