ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி: சீமான் கட்சி டெபாசிட் இழந்தது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் மட்டுமே பெற்றார். சீதாலட்சுமி உள்பட ஏனைய 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

வாங்கிய வாக்கு விவரம் (தபால் வாக்குகள் சேர்த்து):
வி.சி.சந்திரகுமார் (திமுக) -1,15,709 (74.7%)
சீதாலட்சுமி (நாதக) – 24,151 (15.59%)
நோட்டா -6,101 (3.94%)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் தபால் வாக்குகளையும், அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி நடந்தது. 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பழுதான மூன்று இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டு மொத்தம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 74.7 சதவீத வாக்குகளை அவர் பெற்றார்.

டெபாசிட் இழந்த சீமான் கட்சி:

ஈரோடு கிழக்கில் பதிவான, செல்லத்தக்க 1,54,990 வாக்குகளில், 16.7 சதவீதம், அதாவது 25,883 வாக்குகள் பெற்றால் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் பெற முடியும். இந்நிலையில், 20 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளை மட்டுமே பெற்றார். 15.59% வாக்குகளை நாதக வேட்பாளர் பெற்றார். இதனால் அவர் டெபாசிட் இழந்தார்.