விடாமுயற்சி – விமர்சனம்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2025/02/vidaamuyarchi1.jpg)
நடிப்பு: அஜித்குமார், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், ரெஜினா கஸண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியன், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் மற்றும் பலர்
இயக்கம்: மகிழ் திருமேனி
ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்
படத்தொகுப்பு: என்.பி.ஸ்ரீகாந்த்
இசை: அனிருத்
தயாரிப்பு: ’லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா
’துணிவு’ திரைப்படத்தை அடுத்து, மிக நீண்ட இரண்டாண்டு இடைவெளிக்குப்பின் வெளியாகும் அஜித் படம்; ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’, ’கலகத் தலைவன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தனித்துவமான இயக்குநர் என பெயரெடுத்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படம்; அவர் முதன்முதலாக அஜித்துடன் இணைந்துள்ள படம்; 1997-ல் வெளியான ‘பிரேக் டௌன்’ என்ற ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்கி, தழுவி, எடுத்துள்ள படம்; பிரமாண்ட தயாரிப்பாளர் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தயாரித்துள்ள படம் என்பன போன்ற பல காரணங்களால் அஜித் ரசிகர்களிடம் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. உலகமெங்கும் சுமார் 1000 திரையரங்குகளில் தற்போது வெளியாகியிருக்கும் இப்படம், அது ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
![](https://www.heronewsonline.com/wp-content/uploads/2025/02/vidaamuyarchi.jpg)
நாயகன் அர்ஜுனும் (அஜித்குமார்), நாயகி கயலும் (த்ரிஷா கிருஷ்ணன்) காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாக்குவில் வசித்து வருபவர்கள். அவர்களது இனிய இல்லற வாழ்க்கையின் அடையாளமாக கயல் கர்ப்பம் தரிக்கிறார். மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கர்ப்பம் கலைந்துவிடுகிறது. மேலும், கயலால் இனி ஆயுளுக்கும் கர்ப்பம் தரிக்க இயலாது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் கூறிவிடுகிறார் மருத்துவர்.
இதன்பின் தம்பதியருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில், வேறொரு இளைஞருடன் ‘திருமணம் கடந்த உறவு’ தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 12 ஆண்டுகால திருமண வாழ்வை முறித்துக்கொள்ள விரும்புவதாகவும் அர்ஜுனிடம் தெரிவிக்கிறார் கயல். இத்தனைக்குப் பிறகும் மனைவி மீது தீராக்காதல் கொண்டிருக்கும் அர்ஜுன், “பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வோமே” என்று வேண்டுகிறார். ஆனால், விவாகரத்து என்ற முடிவில் பிடிவாதமாக இருக்கும் கயல், ‘ஒன்பது மணி நேர கார்ப்பயண தூரத்தில்’ இருக்கும் தன் பிறந்த வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார்.
மனைவியின் பிடிவாதம் வேதனை அளித்தாலும், அவரது முடிவுக்கு மதிப்பளித்து அதை ஏற்றுக்கொள்கிறார் அர்ஜுன். மனைவியோடு சேர்ந்திருக்க கடைசி வாய்ப்பு என்ற வகையில், அவரை அவரது சொந்த ஊருக்கு தானே காரில் கொண்டுபோய் விட அனுமதி கோருகிறார் அர்ஜுன். கயல் சம்மதிக்க, இருவரும் காரில் கிளம்பிப் போகிறார்கள்.
இவர்களது காரை இன்னொரு வாகனத்தில் வரும் மைக்கேல் (ஆரவ்) உள்ளிட்ட சில இளைஞர்கள் பின்தொடர்வது, முந்திச் சென்று கலாட்டா செய்வது என ரவுடித்தனம் பண்ணுகிறார்கள். அவர்களை மிகப் பொறுமையாக சாதுவாகக் கையாண்டு, அறிவுரை கூறிவிட்டு பயணத்தைத் தொடர்கிறார் அர்ஜுன்.
வழியில், ஒரு பெட்ரோல் பங்க்கில், இவர்களுக்கும், கண்டெயினர் லாரி ஓட்டிவரும் ரக்ஷித் (அர்ஜுன்) மற்றும் அவரது மனைவி தீபிகா (ரெஜினா கஸண்ட்ரா) ஆகியோருக்கும் இடையில் சிறு அறிமுகம் ஏற்பட்டு, பின் இன்முகத்துடன் பிரிந்து போகிறார்கள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊரோ, செல்போன் சிக்னலோ, பெரிய போக்குவரத்தோ இல்லாத வனாந்திரப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது அர்ஜுன் – கயல் கார் பழுதாகி நின்றுவிடுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கையில், கண்டெயினர் லாரி வருகிறது. அதிலிருந்து இறங்கும் ரக்ஷித்தும், அவரது மனைவி தீபிகாவும் அர்ஜுன் தம்பதியரின் இக்கட்டான நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். “கயலை நாங்க கூட்டிச் சென்று பக்கத்தில் இருக்கும் கஃபேயில் இறக்கி விடுகிறோம். நீங்க காரை ரிப்பேர் பார்த்து எடுத்து வந்து அந்த கஃபேயிலிருந்து கயலை கூட்டிட்டுப் போங்க” என்று சொல்கிறார்கள். இந்த யோசனையை ஏற்று, கயலை ரக்ஷித் – தீபிகா தம்பதியருடன் கண்டெயினர் லாரியில் அனுப்பி வைக்கிறார் அர்ஜுன்.
தனது காரை சரி செய்தபின், அதை எடுத்துக்கொண்டு கஃபேவுக்கு வரும் அர்ஜுன், அங்கு கயல் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல இடங்களில் தேடி அலைகிறார். பலன் இல்லை.
கயல் எங்கே போனார்? அவர் கடத்தப்பட்டாரா? அல்லது தானாகவே மாயமானாரா? வழி நெடுகிலும் வம்பு பண்ணியபடி வந்த மைக்கேல் உள்ளிட்ட ரவுடிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன? வழியில் உதவிக்கரம் நீட்டிய ரக்ஷித் – தீபிகா தம்பதியர் யார்? அவர்களின் பின்னணி என்ன? அர்ஜுன் தன் மனைவியை கண்டுபிடித்து மீட்டாரா, இல்லையா? விவாகரத்து எண்ணத்தைத் துறந்து கயலும், அர்ஜுனும் மீண்டும் இணைந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். மூன்று விதமான அழகிய லுக்குகளில் வருகிறார். வழக்கமான மாஸ் பில்டப்புகளோ, பஞ்ச் வசனங்களோ இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு, ஓர் எளிய மனிதராக, சாதாரண குடும்பத் தலைவராக அருமையாக, அசத்தலாக நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத அழுத்தமான காதல், விவாகரத்து கோரும் மனைவி மீதும் மாறாத பாசம், மனைவியைக் காணோம் என்ற பதற்றம், அவரை கண்டுபிடிக்க முடியாத ஆற்றாமை என அத்தனை உணர்வுகளையும் துல்லியமாகக் கடத்தி, பார்வையாளர்களை வசப்படுத்தியிருக்கிறார். எந்த மாஸ் ஹீரோவும் ஏற்கத் தயங்கும் இந்த கதாபாத்திரத்தைத் துணிந்து ஏற்று, அதில் நேர்த்தியாக நடித்து, நூறு சதவிகிதம் நியாயம் சேர்த்திருக்கும் அஜித்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நாயகி கயல் கதாபாத்திரத்தில் த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். கணவரை முதலில் கொண்டாட்டமாக காதலிப்பது, அதன்பின் வேறு ஒருவருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கணவரிடமே கூறி விவாகரத்து கோருவது என்ற வித்தியாசமான, துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று, தனது அழுத்தமான நடிப்பால் அதை மெருகேற்றியிருக்கிறார் த்ரிஷா. அவர் எப்போதும் போல இதிலும் அழகாக இருப்பது பிளஸ்.
கண்டெயினர் லாரி உரிமையாளர் ரக்ஷித் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். ஸ்டைலும், ஆக்ஷனும் நிறைந்த கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது மனைவி தீபிகா கதாபாத்திரத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ஒரு சர்பிரைஸ். அதற்குத் தேவையான துடிப்பான, மிரட்டலான நடிப்பைக் கொடுத்து திகைக்க வைத்திருக்கிறார்.
ரவுடித்தனம் செய்யும் மைக்கேலாக வரும் ஆரவ், நாயகி கயலின் தோழி அனுவாக வரும் ரம்யா சுப்பிரமணியன், டாக்டர் மனோகர் சந்திரசேகராக வரும் ரவி ராகவேந்திரா, மற்றும் நிகிலாக வரும் நிகில் சஜித், பைஜுவாக வரும் சஞ்சய் கணேஷ் சரவணன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
’பிரேக் டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் கதையைத் தழுவி இந்த ’விடாமுயற்சி’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒண்ணேமுக்கால் மணிநேர ஹாலிவுட் படத்தை அப்படியே மறுஆக்கம் செய்யாமல், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் செய்து இரண்டரை மணி நேர படமாகக் கொடுத்திருக்கிறார். அஜித் ரசிகர்களுக்கு மட்டுமாக இல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களுக்காகவும் இதை படைத்திருக்கிறார். அதனால் வழக்கமான அஜித் படத்துக்கான ஓப்பனிங் சாங், அடுத்து ஒரு ஃபைட் என்பது போன்ற சம்பிரதாயமான பாணியில் இல்லாமல், ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளையும் அவனது உணர்வுகளையும் வெளிக்கொணரும் விதமாக புதுமையாக திரைக்கதையை அமைத்து, அதை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்று, ரசிக்கும்படியாக இயக்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் மகிழ் திருமேனி.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கும் விதமாக பயணித்திருக்கிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மண்மேடுகளாக காட்சியளிக்கும் அஜர்பைஜான் நாட்டுப்புற நில அமைப்பை, அதன் அழகிய வெறுமையை, தன் கேமராவில் அள்ளி வந்து, இந்த சஸ்பென்ஸ் – ஆக்ஷன் த்ரில்லருக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டும் விதத்தில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.
சண்டைக் காட்சிகளை மயிர்க்கூச்செரியும் வகையில் சிறப்பாக வடிவமைத்துள்ளார் சண்டை வடிவமைப்பாளர் சுப்ரிம் சுந்தர்.
’விடாமுயற்சி’ – அனைவருக்குமான நல்ல முயற்சி! குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5