முருகன் சைவபூசையை விரும்பக்கூடிய கடவுளே இல்லை!
முருகனுக்கு கிடா வெட்டும் வழக்கம் உண்டு; இலக்கிய சான்றுகள் இருக்கு.
முருகன் இந்து கடவுள் அல்ல, தமிழ் தலைவன்..
தமிழ்நாட்டு அரசு மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கும் சங்கிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..
திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் அதன் பரிவார அமைப்புகள் கூச்சலிடுகின்றன. அதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது ‘உயிர்ப்பலி’யால் முருகனின் புனிதத்தன்மை கெடுகிறதாம்..
முதலாவதாக முருகன் சைவப்பூசையை விரும்பக்கூடிய கடவுளே இல்லை.
சங்க இலக்கியங்களில் முருகனுக்கு ‘ஆடு பலி’யிடப்பட்டதற்கு பல சான்றுகள் உள்ளன.
“மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் ”- குறுந்.263
ஆட்டின் கழுத்தை அறுத்து அதன் குருதியை தினையரிசியோடு கலந்து படையலாக வைக்கப்பட்டதைக் குறிக்கும் பாடல்.
“முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
………
சிறு மறி கொன்று, நறு நுதல் நீவி”
-குறுந். 362
முருக வழிபாட்டில், ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் குருதியை நெற்றியில் பூசிக்கொண்டதைக் குறிக்கும் பாடல்.
“வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
அன்னை அயரும் முருகு நின்” – நற்.47
வருத்தும் முருகனைத் தணிப்பதற்காக ஆட்டுக்குட்டியை அறுத்து பலியிடப்பட்டதைக் குறிக்கும் பாடல்.
ஆக முருகன் சைவப்பூசையை ஏற்கும் கடவுளல்ல. (அவன் கடவுளே அல்ல; தெய்வம் என்பது வேறு.)
பிற்காலத்தில் எழுந்த பார்ப்பனிய மேலாதிக்கத்தின் காரணமாகவும் வைதீக சமயத்தின் எழுச்சி காரணமாகவும் அவன் பெருந்தெய்வமாக்கப்பட்டு, சைவக் கடவுளாக மாற்றப்படுகிறான். அதற்கு பிறகு தான் இந்த சைவ உணவு எல்லாம் அவனுக்கு படையலாக்கப்படுகிறது.
உண்மையில் பழமையை பாதுக்காக்கத் துடிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அங்கு ‘ஆட்டுக்குட்டி’யைத் தானே பலியிட வேண்டும்?
அடுத்ததாக, அவர்களின் வாதத்தின்படி, அங்கு ‘உயிர்ப்பலி’யிடுவது முருகனின் புனிதத்தை கெடுக்கும் என்று வைத்துக் கொண்டால் கூட அங்கு இஸ்லாமியர்கள் மட்டும் தான் ‘உயிர்ப்பலி’ கொடுக்கிறார்களா?
இல்லை. திருப்பரங்குன்ற மலையைச் சுற்றியுள்ள ‘பேச்சியம்மன் கோவில்’, ‘வெயிலுகந்த அம்மன்’, ‘மலையடி கருப்பர்’ ஆகிய தெய்வங்களுக்கும் ‘உயிர்ப்பலி’ கொடுக்கப்படுகிறது. அதெல்லாம் இந்த சங்கிகளின் கண்களுக்குத் தெரியாமலா இருக்கும். அவர்களுக்கும் நிச்சயம் இது தெரியும். ஆனால், அங்கு பலியிடக்கூடாது என்று இவர்களால் போராட முடியாது. போராட்டம் என்ன, பேசக்கூட முடியாது. காரணம், இந்துக்களே ‘செவுள்ல’ ரெண்டு வைத்து அனுப்பிவிடுவார்கள்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸோட இஸ்லாமிய வெறுப்புக்கு வட நாட்டில் இராமன் தேவைப்பட்டான். தமிழ்நாட்டில் ராமன் பெயரைச் சொல்லி கலவரம் செய்ய முடியாது, பிச்சை தான் எடுக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் முருகனைத் தூக்கியுள்ளார்கள். மற்றபடி இவர்களுக்கு முருகன் மீது அக்கறையெல்லாம் கிடையாது.
-பெருஞ்சித்திரன்