“சங்கியாக என்னால் செயல்பட முடியாது”: நாதக-விலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா!
நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் தொடர்ச்சியாக விலகி மற்ற கட்சிகளில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வரிசையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தை 5 பக்க கடிதமாக சீமானுக்கு எழுதியுள்ளார் ஜெகதீச பாண்டியன். அது வருமாறு:
அண்ணா, இது போல் எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்தது இல்லை. காலம் பொல்லாதது. என்னை இந்த நிலைமைக்கு தள்ளியது நீங்கள் தான். கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டாகியும் நீங்கள் அமைப்பை கட்டமைக்க கவனம் செலுத்தவில்லை. அமைப்பை பற்றியும், அமைப்பு விதியைப் பற்றியும் நாங்கள் பேசினால் அதீத கோபம் அடைகிறீர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் எழுதி கொடுத்த அமைப்பு விதியை நீங்கள் இன்னும் கூட பார்க்கவில்லை என்பதை பலமுறை சுட்டிகாட்டியும் பயன் இல்லை. கட்சி வளர வளர உங்கள் நம்பிக்கை அதிகமாகி அது அதிகாரமாக மாற, உங்களிடமிருந்த எளிமையும் உறவோடு பேசும் இனிமையும் காணாமல் போய்விட்டது. வேகமாக மாறும் உலகில் கசியும் இரகசிய தகவல்களால் ஏற்படும் பாதிப்புகளை விட பகிரப்பட்ட உண்மையான தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது.
இதை உணராமல் உங்களுடனும் உங்கள் பின்னாலும் மக்களிடம் அறிமுகமானவர்கள், புகழ் பெற்றவர்கள், கட்சிக்கு வந்து தனது உழைப்பாலும் கட்சி கொடுத்த வாய்ப்பாலும் உயர்ந்தவர்கள் சிலரை நா வன்மையாலும் சிலர் அவமானப்படுத்தப்பட்டு அவர்களாகவே வெளியேறும்படியும் செய்தீர்கள். இதையெல்லாம் நான் பலமுறை உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளேன். கட்சியில் அதற்கு நீங்கள் கொடுத்த பதில், ’தம்பீ, பேருந்தில் 50 பேர் உட்கார்ந்து இருப்பார்கள். ஒருவர்தான் ஓட்ட முடியும்’ என்பீர்கள். ஆனால் உங்களோடு அந்த பேருந்தில் ஏறியவர்கள் எல்லாம் அறிவார்ந்த ஓட்டுநர்கள் அண்ணா, அப்படியே நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் அதன் உரிமையாளர் போல் நடந்து கொண்டுள்ளீர்கள் அண்ணா. அப்பேருந்து (கட்சி) பல பேரின் தியாகத்தாலும் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாகிய பேருந்து என்பதை நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள் அண்ணா. ஒன்றிய அரசுக்கு நாம் கூடி ஆள்வோம் என்று பல மேடைகளில் அறிவுரை சொல்லும் நீங்கள் க்ட்சியில் கூடி பேசி முடிவெடுத்து செயல்படுத்த மறந்து போகிறீர்கள் அல்லது மறுத்து விடுகிறீர்கள். இதை சுட்டிக்காட்டினால் அன்பான சர்வாதிகாரம் என்கிறீர்கள் அண்ணா. எதிரிகள் தலைவர் பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்கிறார்கள். ஆனால் ’நான் கூட தமிழீழ கொள்கையை கைவிட்டு விட்டால் ஆயுதத்துடன் அருகில் இருக்கும் புலிகள் என்னை சுட்டு கொன்றுவிடுங்கள்’ என்று அதிகாரம் அளித்த ஆகச்சிறந்த ஜனநாயகவாதியின் உருவத்தை குறியீடாக வைத்து அரசியல் நடத்துகிற நீங்கள் சர்வாதிகாரியாகவே நடந்துக்கொள்கிறீர்களே அண்ணா. அனைத்திலும் வெளிப்படை தன்மை வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசும் நீங்கள். பொதுக் குழுவை கூட்டி யாருக்கும் அறிவிக்காமலேயே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரை பொதுச்செயலாளராக நியமித்து இருக்கிறீர்களே, எப்படி அண்ணா?
நிர்வாகத்தில் சிறப்பாக பணிபுரிந்த பொருளாளரை அப்பொறுப்பில் இருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கிவிட்டு எட்டு ஆண்டுகளாக கட்சிக்கே வராத கட்சிக்கு எதிராக செயல்பட்ட நாம் தமிழர் கட்சியையே கைப்பற்ற முயற்சி செய்த பல மேடைகளில் உங்களை திட்டி தீர்த்த ஒருவரை பொருளாளராக நியமித்திருக்கிறீர்களே அண்ணா? தவறான நபர்களை பொறுப்பிற்கு தேர்வு செய்து, சரியான செயலை எப்படி அண்ணா செய்ய முடியும்? கட்சியில் நிதி இல்லை, நிதி இல்லாததால் கட்சியினருக்கு நீதி இல்லை. நிதியையும் சரிவர கையாளாததால் இன்று தமிழ் நாட்டில் காசு கொடுத்து கூட்ட்த்திற்கும், பொதுக் கூட்டத்திற்கும் அழைத்து வந்து வாக்குகளை காசு குடுத்து வாங்கும் நிலையில் தன் குடும்ப தேவைகளை குறைத்துக்கொண்டு சொந்த காசைப் போட்டு, கொடி நட்டு கூட்டம் நடத்தி தேர்தல் செலவுகளுக்கு பிழைக்கப் போன இடத்தில் தன் இனம் தழைக்க. ஒரு வேளை உணவை தவிர்த்து உணர்வோடும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிற நமது தாய் தமிழ் உறவுகள் அனுப்புகிற பணம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருப்பவர்களால் ஊதாரிதனமாக செலவு செய்யப்படுகிறது. இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால் கட்சியில் இருப்பவர்கள் தனது பொருளாதாரத்தை இழந்து வசிப்பிடத்தை இழந்து வாடகை வீட்டில் குடி இருக்கும் நிலையில் சம்பளத்திற்கு வேலை செய்யும் தலைமை நிலையத்தில் இருப்பவர்கள் கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவதும் புதிய வாகனத்தை வாங்குவதும், வீட்டை வாங்குவதும், ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழப்பதும் வாடிக்கையாய் போனது அண்ணா.
அலுவலகம் வாங்க வெளிநாடு வாழ் தமிழர்கள் அனுப்பிய பணத்தை தலைமையில் இருப்பவர்களின் கவனக்குறைவால் விரயமாக்கி சோறு தண்ணி இல்லாமல் சோர்வடையாமல் தமிழ் நாட்டு உறவுகளும் வெளிநாடுகளில் வாழுகிற தமிழ் உறவுகளும் விமான பயணத்திற்கு பல செலவு செய்து இனத்துக்கான வாக்கை தன்மானத்தோடு பதிவு செய்து பெறப்பட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்ற கரும்பு விவசாயி சின்னத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த இராவணன் அண்ணனை புறக்கணித்துவிட்டு நிர்வாக திறனற்றவர்களின் கையாலாகாத தனத்தால் விவசாயி சின்னம் பறிபோனது.
என் மீதுள்ள நம்பிக்கையாலும் என் செயல்திறனை நீங்கள் அறிந்திருந்ததாலும் பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்தீர்கள். அறிவித்த நாள் முதல் அய்யா இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களை எனது தொகுதிக்கு அழைத்துச் சென்று முதன் முதல் பிரச்சாரத்தை துவக்கி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் வென்று விடுவார் என்று தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பில் இடம்பெறும் அளவிற்கு தொகுதி உறவுகளின் ஒத்துழைப்போடு பணியாற்றினேன். நீங்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது தமிழகத்திலேயே மிகச் சிறப்பான ஒரு கூட்டத்தை கூட்டிக் காட்டினோம். அந்தக் கூட்டத்தில் பேசிய நீங்கள், கட்சி ஆரம்பிக்கும்போது வர பயந்தவர்களுக்கு மத்தியில் எதற்கும் அஞ்சாது 25 ஆண்டுகளாக என்னை தோளில் தூக்கிச் சுமந்தவன் என்றும் என் குடும்பமே ஒத்துழைக்க மறுத்த போதும் ஈழ பயண ஏற்பாடுகளை உறுதி செய்து பெங்களுருவில் இருந்து விமானம் ஏற்றியும் திரும்பி வரும்போது என்னை அழைத்து வந்தவன் என்று என்னைப் பெருமையாக பேசி சிலாகித்து கொண்டீர்கள். தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஐந்து இடங்களில் மூன்றாவது இடம் வந்தது. அதில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று. சென்ற ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆரம்ப வேலையிலிருந்து வாக்கு எண்ணும் வரை நான் சிறப்பாக பணிபுரிந்ததாக நீங்கள் மற்றவர்களிடம் சொன்னதாக கேள்விப்பட்டேன்.
நான் மேற்கூறிய அனைத்தும் நிர்வாக சிக்கல்தானே, அதை சரிசெய்துகொள்வோம் என காத்திருந்த வேளையில் இப்போது கொள்கையிலேயே முரண்பட்டு நிற்கிறீர்கள். திரு இரவீந்திரன் துரைசாமியின் தவறான வழிகாட்டுதலால் தாங்கள் திரு ரஜினி அவர்களை சந்தித்தீர்கள். சந்தித்ததில் தவறு இல்லை. சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த நேர்காணல் இருக்கின்றதே. சில நாட்களுக்கு முன்னர் சங்கி என்றால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன நீங்கள் சங்கி என்றால் சகத் தோழன் என்று சொன்னதை கேட்டு நானும் கட்சியில் உள்ள பெரும்பான்மையோரும், தமிழ் நாட்டில் உள்ள பல முற்போக்கு சக்திகளும் அதிர்ச்சி அடைந்தோம். சங்கிகளை தோழர் என்று அழைக்க எப்படி அண்ணா மனம் வந்தது? என்று கேட்க உங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். வழக்கம் போல் பதில் இல்லை. எனது கருத்தை தெரிவிக்க முகநூலிலும் தளத்திலும் சங்கி தமிழுக்கு எதிரி, சங்கி தமிழ் நாட்டுக்கு எதிரி சங்கி மானிட குல எதிரி என்று பதிவிட்டேன். பல நூற்றாண்டுகளாக தமிழையும் தமிழ் மொழியையும். இனத்தையும் அடிமைப்படுத்தி வஞ்சித்து வருகின்ற வலதுசாரி கருத்து கொண்டவர்களை அய்யா, அம்மா, மாமா என்கிறீர்கள். இருந்தாலும், நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே, ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை மற்றும் அம்மா தமிழிசை உங்களை தீம் பார்ட்னர் என்று கூறி வலிய வந்து உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கருத்துக்கெல்லாம் அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். மறுப்பு வராததால் பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அண்ணன் சீமானின் கருத்துதானே ஒழிய என்னைப் போன்றவர்களின் கருத்து அல்ல என்று ஜனநாயகப் பூர்வமாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.
தமிழ்நாட்டில் உள்ள முதலாளித்துவ கட்சிகளில் கூட கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. “ஆகச் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்” என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை. என் கருத்தியலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு எந்த தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர். வலதுசாரி ஆதரவு கருத்துக்கு அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் பிரசாந்த் கிஷோரை விட தம்பி பாண்டே அறிவு மிக்கவன் என்றும், கொஞ்ச நாளைக்கு முன்பு பயித்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல பேசுவது பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறது அண்ணா.
அண்ணன் இப்படியெல்லாம் பேசுகிறாரே என்று வேதனையோடு இருந்தபோது அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியையும், தினமலர் கோபால் ஜீ யையும் சந்தித்து அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தமிழர்களின் நாடி நரம்புகளில் உரமேறி இருக்கும் நமது தேசிய தலைவரையும், தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய திராவிட இயக்கத் தோழர்களின் குறியீடாக இருக்கக்கூடிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ் நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெரிகிறது அண்ணா. தமிழரின் அறிவாகவும், ஆற்றலாகவும் உணர்வாகவும் இருக்ககூடிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் குடும்பத்திலுள்ள கார்த்திக் மனோகரனை சிங்களவனே பயன்படுத்த தயங்கக்கூடிய வார்த்தையை பயன்படுத்தி வசைப்பாடினீர்கள் அண்ணா. மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்?
வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது. இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும். தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடி முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய, வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன் அண்ணா” என்று ஜெகதீச பாண்டியன் குறிப்பிட்டிருக்கிறார்.