குழந்தைகள் முன்னேற்றக் கழகம் – விமர்சனம்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2025/01/ku-mu-ka.jpg)
நடிப்பு: யோகிபாபு, செந்தில், சரவணன், மயில்சாமி, லிஸ்ஸி ஆண்டனி, சுப்பு பஞ்சு, இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், அஸ்மிதா சிங், சித்ரா லட்சுமணன், ஹரிகா, சோனியா போஸ் வெங்கட், வையாபுரி, அஸ்வின், கம்பம் மீனா, மூர்த்தி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: என்.சங்கர் தயாள்
ஒளிப்பதிவு: ஜே.லட்சுமண்
படத்தொகுப்பு: ரிச்சர்டு கெவின்.ஏ
இசை: ‘சாதக பறவைகள்’ சங்கர்
தயாரிப்பு: ‘மீனாட்சி அம்மன் மூவிஸ்’ அருண்குமார் சம்மந்தம் & என்.சங்கர் தயாள்
பத்திரிகை தொடர்பு: எய்ம் சதீஷ் – சிவா
கட்சி அரசியலில் விருப்பம் கொண்ட சிறுவர்களின் குறும்பு உலகை, ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் மூலம் கலகலப்பாகக் காட்ட முயன்றுள்ளார் இயக்குநர் சங்கர் தயாள். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தை இயக்கியவர். தனது இரண்டாவது படம் வெளியாகும் முன்பே சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.
![](https://www.heronewsonline.com/wp-content/uploads/2025/01/ku-mu-ka-1.jpg)
’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் கதை என்னவென்றால், ஆதிமூலம் (யோகிபாபு), சாணக்கியர் (சுப்பு பஞ்சு) ஆகிய இருவரும் ஒரு அரசியல் கட்சியில் சமநிலையிலிருந்து அதிகாரத்துக்காகப் போட்டி போடும் ஊழல் அரசியல்வாதிகள். இவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவரான பக்கிரிசாமி (செந்தில்), இருவருடைய அக்கப்போர்களையும் கண்டுகொள்ளாமல் ’பேலன்ஸ்’ செய்து கட்சியை நடத்துகிறார்.
ஆதிமூலத்துக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கும்போது, வீட்டுவேலை செய்ய வந்த வடநாட்டுப் பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரால் இன்னொரு மகனுக்குத் தந்தை ஆகிறார். பிறகு அப்பெண்ணை வீட்டைவிட்டு துரத்தி விடுகிறார்கள். அப்பெண்ணின் மகன் அலெக்சாண்டர் (அத்வைத் ஜெய் மஸ்தான்), ஆதிமூலம் மாதிரி அரசியல்வாதி ஆகி, ஆட்சியைப் பிடித்து, அதிகாரப் பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். முதல் மனைவியின் மகனான பல்லவனும் (இமயவர்மன்) அரசியலில் ஆதிமூலத்தை முந்திச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆதிமூலத்தின் இரு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அப்போது முதலே அரசியல்வாதிகளுக்கான குணங்களுடன் வளர்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டது போல் இறுதியில் அரசியலுக்கு வந்து, அதிகாரப் பதவியில் அமர்ந்தார்களா? என்பது ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
அரசியல்வாதி ஆதிமூலம் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து காமெடி செய்திருக்கிறார்.
கதையின் நாயகர்களாக பல்லவன் கதாபாத்திரத்தில் சிறுவன் இமயவர்மனும், அலெக்சாண்டர் கதாபாத்திரத்தில் சிறுவன் அத்வைத் ஜெய் மஸ்தானும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறுமி ஹரிகாவின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியல் கட்சித் தலைவர் பக்கிரிசாமியாக வந்து அலப்பறை செய்யும் செந்தில், காமெடி செய்ய வாய்ப்பின்றி, கதாபாத்திரத்தை சீரியசாக மாற்ற முயற்சித்துள்ளார்.
‘பருத்தி வீரன்’ சரவணன், சோனியா போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, மயில்சாமி, அஸ்மிதா சிங், லிஸ்ஸி ஆண்டனி, சித்ரா லட்சுமணன், வையாபுரி, ‘கும்கி’ அஸ்வின், கம்பம் மீனா, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பள்ளிக்கூடம் மற்றும் அரசியல் கட்சிகளின் காட்சிகளை ஜெ.லட்சுமணின் கேமரா நேர்த்தியாக பதிவு செய்துள்ளது. ‘சாதகப் பறவைகள்’ சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளன.
சமீபத்தில் மறைந்த என்.சங்கர் தயாள் எழுதி இயக்கியிருக்கிறார். இன்றைய போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியல் பற்றி சிறுவர், சிறுமிகளின் மூலம் காமெடியாகச் சொல்லியிருக்கிறார்.
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ – பார்க்கலாம்; சிரிக்கலாம்
ரேட்டிங்: 2.5/5