ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா – விமர்சனம்

தயாரிப்பாளர்கள்: அர்ஜுன் அகர்வால், சிபி கார்த்திக், தமோட்சு கோசானா
கிரியேட்டிவ் டைரக்டர்: வி.விஜயேந்திர பிரசாத்
தயாரிப்பு நிறுவனம்: கீக் பிக்சர்ஸ் (பி) லிமிட்
வெளியீடு: கீக் பிக்சர்ஸ் (பி) லிமிட்., ஏ.ஏ ஃபிலிம்ஸ், எக்ஸெல் எண்டர்டெயின்மெண்ட்
பின்னணி குரல் கலைஞர்கள்: ராமர் – செந்தில்குமார், சீதை – டி.மகேஸ்வரி, ராவணன் – பிரவீன்குமார், லட்சுமணன் – தியாகராஜன், ஹனுமன் – லோகேஷ்
நரேட்டர்: ரவூரி ஹரிதா
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
உலகம் முழுவதும் திரைப்படங்களுக்கு இணையாக அனிமேஷன் படங்களுக்கும் மவுசும், ரசிகர் கூட்டமும் உண்டு. ஹாலிவுட்டில் குழந்தைகளைக் கவரும் அனிமேஷன் படங்கள் அதிகம் வெளியாகும் நிலையில், இந்தியாவிலும் அதே மாதிரி அனிமேஷன் படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது திரைக்கு வந்திருக்கும் ’ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ ஓர் அனிமேஷன் திரைப்படமாகும்.
கதை என்ன என்பதை படத்தின் தலைப்பே சொல்லிவிடும். நாம் சிறு வயதிலிருந்து தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் என பல கலை வடிவங்களில் திரும்பத் திரும்ப பார்த்து வரும் ராமாயணக் கதை தான். அதை அனிமேஷன் எனும் கலை வடிவத்தில் இப்படத்தில் பார்க்கிறோம் என்பது மட்டும் தான் வித்தியாசம்.
படம் தெளிவாக இரண்டு பாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி, முழுக்கதைக்குமான அடித்தளம் அமைக்கிறது. இரண்டாம் பாதி, ராமாயணத்தின் முக்கிய விஷயமான ராமனுக்கும் ராவணனுக்குமான யுத்தம் மற்றும் அதன் விளைவுகள் என கட்டமைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி அரசன் தசரதன் குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பது, பின்னர் முனிவரின் மந்திரத்தால் ராமன் உள்ளிட்ட மகன்கள் பிறப்பது, அவர்கள் குருகுல முறைப்படி விஸ்வாமித்திர முனிவரிடம் கல்வி கற்று திரும்புவது, அரசன் ஜனகனின் வில்லை உடைத்து ராமன் சீதையை மணப்பது, அரசன் தசரதன் தன் மூத்த மகனான ராமனுக்கு முடி சூட்ட விரும்புவது, ஆனால் கூனி மந்தாரையின் சூழ்ச்சியால், ராமனின் சிற்றன்னை கைகேயியின் மகனான பரதன் அரசனாக்கப்படுவதோடு, ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் அனுப்பப்படுவது, வனத்தில் ராமன் – லட்சுமணனால் சூர்ப்பனகை அவமானப்படுத்தப்படுவது, இதனால் சூர்ப்பனகையின் அண்ணனான இலங்கை வேந்தன் ராவணன், ராமனின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்று அசோக வனத்தில் சிறை வைப்பது, சீதையைத் தேடிச் செல்லும் ராமன், அனுமன் உள்ளிட்ட வானரப் படைகளின் துணையுடன் ராவணனுடன் போர் புரிவது, ராவணனை வீழ்த்தி, அசோக வனத்தில் இருக்கும் சீதையை மீட்பதோடு, இலங்கையில் இருக்கும் அடிமைகளையும் மீட்பது, வனவாசம் முடிந்து நாட்டுக்குத் திரும்பி வந்து அரசாளுவது, இறுதியில் ராமன் சொர்க்கத்துக்கும், சீதை பூமிக்குள்ளும் போய் விடுவது என ராமாயணக் கதையை அனிமேஷன் மூலம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும்படி ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ திரைப்படம் சித்தரித்திருக்கிறது.
அனைத்து கதாபாத்திரங்களின் அனிமேஷன் உருவங்கள் உயிரோட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் நடைபெறும் இயற்கைச் சூழல்கள் எழில் கொஞ்சும் கலர்ஃபுல் காட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், சீதையை ராவணன் கடத்திச் செல்லும்போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, மூலிகைக்காக மலையையே பெயர்த்து எடுத்து வரும் அனுமனின் சாகசங்கள் என ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை கிராபிக்ஸ் மூலம் மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
புத்தக வாசிப்பு குறைந்து வரும் இத்தகைய சூழ்நிலையில், ராமாயணத்தை தற்போதைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, எளிமையான கதை சொல்லல் மூலம், அனிமேஷன் காட்சிகளாக விவரித்திருப்பது சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
ராமன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில்குமார், சீதைக்கு குரல் கொடுத்திருக்கும் டி.மகேஸ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன்குமார், லட்சுமணனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், அனுமனுக்கு குரல் கொடுத்துள்ள லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் நரேட்டரான ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒலி வடிவமைப்பும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் வண்ணங்கள் அனைத்தும் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களையும் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
மொத்தத்தில், ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – புதிய அனிமேஷன் அனுபவம்.
ரேட்டிங்: 2.5 / 5