“பிரபாகரன் உடனான சந்திப்பு பற்றி சீமான் சொல்வதெல்லாம் பொய்”: பிரபாகரனின் அண்ணன் மகன் பேட்டி!
சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும், அவரின் சந்திப்பு தொடர்பாகவும் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இது குறித்தெல்லாம் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, “எங்களின் தங்கை (துவாரகா) என போலியான பெண் ஒருவர் கடந்த வருடம் முழுவதும் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தார். அதனை எல்லாம் எதிர்கொண்டு நாங்கள் வீரவணக்க தினத்தை அனுசரித்தோம். ஆனால், அப்போதெல்லாம் சீமான் வாயைக் கூட திறக்கவில்லை. எங்களிடம் தொடர்பிலும் இல்லை. ஆனால், ஊடகங்களில் எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக போலியான தகவல்களை பரப்பி வருகிறார்.
இன்னும் பல விஷயங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதை தற்போது புரிந்துகொண்டோம். எனவே வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் அவரை உன்னிப்பாக கண்காணிக்க துவங்கியுள்ளோம்.
சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால், அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.
அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும், யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால், அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே ஆனாலும், பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அதனால், அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது தான் இவர் அங்கு சென்றார். அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ், அந்தக் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். சந்தோஷ் தற்போது கனடாவில் உள்ளார். அவர் வாயை திறந்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
அசைவம் சாப்பிட்டுவதாக சொன்னதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் இவர் அங்கு சென்றதன் நோக்கம் வேறு. சித்தப்பாவுக்கு அங்கு கடுமையான சூழல் இருந்தது. அவரின் உயிருக்கே ஆபத்து எனும் நிலையில் பல்வேறு சமயங்களில் அவரே அங்கு தங்குவதற்கான சூழல் இல்லாமல் தான் இருந்தது. இவர் சொன்னது போல், சித்தியை (மதிவதனியை) சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. இட்லிக்குள் கறி வைக்கும் பழக்கம் எல்லாம் எங்களிடத்தில் இல்லவே இல்லை. அங்கு முதலில் புட்டு போன்ற உணவுகள் தான் அதிகம் இருக்கும்.
சித்தப்பா ஆமை கறி சாப்பிடுவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனால், அங்கு சில இடங்களில் ஆமை, உடும்பு உள்ளிட்டவற்றை சாப்பிடும் பழக்கம் உள்ளது. அந்தச் சமயத்தில் இவர் என்ன உணவுகளை எல்லாம் விரும்பி சாப்பிடுவார் என கணக்கெடுக்க இவர் அங்கு விருந்துக்காக அழைத்துச் செல்லப்படவில்லை. அவர் அங்கு எடுக்கப்படும் ஆவணப்படம் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஊடக குழுவினருடன் வந்தவர் அவ்வளவு தான்.
சித்தப்பாவோ அல்லது தளபதிகளோ இவருக்கு ஆயுத பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை. அந்தப் புகைப்படங்கள் எல்லாம் படத்தில் அவர்கள் எப்படி ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் என்று காண்பித்தபோது எடுத்த படங்கள்.
இவர் எனது சித்தப்பாவை உணவு பிரியராகவும், ஸ்டார் ஓட்டலின் சமையல்காரர் போலவும் சித்தரித்து வருகிறார். அதனை பார்க்கும்போது மன வேதனையாக இருக்கிறது. இப்படியாக அவர் செய்வது தேசிய தலைவர் எனும் பெயருக்கே அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனை என் நண்பர்களிடம் சொல்லி ஆதங்கம் அடைந்துள்ளேன்.
சீமான் இலங்கை சென்று வந்த பிறகு டென்மார்க் நாட்டிற்கு ஒருமுறை வந்திருந்தார். அப்போது, சித்தியின் அக்காவான அருணா என்பவருடன், அவரது அண்ணன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதில், அருணாவின் கணவர் இலங்கை சென்றபோது, சித்தி அவரை கவனித்துக்கொண்டதை எல்லாம், சித்தி தன்னை கவனித்தது போல் சீமான் சித்தரித்து பொய் பேசி வருகிறார்.
இங்கிலாந்தில் இருக்கும் ஒரு தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. சீமான், ஒரு தமிழீழ கைம்பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி பல பெண்களை ஏமாற்றியது எல்லாம் நடந்திருக்கிறது. அப்படி ஒரு பெண் தான் அந்த இங்கிலாந்து பெண். அவருடன் சித்தியின் அக்கா அருணா பழக்கம் கொண்டிருந்தார். அவர் மூலமாக தான் சீமானுக்கு சித்தியின் அக்கா அருணாவுடனான பழக்கம் நெருக்கமானது. சீமான், அந்த பெண்ணையும் ஏமாற்றிவிட்டார்.
இவர் நாட்டிற்கு சென்றபோது, அங்கு பிச்சைக்காரர்களே இல்லை என்பதை சீமான் கவனித்துள்ளார். அது குறித்து விசாரித்தபோது, அவருக்கு புலம்பெயர் தமிழர்கள் மூலம் அங்கு திரள்நிதி வருவதை கண்டறிந்துள்ளார். எனவே திட்டமிட்டு, ஒரு கட்சியை ஆரம்பித்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் திரள்நிதியை பெற்றுவருவதை நான் பார்க்கிறேன்.
போலியான புகைப்படம் வைத்திருப்பது போலவே தளபதி சூசையின் ஆடியோவையும் வைத்துள்ளார். அந்த ஆடியோவும் இவர் பேசியது அல்லது அந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷுடன் பேசியது. அதில் சீமான் மட்டுமின்றி, நெடுமாறன் உட்பட பலரின் பெயர் இருக்கும். இவர் தனது அரசியல் லாபத்திற்காக சீமான் எனும் பெயரை மட்டும் வைத்து எடிட் செய்துவிட்டார். சீமானிடம் இந்தப் போராட்டத்தை கொடுக்க யாரும் தயாராகவும் இல்லை. அவர் கொண்டு செல்வதற்கான தகுதியும் இல்லை” என்று தெரிவித்தார்.