மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்தது!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்தும் கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கத்தை குத்தகைக்கு விடும் ஏல அறிவிப்பு வெளியானது. இந்த ஏலமானது நவ.7-ம் தேதி வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது. இதற்கு மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தில் குதித்தனர்.
அரிட்டாபட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் டங்கஸ்டன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கிராமங்கள் தோறும் தொடர் போராட்டம் தீவிரம் அடைந்தது.

பின்னர் மேலூரில் விவசாயிகள், வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மூலம் கிராம மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது உறுதியளிக்கப்பட்டது.

டிச.9-ம் தேதி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “நாங்கள் (திமுக) ஆட்சியில் இருக்கும் வரை திட்டத்தை வரவிடமாட்டோம். ஒருவேளை திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்” என உறுதிபட பேசினார்.

இதற்கிடையே, ஜன.7-ம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 15 கிமீ நடைபயணமாக மதுரை வந்த போராட்டக் குழுவினர் தல்லாகுளம் தபால்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தன்னெழுச்சியான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. மதுரை எம்பி.சு.வெங்கடசன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு கட்சித் தலைவர்களும் மேலூர் பகுதிக்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்காமல் அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி கிராம மக்கள் புறக்கணித்தனர். வீடுகளின் முன்பாக டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து வாசலில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், மக்கள் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலப் பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் மேலூர் பகுதி விவசாயிகள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்துப் பேசினர். மக்களின் வாழ்வாதாரம், இயற்கை வளங்ளைப் பாதிக்கும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்பரிய தளங்களும் உள்ளன என்று மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இந்தக் குழுவினரின் கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு மேலூர் பகுதி மக்கள் உற்சாகமான முழக்கத்துடன் கிராமங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகள் வெடித்தும் சிறுவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு மூலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான 3 மாதங்கள் நீடித்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர். போராடி வெற்றி பெற்ற மக்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.