மேடையில் ’கள்’ குடித்த சீமான்: கிராபிக்ஸ் புகைப்பட சர்ச்சை குறித்து பதிலளிக்க மறுப்பு!
விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், பாஜக துணைத் தலைவர் ஏஜி சம்பத், வேட்டவலம் மணிகண்டன், பனையேறி பாதுகாப்பு இயத்தத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெண்கள் கள் பானையை தலையில் சுமந்தபடி ஊர்வலமக எடுத்து வர மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர்.
தொடர்ந்து பனையேறி ஒருவர் பனைமரத்தில் ஏறி கள் இறக்க, பனைமரத்துக்கு கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு படையலிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கள் நன்மையை விளக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது மேடையிலேயே பனையோலையில் ’கள்’ வாங்கி குடித்து மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”பிரபாகரனோடு நீங்கள் இருக்கும் புகைப்படம் போலியாக கிராபிக்ஸில் எடிட் செய்யப்பட்டது. அதை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பதற்கு உங்கள் பதில் என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதை விடுங்கள்” என மழுப்பலாகச் சொல்லி நழுவினார் சீமான்.