நேசிப்பாயா – விமர்சனம்
நடிப்பு: ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, ஷிவ் பண்டிட், கல்கி கோய்ச்லின், ஜார்ஜ் கோரா மற்றும் பலர்
இயக்கம்: விஷ்ணு வர்தன்
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரைசன்
படத்தொகுப்பு: ஏ.ஸ்ரீகர் பிரசாத்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ‘எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ சேவியர் பிரிட்டோ
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
பல வருடங்களாக தமிழில் படம் இயக்காமல், பாலிவுட்டுக்குப் போய் ஹிந்தியில் படம் இயக்கி புகழின் உச்சம் தொட்ட பிரபல இயக்குநர் விஷ்ணு வர்தன், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்து இயக்கியிருக்கும் தமிழ் படம்; மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி முதன்முதலாக நாயகனாக அறிமுகமாகும் படம்; பிரபல தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, தன் மகளின் கணவரான ஆகாஷ் முரளியை ஹீரோ ஆக்க வேண்டும் என்பதற்காக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் என்பன போன்ற காரணங்களுக்காக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. தற்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்.
நாயகன் அர்ஜுன் (ஆகாஷ் முரளி), நாயகி தியாவை (அதிதி ஷங்கர்) கண்டதும் காதல் கொள்கிறார். அப்போதிலிருந்து தியாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்து ஒரு வழியாக தனது காதலை ஏற்க வைக்கிறார். இதன்பின் காதலர்களுக்கு இடையே திடீரென்று ஈகோ பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட, தியா வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்று விடுகிறார். அர்ஜுன் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், போர்ச்சுக்கல் சென்ற தியா கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, அந்நாட்டின் சிறையில் அடைக்கப்படுகிறார். இச்செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சி அடையும் அர்ஜுன், காதலி தியாவை காப்பாற்றுவதற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்குச் செல்கிறார். அவர் தியாவைக் காப்பாற்ற முன்பின் பழக்கம் இல்லாத நாட்டில் என்ன செய்தார்? தியா மீதான கொலைக் குற்றத்தின் பின்னணி என்ன? அதில் தியா சிக்கியது எப்படி? தியாவை காப்பாற்றும் முயற்சியில் அர்ஜுன் வெற்றி பெற்றாரா? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை காதலோடு அதிரடி ஆக்ஷன் கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் அர்ஜுனாக ஆகாஷ் முரளி நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம் என்றாலும், அறிமுக நாயகன் போல் இல்லாமல் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஹீரோ போல் திரையில் ஜொலித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி, அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியான அளவில் கொடுத்திருக்கிறார். காதல், ஆக்ஷன், சுறுசுறுப்பு என தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டக் கூடிய அனைத்து வாய்ப்புகளையும் திறம்பட பயன்படுத்தியிருக்கிறார். நல்ல உயரம், நல்ல உடற்கட்டு, இளமை ததும்பும் அழகு என ஒரு வெற்றிகரமான ஹீரோவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் பொருந்தியுள்ள ஆகாஷ் முரளி, தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. அவருக்கு நமது வாழ்த்துகள்.
நாயகி தியாவாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். சிறப்பாக நடிக்கவும் செய்கிறார். கல்லூரி மாணவி, அந்நிய நாட்டு சிறைக் கைதி என இரு வேறுபட்ட தன்மைகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். அவரது கதாபாத்திரம் தான் கதைக்கு முதுகெலும்பு போல் முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்து, அதற்கு தேவையான நடிப்பை கவனமாக வழங்கியிருக்கிறார்.
நகைச்சுவைக்கு பொறுப்பேற்றிருக்கும் விக்கல்ஸ் விக்ரம், தன் கடமையை ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.
நாயகனுக்கு உதவிகள் செய்யும் நாயகியின் வழக்கறிஞர் இந்த்ராணி ஜோஹானாக கல்கி கோய்ச்லின் நடித்திருக்கிறார். அருமையான, சரியான தேர்வு. தனது கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, நிறைவான நடிப்பு மூலம் அதை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அவரும் நாயகனும் சேர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே ரசனையானவை.
தொழிலதிபர் ஆதி நாராயணனாக வரும் சரத்குமார், அவரது மனைவி வசுந்தராவாக வரும் குஷ்பு சுந்தர், சிறப்பு அதிகாரி கௌதமாக வரும் பிரபு, வரதராஜனாக வரும் ‘கருத்தம்மா’ புகழ் ராஜா, மோண்டியாக வரும் ஷிவ் பண்டிட், கார்த்திக்காக வரும் ஜார்ஜ் கோரா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
’வேலை நிமித்தம் வெளிநாடு செல்லும் நாயகிக்கு அங்கே ஒரு பயங்கர சிக்கல்; அதிலிருந்து நாயகியை விடுவித்துக் காப்பாற்ற அந்நாட்டுக்கு விரையும் நாயகன்; நாயகனின் முயற்சி பலித்ததா?’ என்ற மிகவும் எளிமையான, ஆனால் சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்துக்கொண்டு, இக்கால இளசுகளுக்குப் பிடிக்கும் வகையில் காதல், ஈகோவால் ஏற்படும் பிரிவு, கொஞ்சம் அதிரடி ஆக்ஷன், கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆகியவற்றைக் கலந்து பிரமாண்டமான கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு எண்டர்டெயினராக இப்படத்தை படைத்தளிப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் விஷ்ணு வர்தன். அனைத்து தரப்பு ரசிகர்களும் நேசிக்கும் வகையில் இப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் விஷ்ணு வர்தனுக்கு பாராட்டுகள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பொருத்தமாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரைசனின் கேமரா, காட்சிகளை மிக பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது. சேசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
திரைக்கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கும் விதமாக காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்.
‘நேசிப்பாயா’ – அனைவரும் நேசிக்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்; அவசியம் பார்த்து மகிழுங்கள்!
ரேட்டிங்: 3.5/5