காதலிக்க நேரமில்லை – விமர்சனம்

நடிப்பு: ரவி மோகன் (ஜெயம் ரவி), நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு. ஜான் கொக்கென், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரொஹான் சிங் மற்றும் பலர்

இயக்கம்: கிருத்திகா உதயநிதி

ஒளிப்பதிவு: கேவ்மிக் ஆரி

படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மூவிஸ் (பி.) லிட்

பத்திரிகை தொடர்பு: எய்ம் சதீஷ்

அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கும் தமிழ் மெயின்ஸ்டீம் சினிமாவை, அந்த போக்கிலிருந்து முற்றாக விடுவித்து, அடுத்த கட்டத்துக்கு உயரே எடுத்துச் செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. படத்தின் தலைப்பு தான் பழசு. ஆனால் கதை புதுசு, கதைக்களம் புதுசு, கதாபாத்திரங்கள் புதுசு, திரைக்கதை புதுசு, அணுகுமுறை புதுசு, காட்சிகள் புதுசு, வசனங்கள் புதுசு, உணர்ச்சிகள் புதுசு என எல்லா அம்சங்களிலும், எல்லா விதங்களிலும் புதுமையான ஓர் அபூர்வ படைப்பை மிகவும் துணிச்சலாக படைத்தளித்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி. வேகவேகமாக மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாறிவரும் இன்றைய உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின், இளைஞிகளின் சொல், செயல், சிந்தனை, வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை – எவ்வித விமர்சனமும் இல்லாமல் – நிதானமாக, அதே நேரத்தில் தெளிவாக சலனச் சித்திரங்களாய் பிரமாதமாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்.

கதை பெங்களூரு மற்றும் சென்னையில், முதலில் 2017ஆம் ஆண்டிலும், அதன்பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 2025ஆம் ஆண்டிலும் நடைபெறுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் கட்டிடக் கலை நிபுணராக இருக்கிறார் நாயகன் ரவி மோகன் (ஜெயம் ரவி). ஏற்கெனவே மக்கள் தொகை பெருக்கத்தால் பூமிப்பந்து பிதுங்கிக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற கொள்கையுடன் இருப்பவர் அவர். இக்கொள்கை காரணமாக அவருக்கும், அவர் நான்கு ஆண்டுகளாக காதலித்துவரும் மாடலிங் பெண் டிஜே பானுவிற்கும் இடையே முரணும் உரசலும் இருந்து வருகிறது.

வினய்யும், யோகி பாபுவும் ரவி மோகனின் நண்பர்கள். இவர்களில் வினய் தன்பால் சேர்க்கையாளராக இருக்கிறார். ஒரு நாள் நண்பர்கள் மூவரும் ‘விந்து சேமிப்பு வங்கி’க்குப் போகிறார்கள். வினய்யும், யோகி பாபுவும் தங்கள் விந்துவை சேகரித்துக் கொடுத்து சேமித்து வைக்கச் சொல்கிறார்கள். அவர்களது வற்புறுத்தல் காரணமாக ரவி மோகனும் தன் விந்துவை சேமிக்கக் கொடுக்கிறார். ஆனால், நர்ஸின் கவனக் குறைவு காரணமாக, சேமிப்பதற்காக கொடுக்கப்பட்ட அவரது விந்து பாட்டில், ‘நன்கொடைக்கான விந்து’ பாட்டில்கள் இருக்கும் தட்டுக்கு இடம் மாறிவிடுகிறது.

ரவி மோகனுக்கும், அவரது காதலி டிஜே பானுவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறிக்கப்பட்டு, தடபுடலாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் நிச்சயதார்த்த நிகழ்வின்போது டிஜே பானு வராமல் புறக்கணித்துவிடுகிறார். அத்தோடு ரவி மோகன் – டிஜே பானு உறவு முறிந்துபோகிறது.

நாயகன் ரவி மோகனின் ‘குழந்தை வேண்டாம்’ என்ற கொள்கைக்கு நேர் மாறான கொள்கை கொண்டவர் நாயகி நித்யா மேனன். சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கட்டிக்கலை நிபுணராக இருக்கிறார். குழந்தை பெற்று வளர்ப்பதில் பேரார்வம் கொண்ட அவர், ஜான் கொக்கெனை காதலிக்கிறார். அவரையே விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஜான் கொக்கென் வேறொரு பெண்ணோடு உடலுறவு கொள்வதை தற்செயலாகப் பார்த்துவிடும் நித்யா மேனன் அதிர்ச்சி அடைகிறார். ஆத்திரம் கொள்கிறார். ஜான் கொக்கென் உடனான காதலை முறித்துக்கொள்கிறார். திருமணம் எனும் பந்தத்தின் மீதே நம்பிக்கையற்றுப் போய்விடுகிறார். ஆனாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை அவரைவிட்டுப் போகவில்லை.

ஆண் துணை இல்லாமல், செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) குழந்தை பெற்றுக்கொள்வது என்ற முடிவை எடுக்கிறார் நித்யா மேனன். அதற்கு உரிய மையத்தை அணுகுகிறார். ரவி மோகன் முன்பு கொடுத்திருந்த விந்துவையும் நித்யா மேனனின் கருமுட்டையையும் சோதனைக் குழாயில் இணைத்து செயற்கையாக கருவுறுதலை நிகழ்த்துகிறார்கள்.

திருமணம் செய்துகொள்ளாமலே தான் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதை தனது அப்பா (பாடகர்) மனோ, அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் தெரிவிக்கிறார் நித்யா மேனன். பெற்றோர் அதிர்ச்சி அடைகிறார்கள். “இந்த வீட்டில் ஒண்ணு நான் இருக்கணும்; இல்லேனா அவ இருக்கணும்” என்று அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் தாண்டிக் குதிக்க, “இங்கே நீயே இருந்துக்கோ” என்று சொல்லி பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் நித்யா மேனன்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலத்துக்கு (அதாவது 2025ஆம் ஆண்டுக்கு) கதை நகர்கிறது. இப்போது நித்யா மேனன் தனது எட்டு வயது மகன் ரொஹான் சிங்குடன் ‘ஒற்றை பெற்றோராக’ தனியே அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வாழ்ந்து வருகிறார். ஒரு ப்ராஜக்ட் சம்பந்தமாக சென்னை வரும் ரவி மோகன் அதே அப்பார்ட்மெண்டில் தங்குகிறார். அங்கு அவருக்கும் நித்யா மேனனின் மகன் ரொஹான் சிங்குக்கும் இடையே நல்ல நட்பு உருவாகிறது. இதைப் பார்க்கும் நித்யா மேனனுக்கு – தன் மகனின் பயாலஜிக்கல் தந்தை இவர் தான் என்பது தெரியாமலேயே – ரவி மோகன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ரவி மோகனுக்கும் அதே காதல் உணர்வு வருகிறது.

ரவி மோகனும், நித்யா மேனனும் பரஸ்பரம் காதலைச் சொல்லிக்கொள்ள முடிவு செய்திருக்கும் நேரத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தை புறக்கணித்துவிட்டுச் சென்ற முன்னாள் காதலி – மாடலிங் பெண் – டிஜே பானு, எதிர்பாராத விதமாக ரவி மோகனைத் தேடி வருகிறார். உடைந்துபோன காதலுக்கு புத்துயிர் ஊட்ட முயற்சிக்கிறார். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை விறுவிறுப்புடன் சொல்லுகிறது ‘காதலிக்க நேரமில்லை’ என்ற ‘நியூ வேவ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக ரவி மோகன் (ஜெயம் ரவி) நடித்திருக்கிறார். மக்கள் பெருக்கம் காரணமாக குழந்தைப்பேறு மீது அவநம்பிக்கை வைத்திருப்பது, காதலி கைவிட்டுப் போன ஏமாற்றத்தில் துவண்டுபோய் பின் எழுவது என தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டுள்ளார் ரவி மோகன். தன் மகன் தான் நாயகியின் மகன் என்று தெரியாமலேயே அச்சிறுவன் மீது அன்பைப் பொழிவது, அவனது அம்மாவான நாயகி மீது ஒருவகை கட்டுப்பாடான காதல் கொள்வது என திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் நாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். காதலனின் துரோகத்தை துணிச்சலாக எதிர்கொள்வது, காலத்துக்கேற்ற தைரியமான முடிவுகள் எடுப்பது, நேர்மையாக கோபம் கொள்வது என வாழ்க்கையை இயல்பான கண்ணோட்டத்தில் அணுகும் நவநாகரிக இளம் பெண்ணாக யதார்த்தமாக நடித்திருக்கிறார் நித்யா மேனன். இரண்டாம் பாதியில் ஒற்றை பெற்றோராகவும், மகனை நேசிப்பவர் மீது காதல் கொள்ளும் பெண்ணாகவும் திறம்பட நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியின் எட்டு வயது மகனாக வரும் சிறுவன் ரொஹான் சிங், வயதுக்குரிய குறும்புத்தனம், தந்தை இல்லாத வெறுமை, தேவையான அரவணைப்பு கிடைத்தவுடன் ஆனந்தம் என – எங்கிருந்துய்யா இந்த சுட்டிப்பையனை கண்டுபிடிச்சீங்க என வியப்புடன் கேட்கும் அளவுக்கு – அசால்டாக நடித்து பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறான்.

நாயகனின் காதலியாக டிஜே பானு நடித்திருக்கிறார். அவர் திரையில் வரும் நேரம் குறைவு; என்றாலும் காதலனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்புவது, நிச்சயதார்த்தத்தைப் புறக்கணிப்பது, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்க முடியாமல் காதலனை தேடி வருவது, தயங்கித் தயங்கி மீண்டும் காதலைத் தொடங்க முனைவது என குறைவின்றி நிறைவாக நடித்திருக்கிறார்.

நாயகியின் சித்தியாக வினோதினி நடித்திருக்கிறார். தனி ஆளாய் வாழும் நாயகிக்கு துணையாய் வந்துபோவது, ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைப்பது, உணர்வுபூர்வமான இடங்களில் நச்சென்று வசனம் பேசுவது என தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் வினோதினி.

நாயகனின் நண்பராக வரும் யோகி பாபு அளவோடு பேசி சிரிக்க வைக்கிறார். இன்னொரு நண்பராக, தன்பால் சேர்க்கையாளராக வரும் வினய்யும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் (பாடகர்) மனோ, அம்மாவாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், நாயகனின் அப்பாவாக வரும் லால் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. அவரது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இதை படைத்திருக்கிறார். சமூகம் என்ன சொல்லும் என்பது பற்றி கவலைப்படாமல், சுய புத்தியுடன் துணிந்து நடை போடும் இன்றைய உயர் நடுத்தர வர்க்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வாழ்க்கையை துணிச்சலாகவும், யதார்த்தமாகவும் காட்டியிருக்கிறார். விந்து சேமிப்பு, செயற்கை முறை கருத்தரிப்பு, தன்பால் சேர்க்கை விருப்பம், தன்பால் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வது, குழந்தைக்கு தன்பால் சேர்க்கையாளர்கள் பெற்றோராக இருப்பது போன்ற பல புதிய விஷயங்களை உள்ளடக்கியுள்ள – சற்று கவனம் பிசகினாலும் ஆபாசமாகிவிடக் கூடிய – கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு எச்சரிக்கையுடன் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை திறமையாக வேலை வாங்கி, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. இதன் மூலம் ’பேசத் தயங்கும் விஷயங்களைத் துணிந்து பேசும் முற்போக்கு இயக்குநர்’ என்ற அடையாளத்தை அவர் பெற்று விட்டார். பாராட்டுகள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அருமையாகவும் இனிமையாகவும் வந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரியின் இயல்பான படமாக்கமும், லாரன்ஸ் கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘காதலிக்க நேரமில்லை’ – கண்டு மகிழலாம்!

ரேட்டிங்: 3.5/5