வணங்கான் – விமர்சனம்
நடிப்பு: அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, டாக்டர் யோஹன் சாக்கோ, சண்முகராஜா, தருண் மாஸ்டர், சேரன்ராஜ், தயா செந்தில், சாயா தேவி, கவிதா கோபி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பாலா
ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ்
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா
பாடலிசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பின்னணி இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ’வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
எவரும் காட்சிப்படுத்தத் துணியாத விளிம்புநிலை மனிதர்களின் முரட்டு மனிதநேயத்தை திரைச் சித்திரங்களாகத் தீட்டிக்காட்டுபவர் என பெயர் பெற்றவர் இயக்குநர் பாலா. அவர் ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பின் தன் பாணியில் படைத்தளித்திருக்கும் படைப்பு தான் ‘வணங்கான்’.
முக்கடல் சங்கமம், கண்கவர் சூர்யோதயம், வரலாற்றுச் சிறப்புமிக்க விவேகானந்தர் பாறை, பார் போற்றும் ஐயன் வள்ளுவர் சிலை போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்ட சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வசித்து வரும் இளைஞர் கோட்டி (அருண் விஜய்). பிறவியிலேயே பேச்சுத் திறன், கேட்கும் திறன் இல்லாதவர். அவரது சிறுவயதில் நிகழ்ந்த சுனாமிப் பேரழிவில் தனது அப்பா, அம்மாவை இழந்து அனாதை ஆனவர். தன்னைப் போலவே அப்பேரழிவில் பெற்றோரை இழந்த தேவியை (ரிதா) தங்கையாகப் பாவித்து உயிருக்கு உயிராக நேசித்து வருபவர். இருவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ஆளாகிறார்கள்.
கிடைக்கிற சிறுசிறு வேலைகளைச் செய்து பிழைத்து வரும் கோட்டிக்கு, அயோக்கியர்களைக் கண்டால் அறவே ஆகாது. தன் கண்ணெதிரே எந்த அயோக்கியத்தனம் நடந்தாலும், அதைச் செய்தவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வெகுண்டெழுந்து அவருக்கு கொடூரமான கடும் தண்டனை வழங்குவது அவரது முரட்டு சுபாவம். போலீஸ் நிலையத்தில் அடைக்கலம் புகுந்த தீயவர்களை, உள்ளே புகுந்து அடித்து, தடுக்க வந்த போலீசாரையும் உதைத்து, துவம்சம் செய்த சம்பவங்களும் அவர் வாழ்வில் நடந்ததுண்டு. அவரது முன்கோபத்தின் பின்விளைவுகள் கண்டு ஆதங்கப்பட்ட அவரது நலவிரும்பிகள், ஒரு நிரந்தர வேலையில் சேர்த்துவிட்டால் அவரது முன்கோபம் குறைந்துவிடும் என்று எண்ணி அவருக்கு ஆதரவற்ற மாற்றுத் திறனாளிப் பெண்கள் காப்பகத்தில் காவலாளி வேலை வாங்கித் தருகிறார்கள்.
தன்னைப் போல் உடலளவில் குறைபாடு இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில், அவர்களுக்கு ஒரு சகோதரனாக தனது காவல் பணியை மனநிறைவுடன் செய்துவரும் கோட்டி, அங்கு நடக்கும் வக்கிரமமான ஓர் அக்கிரமம் கண்டு கடும்கோபம் கொண்டு, அந்த அக்கிரமக்காரர்களை கொன்றொழிக்க ஆவேசம் கொள்கிறார். அவர் நினைத்ததை செய்து முடித்தாரா? அதன் மூலம் அவரது வாழ்க்கை என்ன ஆனது? அவர் கோபப்படும் போதெல்லாம் அதை தவிர்க்குமாறு அவரிடம் கெஞ்சி மன்றாடும் தங்கை தேவியின் முயற்சிக்கு பலன் கிடைத்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு இயக்குநர் பாலாவின் வழக்கமான தனித்துவ பாணியில் விடை அளிக்கிறது ‘வணங்கான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் கோட்டியாக அருண்விஜய் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக படம் முழுக்க இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அதனால் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல் படமாக இத்திரைப்படம் அவருக்கு அமைந்திருக்கிறது. பேச்சுத்திறன் மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். படத்தை ஒற்றை ஆளாக தூக்கி சுமக்கும் அருண் விஜய், தனது பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார். வெல்டன் அருண் விஜய்.
கதையின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். பல மொழிகள் பேசும் டூரிஸ்ட் கெய்டு கேரக்டர். துறுதுறுவென நடித்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். நாயகனை ஒருதலையாய் காதலிப்பது, அவரது முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது கரைந்துருகி தவிப்பது என நாயகனுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகனின் தங்கை தேவியாக ரிதா நடித்திருக்கிறார். அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்ட நிஜ தங்கையாகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். முன்கோபத்தைக் கைவிடுமாறு அண்ணனிடம் கதறி கெஞ்சும் உருக்கமான காட்சிகளில் பார்வையாளர்களை கலங்க வைத்து, அவர்களது இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
நீதிபதி குபேரனாக வரும் இயக்குநர் மிஷ்கின், சிறப்பு போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் கதையோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா, சாயாதேவி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட விளிம்புநிலை இளைஞனை கதையின் நாயகனாக சித்தரித்து, எளிய மக்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு அந்த நாயகன் மூலம் கடும் தண்டனை கொடுப்பதை தனது படங்களின் முக்கிய அம்சமாக வைத்திருக்கும் இயக்குநர் பாலா, இந்த படத்திலும் அதே பாணியை பின்பற்றி தன் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் பலம் கதைக்கரு. நடப்பு சமூகச் சூழலுக்குப் பொருந்திப் போகிற இன்றியமையாத ஒரு விஷயத்தைத் தான் இந்தப் பட்த்தில் பாலா காட்சிப்படுத்தியிருக்கிறார். அக்கிரமக்காரர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனை சரியா, தவறா என்பது விவாதத்துக்கு உரிய விஷயம் தான். என்றாலும், சமூகப் பொறுப்புணர்வு கொண்ட ஒரு படைப்புதான் ‘வணங்கான்’ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இயக்குநர் பாலாவின் முந்தைய படங்களின் சாயல் இதில் சற்று இருந்தாலும், வியாபாரம் மற்றும் வண்ணமயமான சினிமா உலகில், காண்பிக்க மறுக்கும் முகங்களையும், அம்மக்களின் சொல்லப்படாத வாழ்க்கையை கதைக்களமாகவும் கொண்டு மனிதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா, மீண்டும் ஒரு முறை அன்பை ஆக்ரோஷமாக சொல்லி மக்கள் மனதை உலுக்கியிருக்கிறார். பாராட்டுகள்.
‘எல்லாருமா சேர்ந்து ஒரு நல்லவனை சிலுவையில் அறைந்துவிடாதீர்கள்’, ‘எங்களுக்கு கண்ணுதான் இல்லை… ஆனால் கண்ணீர் வரும்’, ‘எல்லாம் நல்லா இருக்கிற உங்களால மாற்றுத் திறனாளிகளான எங்களோட வலியை எப்படி உணர முடியும்?’ போன்ற வசனங்கள் ஒலிக்கும்போது திரையரங்கம் அப்ளாஸில் அதிருகிறது.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. சாம்.சிஎஸ்-ன் பின்னணி இசை டைட்டில் கார்டு போடும்போதே கவனம் ஈர்ப்பதோடு, காட்சிகளுக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
‘வணங்கான்’ – பொங்கல் விடுமுறையில் கண்டு களிக்க உகந்த படம்! பார்த்து ரசியுங்கள்!