மழையில் நனைகிறேன் – விமர்சனம்

நடிப்பு: அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு ராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர்

கதை, திரைக்கதை, இயக்கம்: டி.சுரேஷ்குமார்

வசனம்: விஜி & கவின் பாண்டியன்

இசை: விஷ்ணு பிரசாத்

ஒளிப்பதிவு: ஜே.கல்யாண்

படத்தொகுப்பு: ஜி.பி.வெங்கடேஷ்

தயாரிப்பு: ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: ஸ்ரீவித்யா ராஜேஷ், பி.ராஜேஷ் குமார்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ.நாசர்

பட்டப்படிப்பை ஒழுங்காக முடிக்காமல், அரியர்ஸ் வைத்துக்கொண்டு, வெட்டியாக ஊர்சுற்றித் திரியும் நாயகன் ஜீவா செபாஸ்டியன் (அன்சன் பால்), அமெரிக்காவுக்குச் சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கும் நாயகி ஐஸ்வர்யாவை (ரெபா ஜான்) கண்டதும் காதல் கொள்கிறார். அவரது காதலை ஐஸ்வர்யா ஏற்க மறுக்கிறார். “நீ என் காதலை ஏற்கும் வரை காத்திருப்பேன்” என்று சொல்லி ஐஸ்வர்யாவின் பின்னாலேயே மாதக் கணக்கில் அலைகிறார் ஜீவா செபாஸ்டியன். அவரது காதலும் காத்திருப்பும் என்ன ஆனது? என்பது ‘மழையில் நனைகிறேன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜீவா செபாஸ்டியனாக அன்சன் பால் நடித்திருக்கிறார். சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள அவர், இதில் நாயகனாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பணக்கார வீட்டுப் பையனாக ஜாலியான வாழ்க்கை, காதலுக்காக ஏற்றுக்கொள்ளும் சிரம்மான வாழ்க்கை என இரண்டிலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஸ்கிரிப்ட்டுகளை கவனமாக தேர்வு செய்து நடித்தால், தமிழ் சினிமாவில் நாயகனாக ஒரு ரவுண்டு வரலாம்.

நாயகி ஐஸ்வர்யாவாக ரெபா ஜான் நடித்திருக்கிறார். அழகு மற்றும் நடிப்பு என இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

நாயகனின் அப்பா ஜோசப் செபாஸ்டியனாக வரும் மேத்யூ வர்கீஸ், நாயகனின் அம்மா ரெஜினாவாக வரும் அனுபமா குமார், நாயகியின் அப்பா சேஷாத்ரியாக வரும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பர் சிவாவாக வரும் கிஷோர் ராஜ்குமார், மற்றும் அண்ணாமலையாக வரும் வெற்றிவேல் ராஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் டி.சுரேஷ் குமார். காதல் ஏற்புக்காக காத்திருக்கும் வழக்கமான காதலனின் கதை தான் என்றாலும், கிளைமாக்ஸில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டை வைத்து படத்தையே புதுசாக மாற்றியிருக்கிறார். வன்மையான இரண்டு சாலை விபத்துக்களைத் தவிர ஏனைய காட்சிகளை எல்லாம் அன்பாகவும் காதலுடனும் அவர் மென்மையாகக் கையாண்டிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது. காதலர்களுக்கான பிரச்சனைகள் மற்றும் அவை சார்ந்த காட்சிகளில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

விஜி மற்றும் கவின் பாண்டியனின் வசனங்கள் காதல் காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளன. அதிலும், “நீ நினச்சா நிறைய கார் வாங்கலாம், ஆனால் ஐங்கார் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்ட…” என்ற வசனத்தின் மூலம் கைதட்டலை அள்ளுகிறார்கள்.

விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையும் ஓ.கே ரகம். ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் வண்ணமயமாக படமாக்கப்பட்டுள்ளன.

‘மழையில் நனைகிறேன்’ – காதலித்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்க இருப்பவர்கள் என அனைவரும் கண்டு களிக்கலாம்!