விடுதலை 2 – விமர்சனம்
நடிப்பு: விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன் மற்றும் பலர்
திரைக்கதை & இயக்கம்: வெற்றி மாறன்
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்
படத்தொகுப்பு: ஆர்.ராமர்
இசை: இளையராஜா
தயாரிப்பு: ஆர் எஸ் இன்ஃபொடைன்மெண்ட் & கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி
தயாரிப்பாளர்: எல்ரெட் குமார் & வெற்றி மாறன்
வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, யுவராஜ்
‘பீரியட் கிரைம் திரில்லர்’ ஜானரில் உருவாகி, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியாகி, விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘விடுதலை’. இந்த மாபெரும் வெற்றி திரைத்துறையினர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பார்ட் 2’ என்ற பெயரில் தற்போது உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
1980களில், அருமபுரியில், கனிமவளக் கொள்ளைக்குத் தோதாக பன்னாட்டு நிறுவனத்தின் சுரங்கத்தைக் கொண்டுவர முனைகிறது தமிழ்நாடு அரசு. அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அதை எதிர்த்துப் போராடிய ’தமிழக மக்கள் படையினர்’ ரயில் தண்டவாள பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்கள். இந்த குற்றச்சாட்டின் பேரில், எவர் கண்ணிலும் படாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்துவரும் ‘தமிழக மக்கள் படை’யின் தலைவரான பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி), போலீஸ் பணியில் புதிதாகச் சேர்ந்த கடைநிலை கான்ஸ்டபிளான குமரேசன் (சூரி) பல இன்னல்களைத் தாண்டி, பெரும்பாடு பட்டு, கைது செய்கிறார் என்பதோடு ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் முடிவடைந்தது.
கைது செய்யப்பட்ட பெருமாள் வாத்தியார், காட்டுக்குள் இருக்கும் போலீஸ் முகாமில் நிர்வாணம் ஆக்கப்பட்டு, அடித்து சித்ரவதை செய்யப்பட்டு, டிஎஸ்பி சுனில் மேனன் (கௌதம் வாசுதேவ் மேனன்), போலீஸ் முகாம் அதிகாரி ராகவேந்தர் (சேத்தன்) ஆகியோரால் விசாரணை செய்யப்படுகிறார் என்பதுடன் ‘விடுதலை பார்ட் 2’ ஆரம்பமாகிறது.
விசாரணைக்குப் பின் பெருமாள் வாத்தியாரை காட்டுக்குள் இருக்கும் வேறொரு முகாமுக்கு இடமாற்றம் செய்ய போலீஸ் தீர்மானிக்கிறது. அங்கு வாகனம் செல்ல வசதி இல்லாததால், போலீஸ் அதிகாரி ராகவேந்தர் தலைமையிலான ஒரு போலீஸ் படை பெருமாள் வாத்தியாரை கரடுமுரடான காட்டுப் பாதையில் நடந்தே கூட்டிச் செல்கிறது. போலீஸ் ஜீப் டிரைவராக பணியாற்றியுள்ள கான்ஸ்டபிள் குமரேசன் காட்டுப் பாதையை ஓரளவு அறிந்தவர் என்பதால், பெருமாள் வாத்தியாரை அழைத்துச் செல்லும் போலீஸ் படையுடன் அவரையும் உடன் அனுப்புகிறார்கள்.
காட்டுப் பாதையில் நடந்து போகும்போது, வழி நெடுக தன் வாழ்க்கைக் கதையை போலீசாரிடம் சொல்லிக்கொண்டே போகிறார் பெருமாள் வாத்தியார். ஆரம்பத்தில் சட்டத்தை மதிக்கும் பள்ளி ஆசிரியராக இருந்ததை… பண்ணையார்கள் தங்கள் பண்ணையடிமைகளையும் அந்த அடிமைகளின் மனைவிமார்களையும் கொடூரமாக நடத்துவது கண்டு கொதித்ததை… பண்ணையார்கள் மற்றும் ஆலை முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக களமாடும் கே.கே-யினால் (கிஷோர்) ஈர்க்கப்பட்டு, அவர் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து வர்க்கப் போராட்டம் நடத்தியதை… காதல் மனைவி மகாலட்சுமி (மஞ்சு வாரியர்) தன் வாழ்க்கைக்குள் வந்ததை… கட்சியோடு முரண்பட்டு நக்சல்பாரிகளின் ‘அழித்தொழிப்பு பாதை’யில் சென்றதை… மொழி, இனம், நிலம் காக்க இடதுசாரி தமிழ் தேசியத்துக்கென தனி இயக்கம் தோற்றுவித்ததை… அரசு எந்திரத்தின் ஆயுதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ‘தமிழக மக்கள் படை’ என்ற ஆயுதக் குழுவை உருவாக்கியதை… ரயில் தண்டவாள தகர்ப்பு விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை… இப்படி சகலத்தையும் விவரித்தபடி நடந்து போகிறார் பெருமாள் வாத்தியார்.
திட்டமிட்டபடி பெருமாள் வாத்தியாரை வேறு முகாமுக்கு கொண்டுபோய் சேர்த்தார்களா, இல்லையா? வழியில் அவர் தப்பிச்செல்ல முயன்றாரா, இல்லையா? அவருக்கு நேர்ந்த முடிவு என்ன? பெருமாள் வாத்தியாரின் கதையை கேட்டுக்கொண்டே வந்த கான்ஸ்டபிள் குமரேசன் இறுதியில் என்ன முடிவு எடுத்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு இதயத்தை ஈரமாக்கும் வகையில் உருக்கமாக விடை அளிக்கிறது ‘விடுதலை பார்ட் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
புரட்சிகரக் குழுவின் தலைவராக, போராளியாக, பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். எளிய மனிதர்களின் வாழ்வியலை திரையில் துல்லியமாக கடத்தும் விஜய் சேதுபதி, பெருமாள் வாத்தியார் கேரக்டரில் தன்னை மிக அழகாக பொருத்திக்கொண்டு பண்ணும் திரை சாகசம் அருமை. படம் முழுவதையும் தன் தோளில் தூக்கி சுமந்துள்ளார். தொழிலாளியாக ஓங்கி குரல் கொடுப்பது, காதலியிடம் பட்டும் படாமல் காதலை சொல்வது, தோழர்கள் மடியும்போது தணலில் இட்ட புழுவாய் துடிப்பது, பொதுவுடைமையின் சித்தாந்தத்தை புரியும் விதமாக பாடம் எடுப்பது என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சாட்டையடி. வாழ்நாளெல்லாம் நினைத்து மகிழத் தக்க கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். பாராட்டுகள்.
கான்ஸ்டபிள் குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். முதல் பாகத்தினைப் போல அதிக திரை நேரம் இல்லாவிட்டாலும், “புரியலங்கையா, தெரியலிங்கய்யா” என்று பார்வையாளர்களின் பக்கம் நின்று சாமானிய மனிதனாகவே கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். இறுதி காட்சி நடிப்புக்கான கைதட்டல்களில் திரையரங்கம் அதிருகிறது.
ஆலை முதலாளியின் மகளாக, புரட்சிகர பெண்மணியாக, பெருமாள் வாத்தியாரின் காதல் மனைவி மகாலட்சுமியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். நேர்த்தியான நடிப்பால் மனதில் நிறைகிறார். அவருக்கும் பெருமாள் வாத்தியாருக்குமான காதலும், இல்லற வாழ்வும் கவிதை. எதற்கும் கலங்காத அவர், கணவரின் நிரந்தரப் பிரிவை தாங்க முடியாமல் அழும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.கே-வாக கிஷோர் நடித்திருக்கிறார். சாதாரண பள்ளிக்கூட வாத்தியாராக இருந்த பெருமாளுக்கு இடதுசாரி சித்தாந்தத்தை போதித்து, அவரை தன்னலம் இல்லா தலைவராக உருவாக்கும் பொறுப்புள்ள கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நெற்குவியலுக்குள் இருந்து அவரை சடலமாக எடுக்கும் காட்சி, பார்வையாளர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
பண்ணை அடிமைத்தனத்திலிருந்து திமிறியெழும் கருப்பன் பாத்திரத்தில் கென் கருணாஸ் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தானொரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதை நிரூபித்திருக்கிறார்.
டிஎஸ்பி சுனில் மேனனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன், போலீஸ் முகாம் அதிகாரி ராகவேந்தராக வரும் சேத்தன், சப்-இன்ஸ்பெக்டர் அமுதனாக வரும் தமிழ், மற்றும் அருள்தாஸ், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் ஆகிய அனைவரும் எதிர்மறை கதாபாத்திரங்களில் எகிறி அடித்துள்ளார்கள்.
பொதுப்பணித்துறை அமைச்சராக வௌம் இளவரசு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக வரும் ராஜீவ் மேனன், அருமபுரி மாவட்ட கலெக்டராக வரும் சரவண சுப்பையா, வக்கீலாக வரும் பாலாஜி சக்திவேல், வங்காள நக்சலைட்டாக வரும் அனுராக் காஷ்யப் ஆகிய அனைவரும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்கள்.
இளையராஜாவின் இசையில் ‘தெனம் தெனமும் உன் நெனப்பு’, ‘மனசுல மனசுல’, ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ ஆகிய பாடல்கள் அருமை. பின்னணி இசையில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் இளையராஜா.
கரும்பு ஆலை, நெல் வயல்கள், அடர்ந்த காடு, பனி படர்ந்த மலைகள் என கதைக்களத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறது வேல்ராஜ் காமிரா.
உழைக்கும் வர்க்கம் எப்படி வஞ்சிக்கப்படுகிறது, நியாயத்துக்காக போராடியவர்களின் தியாகம், போராளிகள் பக்கம் உள்ள நியாயத்தை அரசாங்கம் எப்படி மாற்றி எழுதுகிறது என ஒவ்வொரு அம்சங்களையும் நுணுக்கமாக அலசி அதை பிரசார மேடையாக மாற்றாமல் வெகுஜன சினிமாவாக கொடுத்து மீண்டும் தன் ஆளுமையை நிரூபித்துள்ளார் இயக்குநர் வெற்றி மாறன். போலீசும், அரசியல் அதிகார வர்க்கமும் சேர்ந்து நடத்தும் வன்முறைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு கம்யூனிச இயக்கம் என்ன செய்தது, திராவிட இயக்கம் என்ன செய்தது என நாக்கில் நரம்பில்லாமல் ஏகடம் பேசுவோரை செருப்பால் செமத்தியாக அடித்திருக்கிறார் வெற்றி மாறன். சாதியை ‘குடி’ என பசப்பி வலதுசாரி தமிழ் தேசியம் பேசும் சீமானியர்களின் நெற்றிப் பொட்டில் அறைவது போல், ‘சாதி ஒழிப்பு இல்லாமல் தமிழ் தேசிய இன விடுதலை இல்லை’ என்ற இடதுசாரி தமிழ் தேசியத்தை உரக்கச் சொல்லியிருக்கிறார். மார்க்சியத்தோடு பெரியாரியத்தையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
ஒரு சித்தாந்தத்தை ஒரு மனிதரின் வாழ்வின் வழியே புனைவுக்கதையாக சொல்லியிருக்கும் வெற்றி மாறன் மற்றும் அவரது படக்குழுவினருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள். அவர்களது கடும் உழைப்புக்கு நம் செவ்வணக்கம்.
‘விடுதலை 2’ – தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த ஒரு மைல் கல். அவசியம் பார்த்து மகிழுங்கள்.