”அம்பேத்கர் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்போம்’’: அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்!
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின்போது மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது ஏழு பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என பேசினார்.
இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அமித்ஷா பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
“யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்…அம்பேத்கர்… அம்பேத்கர்…அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.