கடும் எதிர்ப்புக்கு உள்ளான ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த வழிசெய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை சட்டமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவரும் இந்த திட்டத்தை ஆதரித்து வந்தவருமான ராம்நாத் கோவிந்த் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்த நிலையில், திட்டத்திற்கான ஒப்புதலை ஒன்றிய அமைச்சரவையும் அளித்துவிட்டது. இதனிடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கும், இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சூழலில் நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சியினர் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை உருவாக்க ஒன்றிய அரசு விரும்புவதால் விரிவான விவாதத்திற்காக இந்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த முக்கிய சட்ட மசோதா குறைந்தது 6 அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்களை உள்ளடக்கியது என்பதும் அவற்றை நிறைவேற்ற இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறை அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.