சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் நிதி!
சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சம் நிதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சம் நிதயுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல்வரின் ஆணையின்படி, 2023-ம் ஆண்டு ரூ. 85 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வரும் 12 முதல் 19-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 85 லட்சத்துக்கான காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகத்திடம் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறைகூடுதல் இயக்குநர்கள் மு.பா.அன்புச் சோழன், எஸ்.செல்வராஜ், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன் மற்றும் துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.