மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை முன்னவர் துரைமுருகன், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், “மதுரையில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அப்பகுதியையும், அப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒப்பந்த வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக முதல்வர் பிரதமரிடம் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார்.
இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து அரசின் தனித்தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து விவாதம் செய்தனர். பின்னர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அது இன்றே ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.