விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு!

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார். திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள விசிகவுக்கு ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

ஆதவ் அர்ஜுனாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் திருமாவளவன் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் உடன் மேடையை பகிர்ந்து கொண்டு திமுக அரசை ‘மன்னராட்சி’ என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.

இது திமுகவினரை கடும் கொந்தளிப்படைய செய்தது. இதன் காரணமாக ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று விசிகவுக்கு வெளியேயும், உள்ளேயும் கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து உயர் நிலைக்குழு கூடி முடிவெடுத்து முறைப்படி அறிவிப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி வந்தார்.

இரு நாள்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை 12.30 மணிக்கு சந்தித்து வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் கொடுக்க உள்ளதாக 11.30 மணியளவில் திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். அப்போதும் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என செய்தியாளர்கள் கேட்டனர். பிரஸ் மீட்டில் தெரிவிக்க வேண்டிய விஷயம் அல்ல, முறைப்படி நாங்கள் தெரிவிப்போம் என்று கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த ஓரிரு நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்து திருமாவளவன் உத்தரவு பிறப்பித்திருக்கும் தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.