ஃபேமிலி படம் – விமர்சனம்

நடிப்பு: உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்‌ஷா கயரோஹணம், ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார், மோகனசுந்தரம், அரவிந்த் ஜானகிராமன், ஆர்ஜே பிரியங்கா, சந்தோஷ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: செல்வ குமார் திருமாறன்

ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்

படத்தொகுப்பு: சுதர்சன்

பாடலிசை: அனிவீ

பின்னணி இசை: அஜீஷ்

தயாரிப்பு: கே.பாலாஜி

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

அப்பா தவகுமார் (சந்தோஷ்), அம்மா விஜி (ஸ்ரீஜா ரவி), அண்ணன்கள் சரத்குமார் (விவேக் பிரசன்னா), பார்த்தி (பார்த்திபன் குமார்), தாத்தா ஏழுமலை (மோகனசுந்தரம்) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நாயகன் தமிழ் (உதய் கார்த்திக்), திரைப்பட இயக்குநராகும் இலட்சியத்துடன் இருக்கிறார். ஒரு திரைக்கதையை எழுதி எடுத்துக்கொண்டு, தனக்கு வாய்ப்பு தரக்கூடிய ஒரு தயாரிப்பாளரைத் தேடி, சினிமா கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார்.

முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிய, ஒரு கட்டத்தில் ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு தர முன் வருகிறார். அவரது தம்பி ’மாஸ் ஹீரோ’ என்பதால் தம்பியின் கால்ஷீட் கிடைக்கிறது. கதையை தயாரிப்பாளர் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, படம் இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழ் கையெழுத்திடுகிறார். மகிழ்ச்சியுடன் படவேலைகளைத் தொடங்குகையில், ‘ஹீரோவுக்கு கதை பிடித்திருக்கிறது, இயக்குநரைப் பிடிக்கவில்லை’ என்கிறார் தயாரிப்பாளர். அதனால் ’கதையை கொடுத்துவிட்டுப் போ, நான் இயக்கிக் கொள்கிறேன்’ என்கிறார். அதிர்ச்சி அடையும் தமிழ், வேறு வழி இல்லாமல், கதையைப் பறிகொடுத்துவிட்டு வேதனையுடன் வெளியேறுகிறார்.

இலட்சியம் கலைந்த கவலையில் தமிழ் இருப்பதைக் கண்டு துயருற்று, அவரது குடும்பம் மொத்தமும் சேர்ந்து தயாரிப்பாளர்களாக பணம் புரட்டிப் போட்டு, தமிழ் இயக்கும் படத்தைத் தயாரிக்க களத்தில் இறங்குகிறது. அவர்களின் தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? தமிழ் திரைப்பட இயக்குநராக ஆனாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு கொஞ்சம் கலகலப்பாகவும், கொஞ்சம் நெகிழ்ச்சியாகவும் விடை சொல்கிறது ‘ஃபேமிலி படம்’ திரைப்படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட உதவி இயக்குநர் தமிழாக உதய் கார்த்திக் நடித்திருக்கிறார். ’டைனோசர்ஸ்’ படத்தில் தனது அதிரடி நடிப்பால் கவனம் ஈர்த்த உதய் கார்த்திக், இதில் உதவி இயக்குநர்கள் உயருவதற்கு படும் பாட்டையும், அனுபவிக்கும் வலியையும், ஏமாற்றத்தின் வேதனையையும் மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் மூத்த அண்ணனாக, வழக்கறிஞர் சரத்குமாராக விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார். இளைய அண்ணனாக, ஐடி துறையில் பணிபுரியும் பார்த்தியாக பார்த்திபன் குமார் நடித்திருக்கிறார். இந்த இரண்டு அண்ணன்களும் தம்பிக்கு நம்பிக்கை அளித்து பக்க பலமாக இருக்கும் குணநலன்களில் உயர்ந்து நிற்கிறார்கள்.

நாயகனின் காதலி யமுனாவாக சுபிக்‌ஷா கயரோஹணம் நடித்திருக்கிறார். மதுரையில் இருந்துகொண்டு நாயகனை இன்ஸ்டாவில் காதலிப்பது, வேலையை காதலுக்காக சென்னைக்கு இடமாற்றம் செய்வது, காதலர் இயக்கும் திரைப்படத் தயாரிப்பு செலவுக்கு தனது நகைகளை அடகு வைத்து பணம் கொடுப்பது என நெகிழ்ச்சியூட்டும் நடிப்பு மூலம் நம் இதயங்களில் இடம் பிடித்து விடுகிறார்.

நாயகனின் அம்மா விஜியாக வரும் ஸ்ரீஜா ரவி, அப்பா தவகுமாராக வரும் சந்தோஷ், தாத்தா ஏழுமலையாக வரும் மோகனசுந்தரம் ஆகியோர் கூட்டுக்குடும்பத்தின் இயல்புகளையும், அதன் மேன்மைகளையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சினிமா உதவி இயக்குநர்கள் பற்றிய கதைகளை திரையில் ஏற்கெனவே பார்த்திருந்தாலும், தம்பியின் சினிமா கனவை நனவாக்க அண்ணன்கள் உட்பட ஒரு குடும்பமே களமிறங்கும் கதை புதிது தான். மேலும், ஏற்கெனவே பார்த்து சலித்த காட்சிகள் எதுவும் இல்லாமல் சுவாரஸ்யமான கதை சொல்லல் கவர்கிறது.

முதலில் எழுந்திருப்பவர்கள் தான், வீட்டில் உள்ள அனைவருக்கும் டீ போட வேண்டும் என்கிற குடும்ப ‘ரூல்’, அண்ணன் தம்பிகளுக்கு இடையே நிலவும் சின்னச் சின்னச் சண்டைகள், தம்பியின் லட்சியத்துக்காக ஒன்று சேரும் பாசம், மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு கொடுக்கும் மரியாதை, இன்ஸ்டா நட்பில் தொடங்கும் யதார்த்தமான காதல் என இப்படியொரு குடும்பம் நமக்கும் கிடைக்காதா? என ஏங்க வைத்து விடுகிறார் இயக்குநர் செல்வ குமார் திருமாறன்.
ரத்தம், வெட்டுக்குத்து, வன்முறை என ஏதுமின்றி சுகமான சினிமா அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் அனிவீயின் பாடலிசையும், அஜீஷின் பின்னணி இசையும் கதையை அழகாக நகர்த்த உதவியிருக்கின்றன. சுதர்சனின் படத்தொகுப்பு கூர்மை.

‘ஃபேமிலி படம்’ – குடும்பம் குடும்பமாய் போய் பார்த்து ரசிக்கலாம்!