லைன் மேன் – விமர்சனம்

நடிப்பு: ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், சார்லி, விநாயகராஜ், அருண் பிரசாத், தமிழ், அதிதி பாலன் (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

இயக்கம்: எம்.உதய்குமார்

இசை: தீபக் நந்தகுமார்

ஒளிப்பதிவு: விஷ்ணு கே.ராஜா

படத்தொகுப்பு: சிவராஜ்

தயாரிப்பு: சூர்யநாராயணா

ஓடிடி தளம்; ஆஹா

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள உப்பளம் மின் மையத்தில் மின் வாரிய ஊழியராக – லைன் மேனாக – பணியாற்றி வருகிறார் சுப்பையா (சார்லி). அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி). தாயில்லாப் பிள்ளை. என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள அவர், சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்கு தானாக எரிவது போலவும், சூரிய ஒளி வந்ததும் தானாக அணைவது போலவும் ஒரு தானியங்கி கருவியை உருவாக்குகிறார். தனது கண்டுபிடிப்பை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அவரது எண்ணம்.  இந்த அங்கீகாரம் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவும், தமிழக முதல்வரைச் சந்திக்கவும் போராடுகிறார். அவருக்கு செல்லும் இடம் எல்லாம் தோல்வி மட்டுமே கிடைக்க, துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுகிறார். ஆனால், முதலாளிகள் மூலமாக அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்கிறது. அந்த சதிகளில் இருந்து தப்பித்து தனது முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘லைன் மேன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் செந்திலாக புதுமுகம் ஜெகன் பாலாஜி நடித்திருக்கிறார். அவர் திரைக்குப் புதியவர் என்றாலும், சோகம் ததும்பும் முகத்துடன் இக்கதாபாத்திரத்துக்கு முழுமையாகப் பொருந்திப் போகிறார். தனது நடிப்பின் மூலம் கதை வெளிப்படுத்தும் வலியை  நேர்த்தியாக பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

நாயகனின் தந்தையாக, மின் வாரிய ஊழியராக சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் சார்லி நடித்திருக்கிறார். அவர் எந்த குணச்சித்திர வேடம் ஏற்றாலும், தனது அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதற்கு உயிர் கொடுப்பார் என்பது நாம் அறிந்தது தான். அதேபோல இந்தப் படத்திலும் நடிப்பாலும், உடல் மொழியாலும் அசலான கிராமத்துத் தந்தையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், உப்பளத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை பிரதிபலித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் அதிதி பாலனின் வருகை படத்திற்கு கூடுதல் பலம்.

விநாயகராஜ், அருண் பிரசாத், நச்சு ஆலைக்கு எதிராகப் போராடும் தமிழ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை, உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இயக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் உதய்குமார்.

உப்பள வாழ்க்கை, உப்பு வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் வீடுகள், கனவுகள் கொண்ட தோழிகள், தந்தையே தாயுமாக இருக்கும் நாயகனின் வீடு, கண்டுபிடிப்பாளனை ’பைத்தியக்காரன்’ எனக் கூறும் ஊர், வில்லனத்தனம் கொண்ட பெருமுதலாளி, அவனது கையாள், பேச்சுத் திறனற்ற டீ கடைக்காரர் என தொடரும் காட்சிகள் ஒரு நாவலுக்குள் செல்லும் உணர்வை இயல்பாகத் தருகின்றன.

ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தாலும் எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருப்பதற்காகவே இயக்கு நரையும், அவரது குழுவையும் பாராட்டலாம்.

காதல் காட்சிகளைக் கூட கட்டிப்பிடித்தல், டூயட் என்கிற வழக்கத்துக்குள் செல்லாமல் சின்னப் பார்வை அதன் வழி நீளும் ஏக்கம் என அதன் போக்கில் காட்டியிருப்பதும் மிகையற்ற கிளைமாக்ஸும் சிறப்பு. தூத்துக்குடி பேச்சு வழக்கையும் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவு, தீபக் நந்தகுமாரின் இசை, சிவராஜின் படத்தொகுப்பு காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

‘லைன் மேன்’ – உணர்வுபூர்வமாக கண்டு களிக்கலாம்!