நிறங்கள் மூன்று – விமர்சனம்

நடிப்பு: அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், அம்மு அபிராமி, ஜான் விஜய், சின்னி ஜெயந்த், சந்தானபாரதி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கார்த்திக் நரேன்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: டிஜோ டாமி

படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்

தயாரிப்பு: ‘ஐங்கரன் இண்டர்நேஷனல்’ கே.கருணாமூர்த்தி

பத்திரிகை தொடர்பு: டைமண்ட் பாபு & சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

‘நிறங்கள் மூன்று’ என்பது அருமையான தலைப்பு; நல்ல நாவலுக்கான தலைப்பு. இதனுடன் ‘மனிதர்களின்’ என்ற சொல்லை சேர்த்துக்கொண்டால் ‘மனிதர்களின் நிறங்கள் மூன்று’ என்று வரும். இது தான் உலகெங்கிலும் உள்ள கோட்பாடு. நல்லவர்கள், தீயவர்கள், நல்லதும் தீயதும் கலந்தவர்கள் என மனிதர்கள் மூன்று விதமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை ஆய்வுக்கு உட்படுத்தும் திரைப்படம் தான் ’நிறங்கள் மூன்று’.

பள்ளி மாணவர் ஸ்ரீ (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்), தனது பெற்றோர் தன்னுடைய விருப்பங்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் மீது கோபமாக இருப்பதோடு, தனது பள்ளி ஆசிரியரான வசந்தை (ரகுமான்) நாயகனாகப் பார்க்கிறார். அவர் ஆசிரியர் வசந்தின் மகளும் பள்ளி மாணவியுமான பார்வதியை (அம்மு அபிராமி) ஒருதலையாகக் காதலிக்கிறார். ஒருநாள் பார்வதி திடீரென காணாமல் போகிறார். அவரை ஆசிரியர் வசந்தும், மாணவர் ஸ்ரீயும் தேடி அலைகிறார்கள். பார்வதி கிடைக்காததால் காவல் நிலையம் செல்லும் ஆசிரியர் வசந்த், தன் மகள் காணாமல் போனது குறித்து காவல் ஆய்வாளர் செல்வத்திடம் (சரத்குமார்) புகார் அளிக்கிறார்.

காவல் ஆய்வாளர் செல்வத்தின் மகன் வெற்றி (அதர்வா முரளி). திரைப்பட இயக்குநராகும் கனவில் இருக்கும் அவர், தன் தந்தை செல்வத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தனியாக வசித்து வருகிறார். தன்னுடைய கதையைத் திருடி பிரபல இயக்குநர் கிஷோர் (ஜான் விஜய்) திரைப்படம் இயக்குவதை அறிந்து வெற்றி கொதிக்கிறார். ஆனால், அது தனது கதை என்பதை நிரூபிக்கத் தேவையான ‘ஸ்க்ரிப்ட் காப்பி’ தொலைந்துவிட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில், போதைக்கு அடிமையாகி தன்னுணர்வின்றி கற்பனை உலகில் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்.

வெற்றியின் தந்தையும் துணிச்சல் மிகுந்த காவல் ஆய்வாளருமான செல்வம்,  அமைச்சரின் (சந்தான பாரதி) மகன்களைக் கைது செய்ததால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்.

பார்வதிக்கு என்ன ஆனது? வெற்றியின் ’ஸ்க்ரிப்ட் காப்பி’ கிடைத்ததா? அமைச்சர் ஏற்படுத்தும் சிக்கல்களை செல்வம் சமாளித்தாரா? இந்த கதாபாத்திரங்களும், அவர்களது பிரச்னைகளும் ஓர் இரவில் சந்தித்துக் கொள்ளும்போது வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும் என்ன? என்கிற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் மீதிக் கதை.

துடிப்பான பள்ளி மாணவர் ஸ்ரீயாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ் நடித்திருக்கிறார். பெற்றோர் மீது கோபம், ஆசிரியர் மீது அபிமானம், சக மாணவி மீது ஒருதலைக் காதல், அவரை காணோம் என்றவுடன் காட்டும் பதட்டம் என சகல உணர்ச்சிகளையும் மிகையில்லாமல் அளவாக, யதார்த்தமாக வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.

போதையிலும், அதன் மூலம் உருவாகும் கற்பனை உலகத்திலும் சுழலும் இளைஞர் வெற்றியாக அதர்வா முரளி நடித்திருக்கிறார். சர்ச்சைக்கு உரிய வேடமாக இருந்தாலும் அதை சரியாக கையாண்டிருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மிடுக்காக வந்து கவருகிறார்.

பதற்றம், குற்றவுணர்வு என மாறி மாறி பயணிக்கும் ஆசிரியர் வசந்த் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ரகுமான். மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், தனது மற்றொரு நிறத்தின் மூலம் அதிர்ச்சியளித்தாலும், சமூகத்தில் நடக்கும் இத்தகைய அவலங்களுக்கான பின்னணி பற்றி யோசிக்க வைக்கிறார்.

சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிப்பது புதிதல்ல என்றாலும், காக்கி உடை அணிந்து அவர் ஏற்றிருக்கும் தந்தை கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள அசால்டான, அதே சமயம் முதிர்ச்சியான நடிப்பும் கைதட்டல் பெறுகிறது. அவரது துணிவும் கிண்டலும் ரசிக்க வைக்கிறது.

பார்வதியாக வரும் அம்மு அபிராமி, முன்னணி இயக்குநர் கிஷோராக வரும் ஜான் விஜய், அமைச்சராக வரும் சந்தானபாரதி, டீக்கடை நடத்தும் சக்கரையாக வரும் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்கள்.

‘துருவங்கள் 16’ திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் வெற்றியால் புகழடைந்த கார்த்திக்  நரேன் இந்த ’நிறங்கள் மூன்று’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் மூன்று சம்பவங்களை எடுத்துக்கொண்டு, அவற்றை ’நான்-லீனர்’ முறையில் திரைக்கதை அமைத்து, யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இதைப் படைத்தளித்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். நல்லவர்கள் போல் தோன்றுபவர்களிடம் தீய குணங்களும், தீயவர்கள் போல் தோன்றுபவர்களிடம் நல்ல குணங்களும் இருக்கலாம் என்ற கிளைமாக்ஸ் ரசிக்கும்படியாக இருக்கிறது.

ஜேக்ஸ் பிஜாயின் இசை, டிஜோ டாமியின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு போன்ற நேர்த்தியான தொழில்நுட்பங்கள் அனைத்தும் கதையை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கின்றன.

’நிறங்கள் மூன்று’ – நமக்குத் தெரிந்தவர்களை சரியாகப் புரிந்துகொள்ள உதவும் திரைப்படம்; அவசியம் பார்த்து மகிழுங்கள்.